மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் – தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
1 min read
I will not be afraid of intimidation – Minister Udayanidhi Stalin’s speech in Thoothukudi
4/9/2023
மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன், கவலைப்படவும் மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ரூ.10 கோடி பரிசு
அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் சனாதன கொள்கைக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்து அதிர வைத்துள்ளார். மேலும், அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அந்த புகைப்படத்தை எரித்துள்ளார்.
அஞ்சமாட்டேன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்துள்ளார். இந்த நிலையில் உத்தர பிரதேச சாமியார் அவரது தலைக்கு ரூ.10 கோடி அறிவித்துள்ளது குறித்து பேசிய அவர், “மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்; கவலைப்படவும் மாட்டேன். 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், எனது தலையை நானே சீவிக்கொள்வேன்” என்று கூறினார்.
கருணாநிதி கிண்டல்
பல ஆண்டுகளுக்கு முன்னதாக ராமர் குறித்து பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் தலையை சீவி வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஷுவ ஹிந்து பரிஷத் தலைவர் பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கருணாநிதி, எனது தலையை நானே சீவ முடியவில்லை என தனக்கு வழுக்கை விழுந்துள்ளதை நகைச்சுவையாக குறிப்பிட்டு அதற்கு பதில் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.