திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது
1 min readThiruvannamalai ATM robbery mastermind arrested
4.5.2023
திருவண்ணாமலையில் பிப்ரவரி 12-ம் தேதி 4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.72 லட்சம் கொள்ளை போனது. இதுகுறித்து தனிப்படை போலீசார் அரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
ஏ.டி.எம். கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம கும்பல் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கர்நாடகா, அரியானா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் கொள்ளையில் தொடர்புடைய அரியானாவை சேர்ந்த தஸ்லிம்கான் (வயது 35) என்பவரை கைது செய்தனர். இவர் கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்க சென்ற போது அவர்கள் பயன்படுத்திய காரை ஓட்டியவர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டான். அரியானா – ராஜஸ்தான் எல்லையில் ஆரவல்லி மலைப்பகுதியில் ஆசீப் ஜாவேத் என்பவரை தமிழக போலீசார் கைது செய்தனர்.