May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆஸ்பத்திரியில் கண்ணாயிரம் கலாட்டா/ நகைச்சுவைக் கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram galata in the hospital/ comic story / Tabasukumar

16.11.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு மழையில் நனைந்து சுற்றுலாப் பயணிகளுடன் பஸ்சில் புதுவைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். வழியில் பஸ் திடிரென்று தள்ளாடி தள்ளாடி சென்று கவிழ்ந்துவிட்டது. பஸ்சில் காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கண்ணாயிரத்தை தேடிய போது அவரைக் காணவில்லை.பச்சை சேலையில் சுற்றி ஒருவரை ஆம்புலன்சில் ஏற்றியதாக சுடிதார்சுதா சொல்ல அவரே கண்ணாயிரமாக இருக்கவேண்டும் என்று நினைத்து பூங்கொடி பயில்வான் சுடிதார் சுதா மற்றும் இளைஞர்கள் வேனில் பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
பஸ் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வேனில் பாளைஹகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து சிகிச்சை பிரிவுக்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் தூக்கிச்சென்றனர். சேலையில் சுற்றப்பட்டிருந்தவர் பெண்ணாக இருக்கலாம் என்று நினைத்து பெண்கள் பகுதியில் உள்ள படுக்கையில் படுக்கவைத்தனர்.
கண்ணாயிரம் முகத்தில் மூடியிருந்த சேலையை விலக்கிவிட்டு புரண்டு படுத்தார். அப்போது அவரது சின்ன மீசையைப் பார்த்த பெண்கள்.. அவரு ஆம்பிளை.. ஆம்பிளை என்று கத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஓடி வந்தனர். என்ன..என்ன என்று கேட்க பெண்கள் புகார் செய்ய ஆஸ்பத்திரி ஊழியர்கள் டென்சன் ஆனார்கள்.
சேலையை சுத்திக்கிட்டு இப்படி ஏமாத்துறது யாருடா என்றபடி அருகில் சென்றனர். கண்ணாயிரம் அந்த நேரத்தில் மூச்சை இழுத்துவிட்டார். இதைப்பார்த்த ஊழியர்கள்..ஏய்..சீரியஸ் கேசுடா..உயிரு இழுக்குது .. எப்போது வேண்டுமானாலும் போயிடும்.. தூக்கு.. தூக்கு என்றவாறு கண்ணாயிரத்தை எமர்ஜென்சி வார்டுக்கு தூக்கிச் சென்றனர்.
கண்ணாயிரம் தூக்க கலக்கத்தில் இருந்தார். நடந்தது எதுவும் அவருக்கு தெரியவில்லை… எமர்ஜென்சி பிரிவில் .. துரிதமாக சிகிச்சை அளிக்கும் பணி நடந்தது.
கண்ணாயிரம் மூடியிருக்கும் சேலையை அகற்ற முயன்றனர். கண்ணாயிரம் விடவில்லை. இழுத்துப் போர்த்திக்கொண்டார். என்னய்யா இது வம்பாப் போச்சு..காயம் எங்கே பட்டிருக்கின்னு தெரியலையே என்று புலம்பினர்.
கண்ணாயிரம் காலில் இருந்து ரத்தம் சொட்டுவது தெரிந்தது. அதற்கு கட்டுப்போடப்பட்டது.
கண்ணாயிரம் புரண்டு படுத்துக்கொண்டார். டாக்டர் பரிசோதிப்பதற்காக.. திரும்புய்யா என்க.. கண்ணாயிரத்திடமிருந்து சத்தம் வரவில்லை. அவர் பேச்சு மூச்சு வராம.. இருக்கார் சார்.. என்று ஊழியர்கள் சொல்ல.. அப்படியா ஒரு ஊசி போடுவோம்..என்றார்.
டாக்டர் ஊசியை ரெடி செய்த போது..கண்ணாயிரம் சேலையால் கையை மூடியிருந்தார். என்னய்யா..இது.. சேலை என்று டாக்டர் கேட்க.. ஊழியர்கள் இது பச்சை சேலை என்றனர்.
டாக்டர் டென்சனாகி.. யோவ்..ஆம்பிளை ஏன் பெண்கள் சேலையை மூடியிருக்கார் என்று கேட்கிறேன் என்றார்.
ஊழியர்கள் உடனே.. அது தெரியலை சார்.. அவர் கண் விழிச்சி சொன்னாதான் தெரியும் சார்..என்றனர்.
போங்கய்யா.. ஊசி போடுறதுக்கு அவர் பிட்டிய சரி பண்ணுங்கய்யா என்க ஊழியர்கள் அவரது கால்பக்கம் மூடியிருந்த சேலையை ஒதுக்க முயல.. கண்ணாயிரம் விடவில்லை. கைகளால் தட்டிவிடார்.
கையைப் பிடிங்கய்யா என்று டாக்டர் சொல்ல.. ஊழியர்கள் கண்ணாயிரம் கையை அழுத்திப்பிடிக்க டாக்டர் ம்..என்று சொல்லியவாறு கண்ணாயிரம் பிட்டியில் ஊசியை குத்தினார்.
கண்ணாயிரம் இழுத்து மூச்சுவிட்டு விட்டு மீண்டும் தூங்கினார். டாக்டர்..ம் நல்லா தூங்கட்டும் என்று சொல்லிவிட்டு அடுத்த பகுதிக்கு சென்றார்.
இந்த நேரத்தில் கண்ணாயிரத்தை தேடி பூங்கொடி சுடிதார் சுதா, பயில்வான்…மற்றும் இளைஞர்கள் விரைந்து வந்தனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதிக்குள் செல்ல முயன்றனர். ஆஸ்பத்திரி ஊழியர்கள்..அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.
சிகிச்சை அளிக்கிறாங்க.. இப்போ உள்ளே வராதீங்க..காலையிலே வந்து பாருங்க என்றனர்.
பூங்கொடி அவர்களிடம்..என் வீட்டுக்காரரு இருக்காரா.. பாத்துச் சொல்லுங்க என்க ஊழியர்கள் அவரிடம் உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன என்று கேட்க.. பூங்கொடி.. அட எங்கே போனாலும் இது ஒரு பிரச்சினையா போச்சு.. பயில்வான் சார் எங்க வீட்டுக்காரர் பெயரைச் சொல்லுங்க.. என்க.. பயில்வான் வேகமாக..கண்ணாயிரம் என்றார்.
ஊழியர்கள் காயம் அடைந்தவர்கள் லிஸ்டைப் பார்த்துவிட்டு கண்ணாயிரமுன்னு யாரும் இல்லையே என்றனர்.
அதைக்கேட்டதும் பூங்கொடி ஓ.. என்று அழ.. ஊழியர்கள் ஏம்மா.. அழாதம்மா.. பச்சை சேலையை மூடிக்கிட்டு ஒருத்தர் அட்மிட் ஆயிருக்காரு..அவர் பெயர் விவரம் தெரியல.. எமர்ஜென்சி வார்டில் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கார்.. அவரா என்று வந்து பாருங்க என்றார்.
எல்லோரும் உள்ளே செல்ல முயல.. அவர் மனைவி மட்டும் வாங்க என்று அழைத்துச்செல்ல பூங்கொடி அவர்கள் பின்னால் சென்றார்.
எமர்ஜென்சி வார்டில் கண்ணாடி வழியாக எட்டிப்பார்க்க…கண்ணாயிரம் பச்சை சேலையை இழுத்து மூடி தூங்குவதைப்பார்த்த பூங்கொடி..ஆமா..அவர் தாங்க.. என் வீட்டுக்காரரு.. அய்யோ.. அவருக்கு என்ன ஆச்சு என்று கதற.. ஊழியரோ.. காலையில்தான் சொல்லமுடியும் என்க.. பூங்கொடி ஓ என்று அழ.. ஊழியர்கள் அவரை வெளியே அழைத்துச்சென்றனர்.
கண்ணாயிரத்தின் முழு விவரங்களையும் கேட்டு குறித்துக்கொண்டனர். பூங்கொடி…கதறினார். என் வீட்டுக்காரர் பேச்சு மூச்சு இல்லாம இருக்காரே..எப்படி பாடுவாரு.. எப்படி ஆடுவாரு.. ஏங்க இப்படி முடங்கிக் கிடக்காரே.. நான் என்ன செய்வேன் என்று ஓங்கி அழுதார்.
பத்திரிகை நிருபர்கள் செய்தி கேகரிப்பதில் மும்முரமாக இருந்தனர். புகைப்படக்காரர்கள்..காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை படம்பிடிப்பதில் தீவிரமாக இருந்தனர்.
போலீசார்..காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்தபடி இருந்தார்கள். எங்கும் ஒரே பரபரப்பாக இருந்தது. கண்ணாயிரம் பிழைப்பாரா என்ற கேள்வி எழுந்ததால். பூங்கொடி மயங்கிவிழுந்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.