May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை குழப்பிய முட்டைதோசை/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram Confused Egg Dosa/ Comedy Story / Tabasukumar

25.4.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் ஓட்டலில் தங்கியிருந்தபோது கால்சட்டையில் அவர் போட்டிருந்த செல்போனை குரங்கு திருடிச்செல்ல படாதபாடு பட்டு அந்த செல்போனை மீட்டார்.
அதை சுவிட்ஆப் பண்ணி பூங்கொடி தனது பெட்டியில்வைத்து பூட்டினார். நீங்க தொலைச்சிடுவீய..என்னிடமே இருக்கட்டும் என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் ம்..பதில் சொல்லாமல் விழித்தார்.
என்ன..விழிக்கிறீங்க.. பேசாம சாப்பிட்டுட்டு படுத்து தூங்குங்க.. காலையிலே பாபநாசம் போகணும்..என்று சொல்ல..கண்ணாயிரம்..சரி என்று அமர்ந்தார்.
பூங்கொடி..என்ன சோர்வு..நைட்டு என்ன சாப்பிடுறீங்க..என்று கேட்க தோசை முட்டை என்று சொல்ல தோசைமுட்டையா..அப்படி ஒண்ணும் கிடையாது..முட்டை தோசை ஆர்டர் பண்ணுறன் சாப்பிடுங்க என்றார்.
கண்ணாயிரம்…தோசை முட்டைன்னா என்ன முட்டை தோசைன்னா என்ன முன்ன பின்ன இருக்கும் நமக்கு முட்டை..தோசை கிடைச்சா சரி..என்று நினைத்தார்.
பாபநாசம் போகணுமே..குளிக்கணுமே..அங்கே குரங்கு இருக்குமோ..தெரியலையே என்று சிந்தனையில் இருந்தார்.
பூங்கொடி முட்டை தோசை நான்கு என்று இண்டர்காமில் ஆர்டர் கொடுத்தார். சிறிது நேரத்தில் ஓட்டல் ஊழியர் முட்டைதோசைகளுடன் ஹாலிங்பெல்லை அழுத்த கண்ணாயிரம் கதவை திறந்தார்.
ஓட்டல் ஊழியர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து..என்ன முட்டை தோசையா என்று கண்ணாயிரம் கேட்டார். அதற்கு அந்த ஊழியர்..ஆமா என்று தலையை ஆட்ட..கண்ணாயிரமோ..கொஞ்சம் பொறு எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்கிடுறேன். என் மனைவி பாத்ரூம் போயிருக்கா..நான்தான் சரியா இருக்கான்னு பாத்துவாங்கணும்.. பிறகு அதுசரியில்லை.. இது சரியில்லை..என்பாள் என்ற கண்ணாயிரம் ஓட்டல் ஊழியர் கொடுத்த பார்சலை பிரித்துப்பார்த்தார்.. நான்கு தோசை இருந்தது.. நாலு சரியா இருக்கா என்று நாலு முறை கண்ணாயிரம் எண்ணினார்..ஆ நாலு சரியா இருக்கு..எண்ணிக்கை சரி..என்று முடிவுக்கு வந்த கண்ணாயிரம் முட்டை நினைவுக்குவர ஓட்டல் ஊழியரைப்பார்த்து..தம்பி..இங்கே வா..தோசை இங்கே இருக்கு..முட்டையை எங்கே என்று கேட்டார்.
அதற்கு அந்த ஊழியர் தோசையை காட்டி..இதாங்க அது என்று சொன்னான்.
அதைக்கேட்ட கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது. அதை அடக்கிக்கொண்டு..தம்பி நாங்க உன்கிட்ட என்ன கேட்டோம் என்று கண்ணாயிரம் கேட்க அந்த ஊழியர்..முட்டை தோசை என்று ஊழியர் பதில்சொல்ல கண்ணாயிரம் உஷாராக.. முட்டை தோசை கேட்டோமுல்ல.. தோசை இங்கே இருக்கு.. முட்டை எங்கே..என்று கேட்டார்.
ஓட்டல் ஊழியர்..யோவ்..அதுதான்ய்யா இது என்க கண்ணாயிரம்..ஏய் எங்கிட்ட ஏமாத்தலாமுன்னு பாக்கியா.. இன்னாபாரு..தோசை இங்கிருக்கு..முட்டை எங்கிருக்கு ..சொல்லு..நல்லா பாத்து சொல்லு என்க.. ஓட்டல் ஊழியரோ.. ஓய்..தோசைக்குள்ளேத்தான் முட்டை இருக்கு என்க.. கண்ணாயிரம் ஆத்திரத்தில்.. இந்த ஏமாத்து எல்லாம் ஏங்கிட்ட வேண்டாம்.. நாங்க என்ன கேட்டோம்..முட்டை..தோசை.. அதான கேட்டோம்.. முட்டைக்குள் தோசையா கேட்டோம்..போ..போ..என்க.
ஓட்டல் ஊழியர்..ஓ என்று அழ…அங்கே என்ன சத்தம் என்றபடி பாத்ரூமுக்குள்ளிருந்து பூங்கொடி ஓடிவந்தார்.
கண்ணாயிரம் முந்திக்கொண்டு..பாரு..பூங்கொடி..நாம என்ன கேட்டோம் முட்டை தோசை..ஆனா தோசை கொண்டுவந்திருக்கான்.முட்டையை காணம்..கேட்டா தோசைக்குள் முட்டை இருக்கு என்கிறான்.. கொஞ்சம் அசந்தா..முட்டைக்குள் தோசை இருக்கு என்பான்.. ஏமாத்தப்பாக்கிறான் என்று குற்றம் சாட்டினார்.
பூங்கொடி..அந்த தோசையை வாங்கிப்பார்த்துவிட்டு.. இது முட்டை தோசைதாங்க..தம்பி..நீ போ..அவரு ஏதாவது குணடக்கமண்டக்க சொல்வார்.. போ என்க ஓட்டல் ஊழியர்..சரிதான்..குற்றாலம்வந்தும் பைத்தியம் தீரலை போலிருக்கு என்றபடி பூங்கொடியிடம் ரூபாய் வாங்கிக்கொண்டு கண்ணாயிரத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றான்.
கண்ணாயிரம் பூங்கொடியிடம்..என்ன பூங்கொடி..இப்படி ஏமாறுற..தோசைக்குள்ளே முட்டை இருக்கு என்கிறான்..எப்படி பாக்கிறது என்க..பூங்கொடி..ஏங்க உளறாதீங்க..தோசை மேல முட்டையை உடைச்சி ஊத்தி சட்டியிலெ நல்லாகாயவச்சி தந்திருக்காங்க..முட்டை தோசைன்னா இப்படித்தான் தருவாங்க போயி சாப்பிடுங்க என்றார்.
கண்ணாயிரம்..ம்..முட்டை தோசைன்னா..முட்டையை தனியா அவிச்சி உருண்டையாதர மாட்டாங்களா..அதுன்னா நாம..முட்டையை கண்ணுல பாக்க முடியும் .. இதுக்குத்தான்..நான் தோசை முட்டை வேணுமுன்னு கேட்டேன்.. அப்படி நீ கேட்டிருந்தா. முட்டை வேற தோசை வேற தனியா தந்திருப்பானுல்ல என்க.. பூங்கொடி தலையில் அடித்துக்கொண்டார்.
கண்ணாயிரம் தலையை சொரிந்து கொண்டே..தோசைக்குள்ளே முட்டையை எப்படி தேடுறது என்றபடி தோசை பிய்த்துசாப்பிடத்தொடங்கினார்.
பூங்கொடி அவரிடம்..பேசாமல் சாப்பிடுங்க முட்டை தோசை ஒருநாளும் நான் உங்களுக்கு போட்டு தராததால்..நீங்க குழம்புறீங்க..இதை சாப்பிடுங்க என்க.. சாப்பிட்டுட்டு பேசுறேன் என்று கண்ணாயிரம் முட்டை தோசையை ருசிபார்த்தார்.
-வே.தபசுக்குமார்..புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.