சிவகிரியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
1 min read
Police arrested five people for selling ganja in Sivagiri.
17.8.2026
சிவகிரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புளியங்குடி டிஎஸ்பி நமசிவாயத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி எஸ்பி அசோக்குமார் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் சிவகிரி இன்ஸ் பெக்டர் ஆர்தர் ஜெஸ்டின் சாமுவேல்ராஜ், சப்இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சிவகிரி ஊருக்கு மேற்கே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சிலர் கஞ்சா விற்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சிவகிரி காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவகிரி நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற மலிங்கான் (24), சிவராமலிங்கபுரம் பள்ளிக் கூடத்தெருவைச் சேர்ந்த காளீஸ்வரன் (20), இந்திரா 2 வயது தெருவை சேர்ந்த சிவக்குமார் (24), தெற்குரத வீதியை சேர்ந்த நித்திஷ் பாபு (19), தேவிபட்டணம் வடக்குத்தெருவை சேர்ந்த சுந்தரலிங்கம் (22) ஆகியோர் என்பதும், அவர்கள் ரூ.6500 மதிப்பிலான 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. மணிகண்டன் என்ற மலிங்கான் ராஜபாளையம் பஸ்நிலையத்தில் கஞ்சா சப்ளையரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மற்ற 4 பேருக்கும் விற்பனை செய்ய பிரித்து கொடுத்ததும், கஞ்சா விற்பனைக்கு இடையூறு செய்பவர்களை வெட்டுவதற்காக 2 அரிவாள்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்திஷ்பாபு, சுந்தரலிங்கம், மணிகண்டன் (எ) மலிங்கான், காளீஸ்வரன், சிவகுமார் ஆகிய 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, 2 அரிவாள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 பேரையும் சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெனிபர் ஜோஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.