தோரணமலையில் குழந்தைகள் கொண்டாட்டம்
1 min read
Children’s celebration at Thoranamalai
15.5.2023
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில், இறைபணியோடு சமுதாய பணிகளும் நடந்து வருகிறது.
தற்போது கோவில் நிர்வாகம் சார்பில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம்((7-5.2023) பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கோலி, பம்பரம், சில்லாங்குச்சி, பலூன் உடைத்தல், கராத்தே சாகசம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதை கண்டு கொண்டிருந்த பெரியோர்களும் ஆவல் மிகுதியால் சிறு பிள்ளைகள் போல் விளையாட ஆரம்பித்துவிட்டனர். பலர் தங்கள் மலரும் நினைவுககளை பகிர்ந்து கொண்டனர்.

அதேபோல் இந்த ஞாயிற்றுக்கிழமையும்(14ந்தேதி) மாணவ, மாணவிகளின் தனித்திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தங்களது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியுடன் வருகை தந்த மாணவ, மாணவியர் அவர்களுக்காக தயார் செய்திருந்த மேடையில் ஏறி, தாங்கள் விரும்பிய பாடல் பாடுதல், கதை, கட்டுரை சொல்லுதல், நடனம், ஆன்மி்க சொற்பொழிவு ஆற்றினர். தாங்கள் படித்த பள்ளிகளில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் தாங்கள் பங்கேற்ற நிகழ்வுகளையும் இங்கே செய்து காட்டினர்.
சென்னை நீதிமன்ற நீதியரசர் சிவாஜி செல்லையா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இன்பசேகரன், மதுரை நாடார் மகாஜன சங்க செயற்குழு உறுப்பினர் ஆதிமூலம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்து பேசினர். திரைப்படங்கள், சின்னத்திரையில் நடித்து வரும் கீழப்பாவூரைச் சேர்ந்த நடிகரும், இயக்குனருமான பாரதிகண்ணன் என்ற கலிவரதகண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவியருக்கு பல்வேறு அறிவுரைகளை எடுத்துக்கூறியதுடன், பள்ளிகளில் ஆசிரியர்கள்கல்வியுடன், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும் எனக்கூறினார்.
நிகழ்ச்சியில் தனித்திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாணவ, மாணவிகள் பயனுள்ளதாக விடுமுறைகளை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது வரும் வாரங்களில் கல்லூரி் மாணவ-மாணவிகள், பெண்கள், பெரியோர்கள் கலந்து கொள்ளும் நி்கழ்ச்சி்கள் நடைபெறும் என்றும் அவர் சொன்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் காலையில் சிற்றுண்டி, மதியம் சாப்பாடு வழங்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை கடைசி வெள்ளியை யொட்டி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.