திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி
1 min read
Hand stick for pilgrims climbing Tirupati
16.8.2023
சிறுத்தை தாக்குதல் எதிரொலியாக
திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டம் தொடக்கப்பட்டு உள்ளது.
சிறுத்தை
திருப்பதி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது. இதையடுத்து ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஆனால் சில மணி நேரத்தில் மீண்டும் வேறு ஒரு சிறுத்தை அதே இடத்திற்கு வந்தது.
இந்நிலையில் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் துறை கட்டிடம் எதிரே வனப்பகுதியில் இருந்து திடீரென ஒரு சிறுத்தை வந்தது. இதனை கண்டு அங்கிருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது மாணவர்கள் சிலர் சிறுத்தையை மறைந்திருந்த புகைப்படமும் எடுத்துள்ளனர்.
மேலும் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர். தொடர்ந்து சிறுத்தை வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் கடந்த 3 நாட்களாக சுற்றிவந்த சிறுத்தை, தற்போது கீழே இறங்கி மலையடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்ததால் பொதுமக்கள், பக்தர்கள் பீதியில் உள்ளனர்.
கைத்தடி
பக்தர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும். நடைபாதையில் இரவு நேரங்களில் அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அலிபிரி வழியாக மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. தேவஸ்தான பாதுகாவலர்கள் பக்தர்களுக்கு கைத்தடிகளை வழங்கினர். இந்த கைத்தடிகள் ஏழுமலையான் கோவில் அருகே மீண்டும் சேகரிக்கப்படுகிறது.