ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
1 min readAnti-corruption department raided Rameswaram Fisheries Department office
24.5.2023
ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையின் போது கணக்கில் வராத ரூ.55,400 சிக்கியது. மீன்பிடி தடைக்கால கட்டத்தில் சீரமைப்பு பணி நிறைவடைந்த விசைப்படகுகளின் உறுதி தன்மை, படகு உரிமம், பதிவெண் ஆகியன குறித்து ஆய்வு செய்து தகுதி சான்று வழங்க ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் நேற்று முன் தினம் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் உரிமம் ரத்து செய்த படகுகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு உரிமம் வழங்கியுள்ளதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் உள்ளிட்ட போலீசார் ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் கணக்கில் வராத ரூ.55,400 ரொக்கம், விசைப்படகுகளின் போலி உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும் கணக்கில் வராத பணம் தொடர்பாக 4 பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பட விளக்கம்: ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்