கடையம் பகுதியில் கந்து வட்டி கொடுமைபற்றி ஆட்சியரிடம் பெண்கள் புகார்
1 min read
Women complained to the collector about usurpation of interest in the area
6.6.2023
தென்காசி மாவட்டம் கடையம் வட்டார பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுடன் கந்துவட்டிக் கும்பல் கொடுமையில் இருந்து தங்களை காப்பாற்ற கோரி நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :-
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் கந்து வட்டி கும்பல்கள் கடந்த சில மாதங்களாக அப்பாவி பெண்களிடம் குறைந்த வட்டிக்கு பணம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி மகளிர் சுய உதவிக் குழு என்ற போர்வையில் போலியான வாக்குறுதிகளை கொடுத்து 11 சதவீதம் வட்டி என்ற வாக்கு கொடுத்து 20 முதல் 40 சதவீதம் என்ற விகிதத்தில் வசூல் செய்து வருகின்றனர். இதை தடுக்கும் வண்ணம் தமிழக முதல்வருக்கும், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் மனு அனுப்பப்பட்டு அந்த மனுவின் மீது கடையம் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தினார். அதற்கு அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் தங்கள் நிறுவனம் கடன்வழங்க அரசு அனுமதி பெற்று இருக்கிறது என்று கூறினார்கள் . ஆனாலும் கடன் வசூல் என்ற பெயரில் பொது மக்களை மிரட்டக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள்.
மேலும் பொதுமக்கள் இதுபோன்ற கந்துவட்டி கும்பல்களிடம் வரவு செலவு வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். அதனை ஏற்றுஅந்த பகுதியில் ஏராளமான பெண்கள் அரசு அனுமதி அளித்த மகளிர் சுய உதவி குழுவில் இணைந்தனர். ஆனாலும் இன்னும் சில கந்துவட்டி கும்பல்கள் அதாவது அனுக்கிரஹா தொண்டு நிறுவனம், எல்என்டி, எஸ் எஸ் ஏ, மதுரா மைக்ரோ பைனான்ஸ், கிராம விடியல், மகா சேமம், ஆசீர்வாத் மைக்ரோ பைனான்ஸ், போன்ற பல்வேறு நிறுவனங்கள் அப்பாவி பெண்களை மிரட்டி வருகின்றனர். எனவே இது போன்று ஏழை எளிய அப்பாவி மக்களின் வாழ்வை சீரழிக்கும் கந்துவட்டி கும்பலை கண்டறிந்து நிரந்தரமாக அவர்களை தடை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவினை கடையம் வட்டார காங் மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் வந்து அளித்தனர்.