செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min read
High Court directs Senthil Balaji’s bail plea to be heard by Principal Sessions Court
4/9/2023
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அவருக்கு ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறிய நீதிபதி ரவி, இதுதொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டார்.
அதன்படி செந்தில் பாலாஜி்க்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பட்டியலிடப்படாத நிலையில், இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தையே அணுகலாம் என முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி தெரிவித்தார். அதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக முறையிட்டபோது, இந்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா, அதற்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உயர் நீதிமன்றத்தை அணுகி தெளிவுபடுத்திக் கொண்டு வர அறிவுறுத்தினார்.
உயர்நீதி மன்றம்
இந்த மனுவை விசாரிக்க, முதன்மை அமர்வு நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் மறுத்த நிலையில், இதுகுறித்து விளக்கம் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், “சிறையில் செந்தில் பாலாஜி 3 முறை நிற்க முடியாமல் கீழே விழுந்து விட்டார். மற்றவர் துணை இல்லாமல் அவரால் நீண்ட நேரம் அமர்ந்தோ எழுந்து நிற்கவோ முடியாது. எனவே, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பது குறித்து மட்டுமே உத்தரவு பிறப்பிக்க முடியும். சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி மத்திய அரசால் முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமாக அறிவித்த அரசாணை மத்திய அரசு சட்டத்துக்கு மேலானது அல்ல. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு என்பதால், வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.