அண்ணாமலைக்கு பணம் கொடுப்பவர்கள் பற்றி விசாரணை நடத்த கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
1 min read
KS Alagiri urged to investigate those who give money to Annamalai
16.4.2023
பாஜக அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
கே.எஸ்.அழகிரி
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக தலைவர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், திமுக எம்பிக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் சொத்து பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பயன்படுத்தி வரும் கைக்கடிகாரம், தனக்கு வந்து சேர்ந்த விவரம், தனது வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளை தனது நண்பர்கள் ஏற்பதாகவும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
எனது 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கிறேன். நான், சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் ரூ.16 ஆயிரம் வாடகைக்கு குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்.
நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் ரூபாய் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? 3 லட்ச ரூபாய் கை கடிகாரம் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.