May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் கேட்ட எலுமிச்சம்பழ கதை/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

A story of lemons heard by Kannaiiram/ comedy story/ Tabasukumar

24.8.2023
கண்ணாயிரம் பாபநாசத்தில் மின்சாரம் எடுப்பதால் அங்கு குளிக்காமல் மனைவியுடன் அகத்தியர் அருவியில் குளிக்க நடந்து சென்றார். அந்த அருவியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கண்ணாயிரம் அருவியின் அருகே திகைத்து நிற்க.. பூங்கொடி அவரிடம்..ஏங்க.. ஏன் முழிக்கிறீங்க..அவங்க குளிச்சிட்டு போயிடுவாங்க அப்புறம் நாம குளிப்போம்..என்க கண்ணாயிரம் சரி என்றார்.
சிறிது நேரத்தில் அங்கு குளித்தவர்கள் கூட்டமாக வெளியேறினார்கள்.கண்ணாயிரத்தை பார்த்து அவர்கள் ஹாய் என்று கைஅசைக்க.. அவரும் தெரிந்தவர் போல் ஹாய் என்று கையை அசைத்தார்.
ஒருவர் கண்ணாயிரம் அருகில் வந்து ..நீங்க இன்னோ சென்டா. என்று கேட்க கண்ணாயிரம்.. இல்லைங்க.. நான் எந்தசென்டும் போடுறதில்லை என்று சொல்ல… அங்கிருந்தவர்கள்.. ஓ… என்று சிரித்தபடி சென்றனர்.
பூங்கொடி ஓடி வந்து கண்ணாயிரத்திடம்..என்ன கேட்டாங்க என்க கண்ணாயிரம் சிரித்தபடி இன்னா சென்டுன்னு கேட்டாரு..நான் சென்டு எல்லாம் போடுறதில்லைன்னு சொல்லிட்டேன் என்றார்.
பூங்கொடியும்…ம்..நல்லா பதில் சொன்னீங்க.. என்ன உங்களை ஒண்ணும் தெரியாதவருன்னு நினைச்சிட்டு.. பேசுறாங்க.. கை கொடுங்க என்று கண்ணாயிரத்தின் கையை பிடித்து குலுக்கினார்.
அதைப் பார்த்த சுடிதார் சுதா..மனசுக்குள்ளே சிரித்துக் கொண்டார்.
கண்ணாயிரம் மனைவி பாராட்டியதால் மிகவும் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டார். சுடிதார் சுதா மற்றும் இளைஞர்கள் அருவியில் குளிக்க தயாரான போது கண்ணாயிரமும் வேட்டியை மடக்கிக் கட்டியபடி ம். விடக் கூடாது.. குற்றாலத்தில் குளிக்க விடல..அகத்தியர் அருவியில் யாரும் தடுக்க மாட்டாங்க..நல்லா குளிக்கலாம்..ஹாய் என்று கண்ணாயிரம் உற்சாகமானார்.
பூங்கொடி எலுமிச்சம் பழங்களை பையிலிருந்து வெளியே எடுத்தார். நல்லா அவர் தலையில தேய்ச்சி குளிக்கச் சொல்லணும்.. அப்போ அவருக்கு மூளை நேர்மையா வேலை செய்யும்.. அப்புறம் நல்ல அறிவா பேசுவாரு.. என்று பூங்கொடி நினைத்தார்.
பூங்கொடி எலுமிச்சம் பழங்கள் வைத்திருப்பதை பார்த்த கண்ணாயிரம்..என்ன எலுமிச்சம் பழமா.. இதுக்கு அந்த பெயர் எப்படி வந்தது ..என்று கேட்க… பூங்கொடி சூடாகி இப்படி ஏடா கூடமா கேள்வி கேட்கிறீங்க.. எலுமிச்சம் பழத்தை தேய்ச்சி குளிச்சா எல்லாம் சரியாகிடும்..என்றார்.
கண்ணாயிரம் அதெல்லாம் முடியாது.எலுமிச்சம் பழமுன்னு ஏன் பெயர் வந்துச்சு.. அதை சொன்னாதான்…எலுமிச்சம் பழத்தை தேய்த்து குளிப்பேன் என்று அடம் பிடித்தார்.
அப்போது அங்கு வந்த பயில்வான்..என்ன பிரச்சினை என்று கேட்க..எலுமிச்சம் பழமுன்னு ஏன் பெயர் வந்துச்சுன்னு கேட்கிறார்…எனக்கு என்ன தெரியும் என்று பூங்கொடி சொல்ல.. பயில்வான் .. அப்படியா.. நான் பார்த்துக்கிறேன்.. விடுங்க என்றபடி கண்ணாயிரத்தை நெருங்கினார்.
கண்ணாயிரம்..நீ கேட்டதுல தப்பில்ல.. எலுமிச்சம்பழம் பெயர் வந்தது எப்படி..என்னிடம் கேளு நான் சொல்லுறேன்..
ஒரு ஊருல ஒரு துறவி இருந்தார். அவரிடம் ஒரு சீடன் இருந்தான். அவன் எப்போது பார்த்தாலும் துறவியிடம் ஏதாவது சந்தேகம் கேட்டுக்கிட்டே இருப்பான். அன்னைக்கு பாருங்க…துறவியின் ஆசிரமத்துக்கு வந்த ஒரு பக்தர் தனது மயக்கம் தீர வழி சொல்லுங்க சாமி என்றான். துறவியும் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொடுத்து நல்லா தேய்ச்சி குளின்னு சொன்னார். அந்த பக்தரும் எலுமிச்சம் பழத்தை வாங்கிக்கிட்டு அங்கிருந்து போனார். அப்போது அங்கிருந்த சீடர் மெல்ல சாமி.. இந்த எலுமிச்சம் பழத்துக்கு எப்படி பெயர் வந்துச்சு அப்படின்னு கேட்டான். அதைக் கேட்ட துறவி சிரித்தவாறு.. எலுமிச்சம் பழமா.. பெயர் காரணம் வேணுமா..சரி ஒண்ணு பண்ணு.. ஆரஞ்சு பழம் வாழைப்பழம் கொய்யா பழம் எலுமிச்சம் பழம் வாங்கிட்டு வா..இரவு பூஜையில் வைப்போம். காலையில் வந்து பாப்போம். உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்றார். அதைக் கேட்ட சீடர் அப்படியா என்று கடைக்கு போய் துறவி சொன்ன பழங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தார். பூஜையில் எல்லா பழங்களையும் துறவி வைத்தார். சீடனிடம்..சரி.. இந்த ஆரஞ்சு பழம் வாழைப்பழம் கொய்யா பழம் எலுமிச்சம் பழம் எல்லாம் இருக்கட்டும்.. இந்த அறைக் கதவை பூட்டிவிட்டு போவோம். காலையிலே வந்து பாப்போம் என்றார்.
சீடனும் சரி என்று சொல்ல அறைக்கதவை துறவி பூட்டினார்.இரவு வேறு அறையில் துறவியும் சீடரும் தூங்கினார்கள். சீடன்..தூங்காமல் எப்போது விடியும் என்று காத்திருந்தான். துறவி நிம்மதியாக தூங்கினார். விடிந்தது. சீடன் துள்ளி எழுந்து துறவியை எழுப்பினான். சாமி..விடிந்துவிட்டது. எழும்புங்கள்.அறையில் பூட்டி வைத்த பழத்தை போய் பார்ப்போம் என்றான்.
துறவியும் எழுந்தார்.அவசரப்படாதே..குளித்துவிட்டு அந்த அறைக் கதவை திறந்து பார்ப்போம் என்று சொல்ல சீடனும் தலையை அசைத்தான். இருவரும்.ஆற்றுக்கு சென்று நன்றாக குளித்துவிட்டு ஆசிரமத்துக்கு வந்தார்கள்.
சீடர் ஆவலாக..பழங்கள் உள்ள அறையை திறக்கலாமா என்று கேட்க துறவியும் ம்…கதவை திற என்று சொன்னார்.
சீடர் வேகமாக கதவை திறந்த போது பழங்கள் அருகில் நின்ற ஒரு எலி தப்பித்தோம் பிழைத்தோம் என்று துள்ளி வெளியே ஓடியது. அடடா..பழத்தை மூடிவைக்காம போனது தப்பா போச்சு… இந்த எலி என்ன பண்ணிச்சோ என்றபடி பூஜை அறையில் இருந்த பழங்களை நோக்கி சீடர் ஓடினார்.
துறவி அவனுக்கு பின்னால் சென்றார். சீடா..என்ன ஆச்சி..என்று துறவி கேட்க.. சீடன்..போச்சு..போச்சு..எல்லாம் போச்சு..பழங்களை மூடி வைக்காம போனது தப்பா போச்சு..பழங்களை எல்லாம் எலி கடிச்சி வச்சிட்டு என்றான்.
துறவி அவனிடம்..சீடா..எல்லா பழங்களையுமா எலி கடிச்சிருக்கா.. நல்லா பாரு என்றார்.
சீடன் ஆரஞ்சு பழம் வாழைப்பழம்..கொய்யா பழம் எல்லாத்தையும் பார்த்தான். அவைகளை எலி நன்றாக கடித்திருந்தது.
சாமி ஆரஞ்சு வாழை கொய்யா எல்லா பழங்களையும் எலி கடிச்சிருக்கு என்றான். எலி கடிக்காம மிச்சம் ஒரு பழமும் இல்லையா என்று துறவி கேட்க.. சீடன் உடனே..அதுவா எலி கடிக்காம மிச்சம் வச்சிருக்கிற பழம் ஒண்ணு இருக்கு என்றான். அது என்ன பழம் சொல்லு என்று துறவி கேட்க.. அதுவா இந்த எலுமிச்சம் பழத்தைத்தான் எலி கடிக்காம மிச்சம் வச்சிருக்கு.. மற்றதை யெல்லாம் கடிச்சிப்புட்டு என்று சொன்னான்.
பழங்களை எலி கடித்ததால் சாப்பிட முடியாதே என்று அவனுக்கு கவலை. சாமி..பழம் போனது போச்சு..நான் இந்த எலுமிச்சம் பழம் பெயர் வந்தது எப்படின்னு கேட்டேனே..அதுக்கு பதில் சொல்லுங்க என்று சீடன் கேட்டான்.
துறவி சிரித்தபடி..இன்னும் உனக்கு பதில் தெரியலையா..கேளு. ஆரஞ்சு பழம் வாழைப் பழம் கொய்யா பழம்..எலுமிச்சம் பழம் எல்லாம் இருந்துச்சு. ஆரஞ்சு பழம் வாழைப் பழம் கொய்யா பழம் ஆகியவைகளை கடித்து சாப்பிட்ட எலி எலுமிச்சம் பழத்தை மட்டும் சாப்பிடாமல் எலி மிச்சம் வெச்சிட்டு. எனவே எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்த பழம் எலுமிச்சம் பழம்.. இப்போது புரிகிறதா என்று துறவி கேட்டார்.
சீடரும் ஆம் சாமி என்று ஏற்றுக் கொண்டான். இதுதான் எலுமிச்சம் பழம் பெயர் வந்த கதை என்றார் பயில்வான்.
கண்ணாயிரம்..ஆ..இதில் இவ்வளவு கதை இருக்கா என்றவர் எதோ சிந்திக்க தொடங்கினார்.
ஆமா..ஒரு சந்தேகம்.ஆரஞ்சு பழம் வாழைப் பழம் கொய்யா பழம் இவைகளை சாப்பிட்டதால் எலிக்கு வயிறு நிரம்பி போச்சு. அதனால..எலுமிச்சம் பழத்தை சாப்பிடாம மிச்சம் வச்சிட்டு..அதனால…எலுமிச்சம் பழத்தை மட்டும் வச்சா.. எலுமிச்சம் பழத்தை எலி தின்னுதானே ஆகணும். எலி மிச்சம் வைக்க முடியாதே என்றார்.
பயில்வான் உஷாரானார். கண்ணாயிரம்…எலிக்கு எலுமிச்சம் பழ வாடை பிடிக்காது. தனியா வச்சாலும் சரி..மற்ற பழங்களோடு வச்சாலும் சரி.. எலுமிச்சம் பழத்தை எலி சாப்பிடாம மிச்சம் வச்சிடும் தெரியுதா என்று கேட்டார்.
கண்ணாயிரம்..ம்..சீ..சீ..எலுமிச்சம் பழம் புளிக்கும் என்று எலி ஓடிடும் போலிருக்கு என்று சொன்னார்.. பின்னர் அது சரி..அப்படின்னா..எலிமிச்சம் பழமுன்னு தானே சொல்லும்.எலுமிச்சம் பழமுன்னு ஏன் சொல்லுறோம் என்று கிடுக்கிபிடி கேள்வி கேட்டார். பயில்வான்..அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.