May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் கண்ட அதிசய குரங்கு/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Miraculous monkey with eyes/ comic story/ Tabasukumar

16.8.2023
கண்ணாயிரம் பாபநாசம் ஆற்றில் மின்சாரம் எடுப்பதால் குளிக்க மறுத்தார்.ஆனால் சுடிதார் சுதா மற்றும் இளைஞர்கள் பயில்வான் ஆகியோர் ஆற்றில் இறங்கி நீந்தி குளிக்க அவர்கள் மீது மின்சாரம் பாயலாம் என்று பயந்தபடி கண்ணாயிரம் நின்றார்.பயில்வான் அவரைப் பார்த்து கண்ணாயிரம் பயப்படாம வாங்க..ஆற்றில் குளிங்க மின்சாரம் தாக்காது என்று சொன்னார்.
கண்ணாயிரம்..ஏங்க…எல்லோரும் ஓண்ணா குளிக்கிறதாலே மின்சாரம் தாக்கல..நான் மட்டும் குளிக்க வந்தேன்னா .. நீங்க எல்லாம் வெளியே ஓடி வந்துடுவீங்க..நான் தனியா குளிப்பேன்…மின்சாரம் என்னை தாக்கிடும்..இது எனக்கு தெரியாதா…என்னை ஏமாளின்னு நினைச்சிட்டு…இப்படி சொல்லுறீயளா…அது நடக்காது என்றார்.
உடனே சுடிதார் சுதா ஏங்க ..பாபநாசத்தில் குளிச்சா உங்க பாவமெல்லாம் காணாம போய்விடும்..வாங்க..வந்து குளிங்க என்க கண்ணாயிரம்..நான்தான் எந்த பாவமும் செய்யலையே ..பிறகு எதுக்கு பாபநாசத்தில் குளிக்கணும் என்று எதிர் கேள்வி கேட்டார்.
அதற்கு சுடிதார் சுதா…ஏங்க..உள்ளாட்சி தேர்தலில் போட்டி போடணுமுன்னு ஜவுளிக் கடையில் பெண்களுக்கு சேலை வாங்கி குடுத்துட்டு ஜவுளிக் கடைக்காரருக்கு பணம் கொடுக்காம ஏமாத்திட்டு இருக்கீங்க…இது பாவம் இல்லையா..என்று மடக்கினார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம்..ம்..அதுதான் உள்ளாட்சி தேர்தல் வந்த உடன் பணம் தர்றேன் என்று சொல்லி இருக்கேனே..நான் ஒண்ணும் ஏமாத்தலையே .அதனாலே அது பாவம் இல்லை என்று கண்ணாயிரம் பதில் அளித்தார்.
என்ன சொன்னாலும் கண்ணாயிரத்தை மடக்க முடியவில்லையே என்று சுடிதார் சுதா யோசித்தார். பின்னர் கண்ணாயிரத்தை பார்த்து ஏங்க..பாபநாசத்தில் குளிச்சாதான் அகத்தியர் அருவியில் குளிக்க அனுமதிப்பாங்க..தெரியுமா என்று கேட்க..கண்ணாயிரம் ஒரு நிமிடம் தடுமாறினார்.
அந்த வழியாக அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு வருபவர்களிடம் ஏங்க..பாபநாசத்தில் குளிச்சாதான் அகத்தியர் அருவியில் குளிக்க அனுமதிப்பார்களா…சொல்லுங்க என்க..அவர்கள்..அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை என்று சொல்ல..கண்ணாயிரம்..ஆ..பாத்தியா..சும்மா பொய் சொல்லக் கூடாது..பொய் சொன்ன பாவத்துக்கு நீ நல்லா குளி என்று சுடிதார் சுதாவை பார்த்து சொன்னார்.
சுடிதார் சுதா நல்லதுக்கு காலம் இல்லை என்றபடி வேகமாக இறங்கி குளித்தார். பூங்கொடி குளிக்கலாமா வேண்டாமா என்றபடி ஆற்றின் அருகில் யோசித்தபடி நிற்க கண்ணாயிரம் அவரிடம்..ஏய்..ஆத்துலே இறங்கிடாத..சம்சாரம் ஒரு மின்சாரம் என்று ஏற்கனவே சொல்லியிருக்காங்க..மின்சாரம் எடுக்கிற ஆத்துல நீ வேற இறங்கிட்டா..இரண்டு மின்சாரமும் மோதி சிக்கலாகிடும்…நாம பேசாம அகத்தியர் அருவியில் போய் குளிக்கலாம்..சரியா என்று மனைவியிடம் கேட்டார்.அவரும் சரி என்று தலையை அசைக்க.. கண்ணாயிரம்..மகிழ்ச்சியில்..நான் சொன்னதை நீ கேட்டது இதுதான் முதன் முறை என்று பாராட்ட.. பூங்கொடியோ..அதெல்லாம் ஒண்ணும் இல்லை..இங்கே சேலை மாத்த வசதி இல்லை..அதான் இங்கே குளிக்கலை என்று சொல்ல கண்ணாயிரம்..ம்..அப்படியா ..நானும் ரொம்ப நம்பிட்டேன்…சே..ஏமாற்றம்..ஏமாற்றம் என்று கண்களை கலங்கினார்.
அந்த நேரத்தில் சுடிதார் சுதா மற்றும் இளைஞர்கள் ஆற்றிலிருந்து வெளியே வர பயில்வானும் நீந்தியபடி வெளியே வந்தார்.
எல்லோரும் அகத்தியர் அருவிக்கு நடந்து போங்க..பக்கத்தில்தான் அருவி இருக்கு என்று பயில்வான் சொல்ல எல்லோரும் அகத்தியர் அருவியை நோக்கி நடந்தனர். சுடிதார் சுதா மற்றும் இளைஞர்கள் மாற்று உடை எடுத்துக்கொண்டு நடந்தார்கள். பூங்கொடியும் கண்ணாயிரமும் வேறு உடைகளுடன் எலுமிச்சம் பழங்களுடன் நடக்க..பயில்வான் அவர்களிடம் சீக்கிரம் நடங்க ..அருவியில் குளிச்சிட்டு ஊருக்கு கிளம்பணும் என்று சொல்லிட்டு வேகமாக சென்றார்.
இயற்கை அழகை ரசித்தபடி நடந்த கண்ணாயிரம்..பசுமையான பகுதிகளை நின்று பார்த்தார். அருவி பக்கத்தில் தான் இருக்கா என்று கேட்டபடி நடந்த கண்ணாயிரம் சிறிது நேரத்தில் அருவியை நெருங்கினார். அருவி சத்தத்தை விட அங்கு குளிப்பவர்கள் சத்தம் அதிகமாக இருந்தது.
நல்ல கூட்டம்…உற்சாகமாக இருக்காங்க என்ற கண்ணாயிரம் மரங்களுக்கிடையே ஒரு உருவம் எட்டிப்பார்ப்பதை கண்டார்.என்ன இது வித்தியாசமா இருக்கு…நம்மள முறைச்சி பாக்கு..எங்கே போனாலும் நமக்குத்தான் இடைஞ்சல் ..அது என்னது..செடி வழியா எட்டிப்பாக்கு..ஆட்கள் குளிக்கிற இடம்..இங்கே என்ன பார்வை..என்ற கண்ணாயிரம் நினைத்த வேளையில் செடிகளுக்கு உள்ளே இருந்து ஒரு குரங்கு வெளியே ஓடிவந்தது.
அதைப் பார்த்ததும் கண்ணாயிரம் மிரண்டு..அது தன்னை துரத்தும் என்று நினைத்து ஓட..அந்த குரங்கு பயந்து ஓடியது. அதைப்பார்த்த கண்ணாயிரம் ..என்ன இது குற்றாலத்தில் குரங்கு நம்மளை பின்னாலே துரத்தி துரத்தி வந்தது. இங்கே என்னன்னா..இந்த குரங்கு நம்மளை பார்த்து ஓடுது. குரங்கும் வித்தியாசமா இருக்கு என்ற ஆச்சரியப் பட்ட கண்ணாயிரம் சுடிதார் சுதாவிடம்..என்னை பாத்து குரங்கு பயந்து ஓடுது.என்னை சாதாரணமா நினைச்சிட்டு இருக்காதீங்க என்க..

சுடிதார் சுதா அவரிடம்..சிங்கவால் குரங்குதான் மனிதனை கண்டால் ஓடும்..நீங்க பாத்தது சிங்கவால் குரங்காக இருக்கும். அது அபூர்வ வகை குரங்கு..யார் கண்ணிலும் எளிதில் தென்படாது..எங்கே பாத்தீங்க..வாங்க பாப்போம் என்று கண்ணாயிரத்தை அழைத்தார். அவரும் இந்த வழியாகத்தான் போச்சு என்றபடி ஒரு பாதையை காட்ட..சுடிதார் சுதாவும் கண்ணாயிரமும் அடி மேல் அடிவைத்து நகர.. அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஒரு குரங்கு அவர்களை நோக்கி பாய இருவரும் அருவியை நோக்கி ஓடினார்கள். என்ன குரங்கு இரட்டை வேடம் போடுது. முதலில் பயந்து ஓடிச்சு..இப்போ திருப்பி நம்மளை யே மிரட்டிக் கிட்டு ஓடி வருது. ..மனுசனை பார்த்து குரங்கும் மாறிடுச்சு..என்ன உலகமடா இது என்று நொந்தபடி சொல்ல ..பூங்கொடி அருகில் வந்து சுடிதார் சுதாவை கூட்டிக்கிட்டு எங்கே போனீங்க என்க..கண்ணாயிரம் குரங்கு…குரங்கு என்று உளற.. என்னையா குரங்குன்னு சொல்லுறீய என்று பூங்கொடி எகிற…கண்ணாயிரம் ..அது இல்ல..அது இல்ல என்றபடி ஓட்டம் பிடித்தார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.