October 12, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பதவி பறிப்பு: புதிய பொறுப்பாளர் நியமனம்

1 min read

Tenkasi South District DMK Secretary Sivapadmanathan sacked: New in-charge appointed

26.7.2023
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக பணியாற்றி வந்த சிவபத்மநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவ பத்மநாபன்

தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வரும் பொ.சிவபத்மநாதன் அவர்களை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக, சுரண்டை நகர செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலன் தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
காரணம் என்ன?

சிவபத்மநாதனின் கட்சி பதவி பறிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பதவியில் இருந்து மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே கட்சி பணிகளை மிகவும் தீவிரமாக செய்ததன் காரணமாக தலைமைக் கழகத்தில் சிவபத்மநாதனின் பெயர் ஓங்கியது. பின்பு தி.மு.க. கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தலில் அவர் தெற்கு மாவட்ட செயலாளராக வெற்றி பெற்று பொறுப்பேற்றார்.
இருப்பினும் தி.மு.க.வில் இருந்த பழைய நிர்வாகிகள் அனைவரையும் ஒன்றிணைக்காமல் தனது ஆதரவாளர்களை புதிய நிர்வாகிகளாகவும், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வந்ததாக புகார் எழுந்தது. இதனால் தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள் இடையே உட்கட்சி பூசல் பெரிதும் தலை தூக்கியது.

ஆபாச படங்கள்

கீழப்பாவூரை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி குறித்து ஆபாச படங்கள் மற்றும் வார்த்தைகளை வெளியிட்டதாகவும், அந்த நிர்வாகி சிவபத்மநாதனின் முழு நேர ஆதரவாளராக செயல்பட்டதால் அவரை கண்டிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் சிவபத்மநாதனின் மீது அதிருப்தியில் இருந்து வந்தனர்.

கடந்த வாரம் மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றபோது மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கும் அளவிற்கு சென்றது.
இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மணிப்பூர் கலவரம் குறித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது தகராறு ஏற்பட்டது. மேடையில் வைத்தே மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி தனக்கே தி.மு.க.வில் பாதுகாப்பு இல்லை. மணிப்பூர் கலவரம் குறித்து பேசுவதற்கு என்ன உரிமை உள்ளது என கேள்வி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்த தலைமைக்கழகம் உடனடியாக சிவபத்மநாதனை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.