திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்கள் திடீர் சாலை மறியல்
1 min read
Kriwala devotees suddenly blocked the road in Tiruvannamalai
4.6.2023
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று 2வது நாளாக கிரிவலம் வந்த பக்தர்கள், தங்களது ஊர்களுக்கு திரும்பி போதிய பேருந்துகள் இல்லாததால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிரிவலம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் சனிக்கிழமை அன்று காலை 10.57 மணிக்கு தொடங்கி இன்று காலை 9.38 மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் இன்று சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவு திரண்டனர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்லத்தொடங்கினர்.
கோடை வெயில் சுட்டெரித்ததால் பகலில் குறைந்தஅளவு வந்த பக்தர்களின் எண்ணிக்கை மாலை 4 மணிக்கு பிறகு படிப்படியாக உயர்ந்தது. இரவு முதல் விடிய விடிய 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட இந்த மாதம் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரில் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்பட்டது.
இந்நிலையில் 2வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் காலையும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அண்ணாமலையார் கோயிலிலும் தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்நிலையில் கிரிவலம் முடித்த பக்தர்கள், தங்கள் ஊர்களுக்கு திரும்ப முயன்றனர். ஆனால் போதிய அளவு பேருந்து வசதி இல்லாததால் அவதிப்பட்டனர். குறிப்பாக திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் சென்னை, புதுச்சேரி வழித்தடங்கள் பேருந்துகளுக்கான தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு பேருந்துக்காக வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அளவு பேருந்துகள் இல்லை. இதனால் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருந்த பக்தர்கள் திடீரென திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து பக்தர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியலை பக்தர்கள் கைவிட்டனர். அதேபோல் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலும் பக்தர்கள் நீண்ட நேரம் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது வந்த விழுப்புரம் ரயிலில் முண்டியடித்து ஏறினர் என்பது குறிப்பிடத்தக்கது.