ஈரான் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல் : கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் அபாயம்
1 min read
US launches intense attack on Iran; risk of crude oil prices rising again.
11/6/2026
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்று ஈரான் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இருப்பினும், ஹெலிகாப்டரை குறிவைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை என்று ஈரான் விளக்கம் அளித்தது.
ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதால் கோபம் அடைந்த டிரம்ப், ஈரானுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.அதன்படி, தெற்கு ஈரானில் உள்ள குவாஷெம் தீவு, ஜாஸ்க், சிரிக், பந்தார் அப்பாஸ் உள்ளிட்ட பல பகுதிகளை குறிவைத்து அமெரிக்க கடற்படை நேற்று தீவிர தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலால் ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் கட்டமைப்புகள் சேதமடைந்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை அறிவித்தது. இந்த தகவலை பஹ்ரைன் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து கப்பல்களின் போக்குவரத்துக்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் உயர்மட்ட கூட்டு ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதோடு, ஹார்முஸ் நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்தக் கப்பலாக இருந்தாலும் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று காலை முதல் ஈரான் மீது அமெரிக்கா இரண்டாவது கட்ட வான் வழி தாக்குதல்களை நடத்தியது. மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 2 டாலர் உயர்வுடன் முடிவடைந்தது.பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 1.65 டாலர் அல்லது 1.8 சதவீதம் உயர்ந்து 93.10 டாலராக முடிந்தது. அதேபோல், அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 1.83 டாலர் அல்லது 2 சதவீதம் உயர்ந்து 90.03 டாலராக நிலைபெற்றது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது