11-ம் வகுப்பு முதல் “நீட்” பயிற்சி தொடங்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
1 min readDr. Ramdas insists on starting “NEET” training from 11th standard
3.9.2023
அரசு பள்ளி மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு முதல் “நீட்” பயிற்சி தொடங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நீட் தேர்வு
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத விரும்பும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்த பயனும் விளையாத நிலையில், நடப்பாண்டிலாவது பயிற்சியை முன்கூட்டியே தொடங்க வேண்டும்.
நீட் விலக்கு பெறும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீண்ட காலம் பயிற்சி அளிக்க வேண்டியதன் தேவையை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை வாரத்தில் ஒரு நாள் பெயரளவில் பயிற்சி அளிக்கும் முறையை கைவிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தது இரு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். அதற்காக 11-ம் வகுப்பு தொடங்கிய வாரம் முதல், 12-ம் வகுப்பு தேர்வு முடிந்து நீட் தொடங்குவதற்கு முந்தைய வாரம் வரை இரு ஆண்டுகளுக்கு முழுமையான பயிற்சியை திறமையான ஆசிரியர்கள், வல்லுனர்களைக் கொண்டு அரசு வழங்க வேண்டும். கடந்த ஆண்டில் வட்டத்திற்கு ஒரு மையத்தில் மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் வட்டத்திற்கு இரு மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு கையேடு மற்றும் வினா-விடை தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும். நடப்பாண்டிற்கான பயிற்சி வகுப்புகளை அடுத்த வாரத்திலேயே தொடங்குவதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.