“தாமிரபரணியையும் சுத்தம் செய்வதற்கு தனி பட்ஜெட் போட வேண்டும்”- அண்ணாமலை பேச்சு
1 min read
DMK about NEET. The play is playing” Edappadi Palaniswami speech…
20/8/2023
“தாமிரபரணியையும் சுத்தம் செய்வதற்கு தனி பட்ஜெட் போட வேண்டும்” என்று நெல்லை பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.
பாதயாத்திரை
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை நேற்று நெல்லை மாவட்டத்தில் பாதயாத்திரையை தொடங்கினார்.
நெல்லை பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் பகுதியில் இருந்து பாத யாத்திரையை தொடங்கிய அண்ணாமலைக்கு கட்சியினர், பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சமாதானபுரம் ரவுண்டானா, மார்க்கெட், லங்கர்கானா சாலை வழியாக தொண்டர்களுடன் பாத யாத்திரையாக வந்த அவர், அங்குள்ள வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தெற்கு பஜார் வழியாக ராஜகோபாலசாமி கோவில் திடலை வந்தடைந்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தாமிரபரணி
தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி நதியை அசுத்தமாக்கி விட்டனர். கங்கை நதியை போன்று தாமிரபரணியையும் சுத்தம் செய்வதற்கு தனி பட்ஜெட் போட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்ட மேற்கூரை 8 மாதங்களிலேயே அரைமணி நேர மழைக்கு கூட தாக்குப்பிடிக்காமல் சரிந்து விட்டது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் இ்ல்லாத அளவாக தமிழகத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.10 லட்சத்து 26 ஆயிரம் கோடி நிதியை வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது. முன்பு 4 விளைபொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்த நிலையில், தற்போது 24 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொண்டு வரப்பட்டுள்ளது
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.1,310 வழங்கிய நிலையில், தற்போது ரூ.2,183 வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. தமிழகத்தில் விவசாய நலன் திட்டங்களுக்கு ரூ.1,772 கோடியும், வேளாண்மை வளர்ச்சிக்கு ரூ.3,588 கோடியும், பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,239 கோடியும் மத்திய அரசு வழங்கி உள்ளது.
நீட் தேர்வு
மது ஆலைகளை தி.மு.க. வினர் நடத்துவதால்தான் மதுக்கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்போது, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஏன் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை?
நீட் தேர்வை தி.மு.க.வினர் எதிர்ப்பதற்கு காரணம், மாணவர்கள் மீதுள்ள அக்கறையில் இல்லை. மாறாக அவர்கள் மருத்துவ கல்லூரிகளை நடத்துவதால்தான் நீட் தேர்வை எதிர்க்கின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 33 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 22 மருத்துவக் கல்லூரிகள் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதாகும். நீட் தேர்வு இருந்தால் இந்த கல்லூரிகளுக்கு மேலாண்மை இட ஒதுக்கீட்டில் இடம் வழங்க முடியாது என்பதால் அவர்கள் சொல்லித்தான் இந்த பிரச்சினையை எழுப்புகிறார்கள்.
கச்சத்தீவு
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க. தான். இதை ஆதாரத்துடன் கூறுகிறேன்.
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந்தேதி முதல் இந்த திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரையிலும் வட்டி இல்லாமல் கடன் வாங்கிக் கொள்ளலாம். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும். இதற்கு நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி தி.மு.க.வில் இருந்து விலகி நேற்று அண்ணாமலை முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான் பாண்டியன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் தயாசங்கர், தமிழ்ச்செல்வன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நாகராஜன், மகளிர் அணி நிர்வாகி தீபா, ராஜ்கண்ணன், நீலமுரளி யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் கல்லிடைக்குறிச்சியில் 6-ம் நம்பர் சாலையில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையிலும், அம்பையில் ஆர்ச் பகுதியில் இருந்து கல்யாணி திரையரங்கம் வரையிலும் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டார்.