June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ஓடிசா ரயில் விபத்தில் உயிர் தப்பிய ஆலங்குளம் மத போதகர் பரபரப்பு பேட்டி

1 min read

Alankulam religious preacher who survived the Odisha train accident gave a sensational interview

4.6.2023
ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி ஊர்வந்து சேர்ந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த மதபோதகர் ரமேஷ் விபத்து பற்றி பேட்டி அளித்தார்.

ரெயில் விபத்து

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தப்பளகுண்டு தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவர் ஜார்கண்டில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது மூன்று ரயில்கள் மோதிய விபத்தின் போது 275 பேர் பலியானார்கள். சுமார் 1000 பேர் படு தாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து உயிர் தப்பிய ரமேஷ் தனது சொந்த ஊரான ஆலங்குளம் வந்து சேர்ந்தார்.
அப்போது ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியது எப்படி என்பது குறித்து மதபோதகர் ரமேஷ் பரபரப்பாக பேட்டியளித்தார்.
விபத்து குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதபோதகர்

எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஆகும். நான் குடும்பத்துடன் ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வருகிறேன். மதபோதகராக இருக்கும் நான் ஊருக்கு வருவதற்காக கோரமண்டல் எக்ஸ்பிரசில் இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டியில் பயணித்தேன். அதன்படி வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் திடீரென பலத்த சத்தத்துடன் ரயில் பெட்டி குலுங்கியது. இதனால் பெட்டியில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் கீழே விழுந்தோம். ரயில் தடம் புரண்டது தெரியவந்தது. ரயில் பெட்டி தீ பிடித்து விடுமோ என்ற அச்சத்தில் ரயில் பெட்டியில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினோம்.

அப்போதுதான் தெரியவந்தது நான் இருந்த பெட்டிக்கு முன்னர் இருந்த பெட்டிகள் அனைத்தும் விபத்தில் சிக்கி 3வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் மீது மோதி அந்த ரயில் பெட்டிகளும் விபத்துக்குள்ள்ளாது. அந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் அப்பளம் போல் நொறுங்கி இருந்தது எனவே அதில் இருந்த பயணிகள் யாரும் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை புரிந்து கொண்டோம்.
மேலும் அங்கு பயணிகள் கதறல் சத்தம் கேட்டது. பயணிகளின் மரண ஓலத்தால் நாங்கள் அச்சத்துடனே அங்கு நின்றோம். 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது எங்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியது.

விபத்து நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. எனவே அந்த இருட்டு நேரத்தில் அங்கு என்ன நடைபெறுகிறது என்பதே எங்களுக்கு தெரியவில்லை ஆனாலும் தொடர்ந்து மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருந்தது.

உடனே ரயில் பெட்டியில் இருந்து வெளியேறிய நாங்கள் ரயில் பெட்டியின் நெரிசலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பலரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தோம். அப்போதே 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து சடலமாக கிடப்பது எங்களுக்கு தெரிந்தது விபத்து நடைபெற்று 15 நிமிடங்களுக்குள் அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அந்தப் பகுதி பொதுமக்களும் ஏராளமானோர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் எங்களை அந்த இடத்தில் இருந்து வெளியேறும்படி கூறினார்கள். எனவே நாங்கள் வேறு வழியில்லாமல் அந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்று அங்கிருந்து பஸ் மூலம் புவனேஸ்வரம் வந்தோம்.
இதுபோன்ற விபத்தினை என் வாழ்நாளில் இதுவரை பார்த்தது இல்லை. இன்னமும் எனக்கு பதட்டமாகவே இருக்கிறது. இதுபோன்ற விபத்து நடக்கும் என கனவிலும் நினைத்தது இல்லை..

உயிர் பிழைத்தவர்கள் தனித்தனியே பயணித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த சிலர் புவனேஸ்வரம் வந்து அங்கிருந்து பஸ்மூலம் விசாகப்பட்டினம் வந்து அங்கிருந்து சென்னைக்கு வந்தனர்.
நிறைய பேர் காசு இல்லாமல் அவதிப்பட்டனர். அவர்கள் கூலி வேலை பார்ப்பவர்கள். தமிழ்நாட்டிலிருந்து அரசு அதிகாரிகள் எங்கள் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபத்து பற்றி கேட்டு அறிந்ததோடு நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா உங்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது எனவே கவலைப்படாதீர்கள் என கேட்டுக் கொண்டே இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *