May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தின் காணாமல் போன துண்டு/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayira’s Missing Piece/ Comic Story/ Tabasukumar

1.5.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் ஓட்டலில் மனைவியுடன் தங்கியிருந்தார். குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடைவிதிக்கப்பட்டதையொட்டி கண்ணாயிரம் மனம்வருந்தினார்.அதனால் பாபாநாசம் சென்று அகஸ்தியர் அருவியில் குளிக்கலாம் என்று பயில்வான் சொன்னதால் கண்ணாயிரம் மகிழ்ச்சி அடைந்தார்.
நாளை காலை குற்றாலத்திலிருந்து பாபநாசம் செல்லவேண்டும் என்று பூங்கொடி சொல்லியதும் கண்ணாயிரம் துள்ளிக்குதித்தார்.முட்டை தோசை சாப்பிட்டுவிட்டு பாபாநாசம் செல்ல பெட்டி படுக்கைகளை எடுத்துவைத்தார்.
குற்றாலத்துக்கு வந்தற்கு இரண்டு வேட்டி போச்சு.. தலைக்கு வந்தது தலைப்பாயோடு போயிட்டு என்பார்கள். ஆனால் எனக்கு வேட்டியோடு போயிருக்கு.. அதுவரைக்கும் மகிழ்ச்சிதான் என்று நினைத்துக்கொண்டார். தனது சூட்கேசில் சட்டை துணிகளை அடுக்கினார். அவர் துண்டு மட்டும் கட்டியிருப்பதை பார்த்த அவர் மனைவி ஏங்க துண்டை கழற்றிபோட்டுட்டு வேட்டியை எடுத்து உடுங்க என்றார். கண்ணாயிரமோ.. இனி நைட்டுதானே.. எங்கே போகப்போறம்.. எதுக்கு வேஸ்டா வேட்டியை கட்டிக்கிட்டு.. என்ன நான் சொல்லுறது. சும்மா துண்டே இருக்கட்டும்.. இது நல்லாத்தானே இருக்கு என்றார்.
பூங்கொடி..ம்.. உங்களைவிட்டா.. நைட்டுதான லைட்டை அணைச்சிடுவோமே.. இந்த துண்டும் எதுக்கு என்று சொல்வீங்க.. என்று சொல்ல கண்ணாயிரம்.. ஆமா.. அதுவும் நல்லதுதான் என்றார்.
அதைக்கேட்ட பூங்கொடி…ம்.. உதைவிழும்..என்றார்.
உதையா என்று கண்ணாயிரம் கேட்க. ஆமாங்க..ஆவி பறந்துவரும்..நீங்க டிரஸ் இல்லாம இருந்தா காலால உதைச்சிடும்.. ஜாக்கிரதை என்று பயம் காட்டினார்.
உடனே கண்ணாயிரம்.. அது ஏன் என்று கண்ணாயிரம் மீண்டும் கேட்க..ஆவிக்கு டிரஸ்போட்டாதான் பிடிக்கும்.ஆவியே சுத்தமான வெள்ளை டிரஸ்தான் போட்டுட்டுவரும் தெரியுமா.. உங்களுக்கு. அப்படியிருக்கும்போது டிரஸ் இல்லாதவங்களை கண்டால் கையாலே ஒரே அடி..அவ்வளவுதான்..தெரியுமா என்று சொன்னார்.
அதைக்கேட்டதும் கண்ணாயிரத்துக்கு கொஞ்சம் பயம்வந்தது. ஆனால்..அவரது பகுத்தறிவு வேலை செய்தது. பூங்கொடி.. கொஞ்சம் நம்ம அறிவை யூஸ்பண்ணி யோசித்துப்பாக்கணும்.
நாமதான் கதவு ஜன்னல் எல்லாம் பூட்டியிருவோமே.. அப்பம் எப்படி ஆவி உள்ளே நுழைய முடியும்..என்று கேட்டார்.
உடனே பூங்கொடி..எல்லோரும் அப்படித்தான் சொல்வாங்க..அதான் சொன்னேன் என்று சொல்ல..யார் சொன்னாலும் நம்பிடுறதா..ஆறாம் அறிவு எதற்கு இருக்கு சிந்திக்கணும்.. நல்லா சிந்திக்கணும் என்று சொன்னார்.
சரி..சரி..உங்கக்கிட்ட வாதாடமுடியாது.. உங்க பொருட்களை எல்லாம் சரியா எடுத்துவையுங்க.. பிறகு அதை காணம்..இதைக்காணமுன்னு சொல்லக்கூடாது என்று சொன்னார்.
கண்ணாயிரமும்..ம்..ம்..பூங்கொடி.உன் ஹேர்பின்..பொட்டு..ஊக்கு..இதையெல்லாம் மறந்துவிட்டுட்டு வந்திடாத..பின்ன ஒரு மாசத்துக்கு அதையே சொல்லிக்கிட்டு இருப்பே என்று மடக்கினார்.
பூங்கொடி..ம்ம்..அதை நான் பாத்துக்கிறேன் என்க..கண்ணாயிரம்..கட்டிலுக்கு அடியில் இருந்த பக்கெட்டைப் பார்த்தார். என்ன தண்ணி அப்படியேத்தான் இருக்கு..எப்பவத்தும்.. எப்போ தாமிரத்தை பார்க்கிறது.. ஒரு வேளை ஒரு மாசம் ஆகணுமோ..என்னமோ ..பொறுத்திருந்து பார்ப்போம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டார்.

பூங்கொடியும் முட்டை தோசைகளை சாப்பிட்டுவிட்டு..ஏங்க.தோசையிலே முட்டையே இல்லங்க என்று குற்றம்சாட்ட.. கண்ணாயிரம்..ஏய் இதைத்தான் நான் அப்பவே சொன்னேன்..முட்டையே இல்லைன்னு நீதான் கேட்கமாட்டேன்னுட்டா என்று சொல்ல. பூங்கொடியோ..ஏங்க. தோசையிலே.முட்டை அதிகமா இல்லங்கிற பொருளிலே முட்டையே இல்லங்கன்னு சொன்னேன்..மற்றபடி முட்டையில்லைன்னு சொல்லலை என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரத்துக்கு தலை சுற்றியது. முட்டையே இல்லங்கிறதுக்கும் முட்டை இல்லங்கிறதுக்கும் வேறு வேறு பொருளா.. நம்ம அறிவுக்கு இது புலப்படமாட்டேங்குதே என்று வருத்தப்பட்டார்.
பூங்கொடி அதைப்பார்த்து.. ஏங்க கண்டதையும் சிந்திக்காதீங்க..மூளை குழம்பி போகும் என்று சொன்னார்.
அதுவும் சரிதான்..நமக்கு மூளை இருக்கிங்கிறதை பூங்கொடி ஓத்துக்கிட்டா..அதுவே பெரிசு என்றபடி சூட்கேசில் துணிகளை அடுக்கினார். பின்னர் சூட்கேசை மூடமுயன்றார். முடியவில்லை. என்ன வரும்போது.. எல்லா துணியையும் வச்சுதானே பூட்டினோம்.. இப்போ ஏன் பூட்டமாட்டேங்குது.. வேற யாரு துணியும் உள்ளே வந்துட்டா.. இல்லையே நம்ம இரண்டு வேட்டிதான் போச்சு. அப்படின்னா துணி குறையத்தானே செஞ்சிருக்கு..பிறகு ஏன் பூட்டமாட்டேங்குது..என்று யோசித்தார்.ம்.. சூட்கேஸ்மேல உட்கார்ந்து அழுத்தினா பூட்டியிரும் என்று நினைத்தபடி சூட்கேஸ்மேல ஏறி உட்கார்ந்து..ம்.ம்.ம் என்றார்.
சூட்கேஸ் மூடவில்லை. சூட்கேசிலிருந்து துணி பிதுங்கிக்கொண்டு வெளியே தெரிந்தது. கண்ணாயிரம் சூட்கேசை மூட சிரமப்படுவதைப்பார்த்த பூங்கொடி ஏங்க..சூட்கேசை உடைச்சிடாதீங்க..கீழே இறங்குங்க என்று அதட்டினார்.
கண்ணாயிரம்..ம்.பாரு..பூங்கொடி வரும்போது பூட்டின சூட்கேஸ்..இப்பம் பூட்டமாட்டேங்குது..என்று குற்றம் சாட்டினார்.
பூங்கொடி..நீங்க சரியா பூட்டியிருக்க மாட்டிய..கொடுங்கஎன்றார்.
கண்ணாயிரம் சூட்கேசை பூங்கொடியிடம் கொடுக்க..அவர் சூட்கேசை திறந்துபார்த்தார்.வேட்டி சட்டையெல்லாம் சரியா மடிக்காம சூட்கேஸ்வெளியே துணி தொங்கிக் கொண்டிருந்தது.
ஏங்க..துணியை நல்லா மடிச்சி.. சரியா அடுக்கவேண்டாமா..அப்படியே அள்ளி உள்ளேப்போட்டிருக்கீங்க.. பிறகு எப்படி பூட்டும் என்றபடி பெட்டியிலிருந்த வேட்டி சட்டை பனியனையெல்லாம் வெளியே எடுத்துவைத்து அழகாக மடக்கி ஒவ்வொன்றாக சூட்கேசில் அடுக்கினார்.
பின்னர் சூட்கேசைமூடினார்.
மூடிக்கொண்டது. கண்ணாயிரம்..அதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். பூங்கொடி..உன் கைப்பட்டாதான் எல்லாம் சரியாகுது..என்று சிரித்த கண்ணாயிரத்திடம் கையாலே இரண்டு போடு போடட்டுமா என்று பூங்கொடி கேட்க..கண்ணாயிரம் அது மட்டும் வேண்டாம் என்றார்.
பூங்கொடி..ம்..அந்த பயம் இருக்கணும் என்றபடி தனது டிரெங்பெட்டியில் துணிகளை அடுக்கினார்.
அப்போது பெட்டியில் பத்துரூபாய் காயின் இருப்பதைப்பார்த்தார். ஆமா..இது வேற இருக்குது..எங்கேயாவது மாத்தணும் என்று யோசித்தவர் கண்ணாயிரம்..போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருப்பதையும் பார்த்தார். ம்..இது சுவிட்ஆப்பிலே இருக்கட்டும். இதிலே பேசி என்னசெய்யப்போறார் என்று நினைத்தார். கண்ணாயிரத்தை பார்த்து..என்ன யோசிக்கிறீங்க படுங்க என்று சத்தம் போட்டார். கண்ணாயிரம் இடுப்பில் துண்டை கட்டியபடி கட்டிலில் படுத்தார்.
பூங்கொடி.ம்..தூங்குங்க..நான் டிரங்பெட்டியில் எல்லாத்தையும் எடுத்துவச்சிட்டு தூங்கிறேன் என்றபடி டிரெங்பெட்டியில் எல்லாவற்றையும் வைத்து பூட்டினார்.
அப்பாட..ரொம்ப அலுப்பா இருக்கு..காலையிலே சீக்கிரம் எழும்பணும்..என்றபடி பூங்கொடி எழுந்து விளக்கை அணைத்துவிட்டு படுத்து தூங்கினார்.
கண்ணாயிரமும்..குறட்டை விட்டபடி..உருண்டு புரண்டு படுத்தார்.அவருக்கு பஸ்சில் போவது போல் ஒரு கனவுவர..ம்..மெதுவா போப்பா ..எங்கேயாவது இடிச்சிடப்போகுற என்றவாறு காலை ஆட்டிக்கொண்டே தூங்கினார்…
அதிகாலை 5மணி இருக்கும்..ஹாலிங்பெல்லை பயில்வான் அழுத்தினார். பூங்கொடி எழ முயன்றார்.. முடியவில்லை. அவர் கால் பிடித்துக்கொண்டது. எனவே..கண்ணாயிரத்தை எழுப்பி கதவை திறக்கச்சொல்லலாம் என்று நினைத்து..ஏங்க..எழும்புங்க..ஹாலிங்பெல் அடிக்குது கதவை திறங்க என்று சத்தம் போட்டார். பாதி தூக்கத்தில் இருந்த கண்ணாயிரம்..என்ன கதவை திறக்கணுமா என்றபடி..எழுந்தார்.
அவர் இடுப்பில் துண்டை காணவில்லை. எங்கே போச்சு..கட்டிலில் தேடினார். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. எங்கேடா போச்சு..என்று கட்டிலுக்கு அடியில் இருட்டில் தேடினார். எதுவும் சிக்கவில்லை. எங்கே போச்சு..உடம்பிலே துணியே இல்லாம எப்படிப்போயி கதவை திறக்கிறது என்று கண்ணாயிரம் மனசுக்குள் புலம்ப.. இதை அறியாத பூங்கொடி..ஏங்க..என்னால எழும்ப முடியல்லன்னுதான்..உங்களை சொன்னேன்.. ஏன் நீங்கள் எழும்புறதுக்கு இவ்வளவு நேரம் ஆகுது..எழும்புங்க என்று கத்த கண்ணாயிரம்.. பூங்கொடி.. கோபப்படாதே.. என் இடுப்பிலிருந்த துண்டை காணோம்.. நீ பாத்தியா இடுப்பிலே துண்டு இல்லாம நான் எப்படிபோயி கதவை திறக்கமுடியும் என்று கேட்க.. பூங்கொடி கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
ஹாலிங்பெல் அடித்துக்கொண்டே இருந்தது.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.