தோரணமலையில் வைகாசி விசாக திருவிழா-ஞாயிற்றுக்கிழமை கிரிவலம்
1 min read
Vaikasi Visakha Festival at Thoranamalai
2.6.2023
தோரணமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா கொண்டாடப்பட்டது.
தோரணமலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமையான வரலாற்று சிறப்புமிக்க தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில்.
அகத்தியர்,தேரையர் போன்ற சித்தர்களால் மருத்துவ ஆராய்ச்சி செய்த வஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் . இந்த ஆண்டின் வைகாசி விசாகத் திருவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலை மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

மலை சுனையில் இருந்து பக்தர்களால் எடுத்துவரப்பட்ட புனித நீரால் அடிவாரத்தில் உள்ள உற்சவர் முருகன், வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பின் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.
இதனைத் தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர், சரஸ்வதி, கிருஷ்ணர், நவக்கிரங்களுக்கும், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனைகள் நடத்தப்பட்டு முருகபக்தர்கள் பஜனை குழு சார்பில் முருகக் கோஷம் பஜனை பாடப்பட்டது.
வைகாசி விசாகத் திருவிழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு காலையில் சிற்றுண்டியும் மதியம் சாப்பாடும் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செண்பகராமன் மற்றும் முருக பக்தர்கள் பஜனை குழுவினர் செய்திருந்தனர்.
கிரிவலம்
வழக்கமாக வைகாசி விசாகமும் பவுர்ணமியும் ஒன்றாக வரும். ஆனால் இந்த ஆண்டும் ஒரு நாள் பின்னால் வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் பவுர்ணமி இருப்பதால் அன்று காலையில்தான் தோரணமலையில் வைகாசி மாதத்திற்கான கிரிவலம் நடைபெறும்.