2026-ல் பாஜக தனித்தன்மையுடன் ஆட்சிக்கு வரும்; அண்ணாமலை உறுதி
1 min readBJP will come to power in 2026 with distinction; Annamalai confirmed
18.9.2023
2026-ல் பாஜக தனித்தன்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலை
வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.
நடைபயணம்
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அண்ணாமலையின் நடைபயணம் என்பது வசூல் பயணம் எனவும், அதிமுக துணையில்லாமல் பாஜக வெற்றிபெற முடியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்தது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-
சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பும், பின்பும் ஒருமாதிரி பேசுவார். அவர் அமைச்சராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்பது எனக்கு தெரியும். நேர்மையை பற்றி சி.வி.சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக்கூடாது. என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன்.
அவர்களெல்லாம் அமைச்சர்களாக இருந்ததே வசூலுக்காகத்தான். அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது. தூற்றுபவர்கள் தூற்றட்டும். பாஜக வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு பேசுகிறார்கள். இன்னும் அவர் பகுதிக்கு பாஜக நடைபயணம் போகவில்லை. போகும் போது பாருங்கள்.
கூட்டணியில் இருந்தால் கொள்கை மாறுபாடுகள் இருக்கும். அதற்காக அடிமையாக இருக்க முடியாது. பாஜக தனித்தன்மையுடன் 2026-ல் ஆட்சிக்கு வரும். இன்னொரு கட்சியின் பி டீம், சி டீம் ஆகவோ வராது. மற்றவர்களை ஏவி பதில் சொல்பவன் நான் அல்ல. பதிலை நானே சொல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.