June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ்

1 min read

Apology in 48 hours: RS Bharati notice to Annamalai

16.4.2023
திமுகவினர் சொத்துப் பட்டியலை வெளியிட்ட பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்றும், தனது ரபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் என்றும் சில தகவல்களை www.enmannenmakkal.com என்ற இணையதளத்தில் அண்ணாமலை வெளியிட்டார்.
இதன்படி, திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டார்.

இதில், ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219.37 கோடி, எ.வ.வேலுவுக்கு ரூ.5,552.39 கோடி, கே.என்.நேருவுக்கு ரூ.2,495.14 கோடி, கனிமொழிக்கு ரூ.830.33 கோடி, கலாநிதி மாறனுக்கு ரூ.12,450 கோடி, டி.ஆர்.பாலு ரூ.10,841.10 கோடி, கதிர் ஆனந்த்க்கு ரூ.579.58 கோடி, கலாநிதி வீராசாமிக்கு ரூ.2,923.29 கோடி, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணிக்கு ரூ.581.20 கோடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ரூ.1,023.22 கோடி, உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2,039 கோடி மற்றும் சபரீசனுக்கு ரூ.902.46 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

நோட்டீஸ்

இந்நிலையில், திமுக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் மீது அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் மே மாதம் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் அயராது உழைத்து, தமிழக மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, தற்போது திராவிட மாடல் ஆட்சியில் சிறந்து விளங்கி நாட்டின் சிறந்த முதல்வர்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

கற்பனை குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தல் களத்தில் நீங்களும் உங்கள் கட்சியும் முத்திரை பதிக்க முடியாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்தவும் அவதூறு செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறீர்கள். ‘DMK Files’ என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் திமுக கட்சி மீது பல தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தீர்கள்.

திமுகவின் சில சொத்துகளின் மதிப்பை உயர்த்தி, தொடர்பில்லாத சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலம் திமுக கட்சிக்கு மொத்தம் ரூ.1408.94 கோடி சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் திமுகவின் சொத்துகள் மற்றும் கடன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அத்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும்.
திமுகவினருக்குச் சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ. 3474.18 கோடி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மதிப்பு ரூ. 34,184.71 கோடி என்பது பொய்யானது. ஒருவர் திமுகவின் உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது. ஒரு தனிநபரின் சொத்துகளுக்கும் அரசியல் கட்சியின் சொத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களிடம் 3-4 ஆடுகள் இருப்பதாக அடிக்கடி கூறுவதால், இந்த ஆடுகள் பாஜகவின் சொத்தாக மாறுமா? அல்லது உங்கள் ரஃபேல் கைக்கடிகாரம் பாஜகவின் சொத்தாக மாறுமா?

2018ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022ம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு நிதியாக வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மொத்த மதிப்பு 9,208 கோடி ரூபாய் என ஊடகங்கள் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் 5,270 கோடி ரூபாய் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே சென்றுள்ளது. இவை முறைகேடான வழியில் பெறப்பட்டவை என்று கூற முடியுமா?

ஆதாரமற்ற…

தமிழக முதல்வர் பணமோசடியில் ஈடுபடவே துபாய்க்குச் சென்றார் என முற்றிலும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நீங்கள் அதில் கூறியது போல நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை.
மேலும், 2006-11 ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ இரயில் முதற்கட்டப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஒரு நிறுவனத்துக்காக அளிப்பதற்காக 200 கோடி ரூபாய் பெற்றார் எனவும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இந்தத் திட்டத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுகவும் தொடர்ந்தது என்பதுடன், அன்றைய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த வெங்கைய நாயுடு, அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தொடங்கிவைத்தார்.

இதன் விரிவாக்கத்தையும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தற்போது இரண்டாம் கட்டப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு அதே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உங்கள் கூட்டணிக் கட்சியான அதிமுகவும் பிரதமர் நரேந்திர மோடியும் ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

அந்த வீடியோவில், மக்களுடைய பணத்தை ஒப்பற்ற அளவில் திமுக கொள்ளையடித்துள்ளது என்றும், அது ராபர்ட் கிளைவை விட அதிகமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகைய கருத்துக்கள் ஆதாரமற்றவை. திமுக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது, திமுகவின் இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒவ்வொருவரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதற்கு சமம். இதனால் அமைப்புச் செயலாளர் என்ற முறையில், உங்கள் மீது அவதூறுக்காக தகுந்த வழக்குத் தொடர உரிமை உண்டு.

மன்னிப்பு கேட்க வேண்டும்

எனவே, திமுக மற்றும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பாக நான் கூறிக்கொள்வது எல்லாம், உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் விடியோவை நீக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 500,00,00,000 (ரூபாய் ஐந்நூறு கோடிகள் மட்டும்) எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *