சேலம்: காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு
1 min read
Salem: 4 college students drowned in Cauvery river
13.4.2023
சேலம் – எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த 4 மாணவர்கள், கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாணவர்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பி.ஏ தமிழ் 3-ம் ஆண்டு படிக்கும் 10 மாணவர்கள் இன்று காலை கல்வடங்கம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவாக இருப்பதால், குளிக்க ஆற்றின் நடுப்பகுதிக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது, ஒரு மாணவர் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டுள்ளார். இவரை மீட்க சக மாணவர்கள் உதவி செய்யும் போது, 4 மாணவர்கள் தண்ணீரில் சிக்கி மூழ்கியுள்ளனர்.
இதனைப் பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டனர். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒடி வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், எடப்பாடி தீயணைப்பு துறையினர், தேவூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நீச்சல் தெரியாததால் இளம்பிள்ளையைச் சேர்ந்த மணிகண்டன் (20), கன்னந்தேரியே சேர்ந்த மணிகண்டன் (20), எருமபட்டியை சேர்ந்த முத்துசாமி (20) மற்றும் எடடிகுட்டமேட்டை சேர்ந்த பாண்டியராஜன் (20) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. நீரில் மூழ்கிய 4 மாணவர்களை தேடும் பணியில் எடப்பாடி தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எருமபட்டியை சேர்ந்த முத்துசாமி (20), இளம்பிள்ளையைச் சேர்ந்த மணிகண்டன் (20) ஆகியோரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும், 2 பேரின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேட்டூர் ஆர்டிஓ தணிக்காசலம், சங்ககரி டிஎஸ்பி ஆரோக்கியராஜ், சங்ககரி தாசில்தார் பானுமதி, எடப்பாடி தாசில்தார் லெனின் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நிதியுதவி
இந்நிலையில், காவிரி ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.