May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

போர்வையால் கண்ணாயிரத்துக்கு வந்த சிக்கல்/நகைச்சுவை கதை/தபசுகுமார்

1 min read

Trouble that came to Kannayira with a blanket/Comedy story/Tapaskumar

6.5.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் ஓட்டலில் தங்கியிருந்தபோது வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு இரவில் கட்டிலில் படுத்திருந்தார்.அவர் மனைவி பூங்கொடி போர்வையை விரித்து கீழே தரையில் படுத்து தூங்கினார்.அதிகாலை 5 மணியளவில் பயில்வான் வந்து ஹாலிங்பெல்லை அழுத்தியபோது பூங்கொடி எழமுயன்றார்.
ஆனால் கால்பிடித்துக்கொண்டதால் அவர் எழமுடியாமல் தவிக்க கண்ணாயிரத்தை எழுந்து கதவை திறக்கும்படி பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் அவசரமாக எழுந்தார். ஆனால் இடுப்பில் கட்டியிருந்த துண்டை காணாமல் இருட்டில் தவித்த நிலையில் பூங்கொடியைப்பார்த்து என் துண்டைக்காணம்..வெறும் உடம்போட ஏப்படிப்போய் கதவை திறக்கிறது என்று சொல்ல.. பூங்கொடியோ இருட்டாத்தானே இருக்கு..சும்மா கதவை திறந்து கதவுக்கு பின்னால நின்னுக்கிட்டு என்னன்னு கேளுங்க என்றார்.
கண்ணாயிரமோ..ம்..ஹாலிங்பெல்லை அழுத்துறவர் கதவைத் திறந்ததும் உள்ளேவந்துட்டா என்னப்பண்ணுறது..ஷேம்..ஷேம்..பக்கி ஷேமாகிடுமே..என்றார்.
அதைக்கேட்ட பூங்கொடி ம்..உங்களோட பெரிய பிரச்சினையா இருக்கு..என்ன செய்ய..துண்டை எங்கே தொலைச்சிய..இன்னாங்க போர்வை..இதை கட்டிக்கிட்டுப்போயி கதவை திறங்க என்று போர்வையை கண்ணாயிரத்தை நோக்கி வீசினார்.
கண்ணாயிரமும் போர்வையை பிடித்து இடுப்பில் கட்டிக்கொண்டு மெல்ல..மெல்ல நடந்து கதவைத்திறந்தார்.
வெளியே நின்ற பயில்வான்…என்ன..கண்ணாயிரம் கதவைத் திறக்க இவ்வளவு நேரம்..வெளியே வாங்க..வெளியே வாங்க என்று அழைக்க..கண்ணாயிரம் வெட்கத்துடன் தயங்கி தயங்கி வெளியே வந்தார். அவர் இடுப்பில் போர்வையை கட்டியிருப்பதைப் பார்த்த பயில்வான்.. என்ன கண்ணாயிரம் அவசரத்திலே வேட்டிக்குப் பதிலாக போர்வையை கட்டியிருக்க.. என்ன ஆச்சு..என்று கேலியாக சிரித்தார்.
கண்ணாயிரம்..அது..அது..அது என்று இழுக்க..பயில்வான்..ம் எனக்கு புரியுது.. வயசானாலும் ஆசை போகாதுல்லா என்று சொல்ல கண்ணாயிரம் அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு…ஆ..அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல…துண்டைக்காணம்.. அதான் என்க.. பயில்வானோ..ம்..நான் இந்த நேரம் வந்து கதவை தட்டியிருக்கக்கூடாது.. ஏன் லைட்டை போடலை.. என்க கண்ணாயிரம்.. அது..அது..அது.. அவசரத்திலே என்க.. பயில்வான்..ம் புரியுது..புரியுது… பூங்கொடியை எங்கே என்று கேட்க..அவா..எழும்பமுடியல…கால் பிடிச்சிக்கிட்டு…கால் பிடிச்சிக்கிட்டு என்று கண்ணாயிரம் பதில் சொன்னார்.
உடனே பயில்வான் மெல்ல சிரித்தபடி..ம்..கண்ணாயிரம் நீ பயங்கரமான ஆளுய்யா…குற்றால டூரை நல்லா அனுபவிக்கிங்க என்றபடி..சரி.சரி..பாபநாசத்துக்கு நாம காலையிலே கிளம்பி போகணும்..அப்போதான் வெயிலுக்கு முன்னாலே பாபநாசம் போயி அகஸ்தியர் அருவியிலே குளிக்கமுடியும்.. ஐந்தரை மணிக்கு பஸ் கிளம்பிடும்..எல்லோரும் ரெடியாயிட்டாங்க.. சீக்கிரம்..நல்லா குளிச்சிட்டு ரெடியாக..போ..போ..என்று நமட்டு சிரிப்பு சிரித்தபடி அங்கிருந்து சென்றார்.

நாமதான் அருவியிலே குளிக்கப்போறோமே..பிறகு எதுக்கு நல்லா குளிச்சிட்டு கிழம்ப சோல்லுறார்..ஒண்ணும் புரியலையே என்று கண்ணாயிரம் கதவை பூட்டிவிட்டு போர்வையை தூக்கிக்கட்டியபடி..பூங்கொடி..பூங்கொடி என்றபடி வந்தார்.
பூங்கொடி கோபத்துடன்..லைட்டை போடுங்க..லைட்டை போடுங்க..உங்களாலே மானம்போகுது..என்று கத்தினார்.
கண்ணாயிரம் லைட்டை போட்டுவிட்டு என்னாச்சு..பூங்கொடி என்றபடி அவர் அருகில் அமர்ந்து கால்களை அமுக்கிவிட..போங்க..போங்க.. வெளிச்சத்திலே துண்டை எங்கேன்னு தேடுங்க என்று விரட்டினார்.
கண்ணாயிரம் கட்டிலை சுற்றி தேடியவர் கட்டிலுக்கு முன்னால் துண்டு கிடப்பதைப் பார்த்து எடுத்தார். இடுப்பில் கட்டியிருந்த துண்டு.. இங்கே எப்படி வந்து விழுந்துச்சு.. ஏதோ..ஆவி வேலையாத்தான் இருக்கும் என்றவாறு பூங்கொடியிடம்..துண்டு கிடைச்சிட்டு..ஏதோ ஆவி .என் இடுப்பிலிருந்து துண்டைபறித்து கட்டிலுக்கு முன்னால போட்டிருக்கு என்று குற்றம் சாட்ட.. பூங்கொடியோ..அதெல்லாம் ஒண்ணுமில்ல..நீங்க அவ்வளவு உருண்டு உருண்டு தூங்கியிருக்கீங்க..உங்க துண்டை நீங்களே தூக்கி வீசியிருக்கீங்க என்றார்.
கண்ணாயிரம்…ம் அப்படியா..மாடு முட்டவர்ரமாதிரி கனவு கண்டேன். அப்போ வெள்ளைத்துண்டை உருவி.. சமாதானக் கொடிபோல காட்டி வீசியிருப்பேன் போலிருக்கு..எப்படியோதுண்டு கிடைச்சிட்டு என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.
பின்னர் பூங்கொடியை பார்த்து..ஏன் பூங்கொடி…நீ பயில்வான் சொன்னதை கேட்டியா..சீக்கிரம் கிளம்பணுமுன்னாரு..பாபநாசம் போயி அகத்தியர் அருவியிலே குளிக்கப் போறோம்..ஆனா இங்கே நல்லா குளிச்சிட்டு வான்னு என்னைச்சொன்னாரு.. அது ஏன்னு புரியல என்க.. பூங்கொடி அவர் காதை பிடித்து திருகி.. உங்களுக்கு ஒண்ணும் புரியாது.. வாங்க காதை கொடுங்க சொல்லுறேன் என்று கண்ணாயிரம் காதில் நாணத்துடன் அந்த ரகசியத்தை சொன்னார்.
அதைக்கேட்டதும் கண்ணாயிரத்துக்கு தூக்காவாரிப்போட்டது. இது அபாண்டம்..நான் கட்டிலே படுத்திருந்தேன்..நீ கீழே தரையில் படுத்திருந்தா..தப்பா எதுவும் நடக்கவே இல்லையே.. பிறகு எப்படி பயில்வான் அப்படி சொல்லலாம் என்று கண்ணாயிரம் எகிற… நீங்க போர்வையை கட்டிக்கொண்டு போனா அப்படித்தான் நினைப்பாங்க..இப்படியெல்லாம் பிரச்சினை வரக்கூடாதுன்னுதான் வேட்டியை கட்டிக்கிட்டு தூங்கச்சொன்னேன். நீங்க கேட்கலை. துண்டைக்கட்டிக்கிட்டு தூங்கினீய..அதையும் தொலைச்சிட்டிய.. போங்க.. நல்லா குளிச்சிட்டுவாங்க என்று பூங்கொடி சொல்ல.. கண்ணாயிரமோ.. நான்தான் தப்பு பண்ணலையே என்று சொன்னார் .ம்.. தப்புபண்ணீனிங்கன்னு நினைச்சிட்டாங்க.. நீங்க குளிச்சிதான் ஆகணும் என்று பூங்கொடி விரட்ட கண்ணாயிரமோ..அதிகாலையிலே குளிருமே.. எப்படி குளிக்கிறது என்றபடி துண்டை தோளில் தொங்கபோட்டபடி குளியல் அறைக்குள் புகுந்தார்.
பூங்கொடி அவரை முறைத்துபார்த்தபடி..சீக்கிரம் குளிச்சிட்டுவாங்க..உங்களாலே நானும் குளிக்கணும் என்க..கண்ணாயிரம்..ம் எல்லாம் இந்த துண்டால் வந்தவினை என்று துண்டை கையால் அடித்தார்.
-வே.தபசுக்குமார்.புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.