கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை- “உடல் உறுப்புகளை தானம் செய்து விடுங்கள்” என கடிதம்
1 min read
Kalpakkam nuclear power plant employee suicide- “donate body organs” letter
11.8.2023
திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடல் நலம்குன்றிய ஏழைகளுக்கு தனது உடல் உறுப்புகளை தானம் செய்து விடுங்கள் என்று அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அணுமின்நிலைய ஊழியர்
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் வேணு, இவரது மகன் கோபிநாத்(வயது28). இவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள அறிவியல் (விஞ்ஞானம்) உதவியாளராக சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டு உள்ளதால் தனது பெற்றோருடன் தங்கி கோபிநாத் தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கோபிநாத்துக்கும் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. அதற்கான நாள் குறிக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க உள்ள நிலையில் நிச்சயதார்த்த அழைப்பிதழ் வைப்பதற்காக கோபிநாத்தின் பெற்றோர்கள் சென்னையில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
தற்கொலை
இந்நிலையில் கோபிநாத் நிச்சயதார்த்த அழைப்பிதழ் வைப்பற்காக சென்னை சென்றுள்ள தனது பெற்றோரிடம் சினிமாவிற்கு செல்வதாக செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, ரஜினிகாந்த் நடித்து வெளியாகி உள்ள ஜெய்லர் திரைப்படத்தின் இரவு காட்சியை பார்த்துவிட்டு வந்து கல்பாக்கத்தில் உள்ள தனது குடியிருப்பில் தனியாக தூங்கியுள்ளார்.
இன்று பொழுது விடிந்ததும் திரைப்படம் பார்த்துவிட்டு வந்த அசதியில் தனது மகன் உறங்கி விட போகிறான். வேலைக்கு செல்ல அவனை எழுப்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது தந்தை வேணு அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து செல்போன் மணி ஒலித்தும் நீண்ட நேரம் ஆகியும் அவர் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த வேணு, புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு உடனே போன் செய்து கல்பாக்கத்தில் உள்ள தனது மகன் குடியிருப்பிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார்.
பிறகு உடனே புதுப்பட்டினத்தில் உள்ள அவரது உறவினர்கள் கல்பாக்கத்திற்கு சென்று அங்குள்ள குடியிருப்பின் கதவை தட்டி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் கோபிநாத் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது அவர் தூக்கு போட்டு இருப்பது தெரிய வரவே,
உடனே அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது கோபிநாத் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு சென்னையில் நிச்சயதார்த்த அழைப்பிதழ் வைக்க சென்ற தந்தை வேணுவுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இந்த தற்கொலை விவகாரம் குறித்து கல்பாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்டோனி மற்றும் போலீசார் கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு கல்பாக்கம் போலீசார் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கோபிநாத் ஏன் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்வதற்காக அவரது வீட்டில் சோதனை போட்டனர்.
கடிதம்
அப்போது கோபிநாத் தனது கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சி்க்கியது. அக்கடிதத்தில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் என்னை மன்னித்துவிடு.. நான் உன்னை விட்டு செல்கிறேன்.. நீ என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் ..நல்ல ஒரு பையனை பார்த்து திருணம் செய்து கொள்ளவேண்டும்…
நான் இறந்த பிறகு மத்திய அரசால் வழங்கப்படும் செட்டில்மெண்ட் பணம் முழுவதையும் எனது தாயிடம் ஒப்படைத்து விடுங்கள், நான் இறந்த பிறகு பணம் வாங்கமால் உடல் நலம்குன்று அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஏழைகளுக்கு எனது உடல் உறுப்புகளை தானம் செய்து விடுங்கள்..பணம்..பணம்.. என்று வாழும் மனிதர்கள் உள்ள இந்த உலகத்தில் வாழ எனக்கு பிடிக்கவில்லை. இதனால் எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று அந்த கடிதத்தில் கோபிநாத் உருக்கமான எழுதி உள்ளார்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இந்த தற்கொலை சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.