அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
1 min readNirmala Sitharaman condemns former US President Obama
26.7.2023
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒபாமா
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியும் அதிபர் ஜோ பைடனும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இந்த பேட்டிக்கு முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் பேச வேண்டும். மோடியுடன் நான் பேசியிருந்தால், இதுகுறித்து விவாதித்திருப்பேன்” என்றார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:
அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அனைவரும் முயற்சி செய்வோம் என்ற கொள்கையுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு சமுதாயத்துக்கு எதிராகவும் பாகுபாடு காட்டவில்லை” என்றார்.
கண்டனம்
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்திய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல கருத்து தெரிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது. ஆனால், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோதுதான் 6 இஸ்லாமிய நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பிரதமருக்கு 13 வெளிநாடுகள் விருது வழங்கி உள்ளன. இதில் 6 இஸ்லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.