தமிழகத்தில் 45 இடங்களில் திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி
1 min read
Allowed to hold RSS rally in 45 places in Tamil Nadu
13.4.2023
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பேரணி
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை நான்குபுறமும் சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடத்த, நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் .10-ந் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த பிப்ரவரி 12, 19, மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் அனுமதி வழங்கக் கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் காவல்துறையில் மீண்டும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அனுமதி
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி செல்ல அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் திறந்த வெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது.