தென்காசி அருகே யானை தந்தம் கடத்தியவர் கைது
1 min read
Elephant ivory smuggler arrested near Tenkasi
10.10.2023
தென்காசி அருகே காரில் யானை தந்தங்களை காரில் கடத்திய நபரை வனத்துறையினர் கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே யானை தந்தங்களை கடத்துவதாக நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை மண்டல வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு நெல்லை வன காவல் நிலைய வனச்சரக அலுவலர் லோக சுந்தரநாதன் தலைமையில் வனவர் சசிகுமார் அடங்கிய குழுவினர், கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் கடையநல்லூர் அருகே உள்ள வடகரை பீட்டிற்குட்பட்ட மேட்டுக்கால் ரோடு, பொன்னாக்குடி கிராமம் குறவன் பாறை செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த ஒரு காரை வனத்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 14 கிலோ எடை கொண்ட இரண்டு யானை தந்தங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரில் வந்த நபர் வடகரை ஜாகீர் உசேன் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த பீர்முகம்மது (வயது 52) என்பது தெரிய வந்தது.
கடத்தப்பட்ட யானை தந்தங்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். உடனடியாக இரண்டு
யானை தந்தங்கள் , மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட காரையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்
அதனைத் தொடர்ந்து யானை தந்தங்களை கடத்திய பீர்முகம்மதுவை விசாரணைக்காக கடையநல்லூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். யானையை கொன்று தந்தங்களை வெட்டி எடுத்தவர்கள் யார்? இவருக்கு யானை தந்தங்களை கொடுத்தது யார்? அவர் எங்கே இருந்து வாங்கினார்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.