புதிய வகை கொரோனா 10 நாளில் உச்சம் தொடும்; குறைந்த பாதிப்புடன் சில மாதங்கள் நீடிக்கும்
1 min read
The new type of corona will peak in 10 days; Lasts a few months with minimal damage
16/4/2023
புதிய வகை கொரோனா 10 நாளில் உச்சம் தொடும் எனவும் குறைந்த பாதிப்புடன் சில மாதங்கள் நீடிக்கும் எனவும் மருத்துவ ஆய்வு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கொரோனாவின் புது வடிவம்
. கடந்த சில தினங்களாக எக்ஸ்.பி.பி.1.16 வைரஸ் பரவல் கணிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் வீரியம் குறைந்து ஒழிந்து விட்டதாக நிறைய பேர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கொரோனா வைரஸ் புது புது வடிவங்களில் நம்மை சுற்றிதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. 2019-ம் ஆண்டு இறுதியில் புயலை கிளப்பிய கொரோனா வைரஸ் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகை ஒரு கலக்கு கலக்கிய பிறகு உருமாறத் தொடங்கியது. காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று அது தொடர்ந்து உருமாறியது. இதன் காரணமாக முதலில் ஒரு அலை உருவானது. பிறகு டெல்டா பிளஸ் மூலம் 2-வது மோசமான அலை உருவானது.
இந்த 2-வது அலையில்தான் நிறைய பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. அதன்பிறகு 2021-ம் ஆண்டு கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வடிவத்துக்கு மாறியது. அதன் பிறகுதான் கொரோனா வைரஸ் ஆட்டம் முடிவுக்கு வரத் தொடங்கியது. ஆற்றல் குறைந்த ஒமைக்ரான் வைரஸ் அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் உருமாறத் தொடங்கியது.
இதுவரை சர்வதேச ஆய்வுகளில் ஒமைக்ரான் பரிசோதிக்கப்பட்டபோது 1,200-க்கும் மேற்பட்ட உருமாற்றம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் எக்ஸ்.பி.பி.1.16 என்ற உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்தான் சற்று ஆட்டம் காட்டியது.
மக்கள் அச்சம்
தற்போது இந்தியா முழுக்க பரவி இருப்பது இந்த வைரஸ்தான். கடந்த ஜனவரி மாதம் இந்த வைரஸ் இந்தியா முழுக்க பரவத் தொடங்கியது. டெல்டா பிளஸ் போல எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ்கள் மிகப்பெரிய பாதிப்பையும், பின் விளைவுகளையும் ஏற்படுத்தி விடுமோ என்று முதலில் மக்கள் மனதில் அச்ச அலைகள் உருவானது.
இது தொடர்பாக அடுத்தடுத்து ஆய்வுகள் செய்யப்பட்டபோது அதனுடைய தன்மை தெரியவந்தது. இதுவரை உருமாறிய வைரஸ்களில் எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ்தான் மிக மிக வேகமாக பரவும் ஆற்றல் கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் மீண்டும் மக்களிடம் சற்று பயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எக்ஸ்.பி.பி.1.16 வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை உலக சுகாதார வல்லுனர்கள் உறுதிபடுத்தி அறிவித்தனர். இதுதான் சர்வதேச அளவில் ஆறுதலான விஷயமாக மாறியது.
அறிகுறி
இந்த நிலையில் இந்த உட்பிரிவு வைரஸ் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் வேகம் காட்டத் தொடங்கியது. இதன் அறிகுறிகள் தொடர்பாகவும் மாறுபட்ட கருத்துகள் வெளியானது. கடுமையான காய்ச்சல், இருமல், உடல்வலி, தலைவலி, சளி தொல்லை போன்றவை இதன் அறிகுறிகளாக கூறப்பட்டன. ஆனால் இந்த வைரஸ் பாதித்த அனைவருக்கும் மிக மிக மிதமான தொற்று பாதிப்பே காணப்பட்டது.
2 நாளில் குணமாகும்
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் மேலும் சில ஆறுதலான தகவல்கள் கிடைத்தன. மிக மிக மிதமான இந்த வைரஸ் பாதிப்பு 2 நாளிலேயே குணமாகி விடும் என்பதுதான் அந்த தகவல் ஆகும். இதை உறுதிபடுத்துவது போல நாடு முழுவதும் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்து ஓரிரு நாட்களில் குணமானதை பார்க்க முடிந்தது.
கடந்த சில தினங்களாக எக்ஸ்.பி.பி.1.16 வைரஸ் பரவல் கணிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பு தற்போது சுமார் 12 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது. இது சுமார் 50 ஆயிரம் என்ற அளவிற்கு கூட தினசரி பாதிப்பாக உயரும் என்று சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் இதில் மாறுபட்டுள்ளனர். மே மாதம் புதிய வகை கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என்று அவர்கள் கணித்துள்ளனர். அந்த வகையில் இன்னும் சுமார் 10 நாட்களில் புதிய வகை கொரோனா வைரஸ் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதன்பிறகு எக்ஸ்.பி.பி.1.16 வைரஸ் தாக்கம் இந்தியாவில் குறையும் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். சில மாதங்கள் வீரியம் குறைந்து நீடிக்கலாம். அதன் பிறகு இந்த வைரசின் வீரியம் மேலும் குறையும் என்கிறார்கள்.
தற்போது கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது லட்சமாக உயர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் எக்ஸ்.பி.பி.1.16 வைரஸ் தாக்கம் மிகவும் சாதாரணமானது. வந்து எட்டி பார்த்துவிட்டு செல்லும் தன்மை கொண்டது.
ஆனால் சில குறிப்பிட்ட நோய் இருப்பவர்கள் இந்த வைரஸ் தங்களை அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே முக்கியமானது. இணை நோய்கள் இருந்தால் எக்ஸ்.பி.பி.1.16 வைரஸ் சற்று வலிமை பெற்று விளையாடி விடும். மற்றவர்கள் ஓரிரு நாட்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது.
நிபுணர்கள் பார்வையில் அடுத்த 2 வாரங்கள் முக்கியமான காலகட்டங்கள் ஆகும். இந்த 2 வாரங்களும் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லும்போது சற்று கவனமாக இருந்தால் போதும். இதையும் கடந்து விடலாம். இதுவும் கடந்து போகும்.