May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

குவா குவா சத்தம் எழுப்பிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram who made the sound of gua gua/ comedy story / Tabasukumar

21.11.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு சுற்றுலா பஸ்சில் ஏறி பூங்கொடி சேலையை சுற்றி படுத்துக்கொண்டார். அந்தப் பஸ் அகத்தியர் அருவியிலிருந்து புறப்பட்டபோது கவிழ.. தூங்கிக்கொண்டிருந்த கண்ணாயிரம் உள்பட சிலர் காயம் அடைய பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கண்ணாயிரத்தை பார்த்து பூங்கொடி மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளிக்க அவர் விழிக்கவில்லை. உடனடியாக பூங்கொடியை சுடிதார் சுதா அலாக்காக தூக்கினார். ஆஸ்பத்திரியில் பெண்கள் சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றாள். பெண் டாக்டர் அவரை பரிசோதித்துவிட்டு.. ஒண்ணுமில்ல.. வீக்கா இருக்காங்க..அட்மிட் பண்ணுங்க என்க.. பூங்கொடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சுடிதார் சுதா அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். இதை எதையும் அறியாமல் தீவிர சிகிச்சை பிரிவில் கண்ணாயிரம் சேலையை இழுத்து மூடி தூங்கிக் கொண்டிருந்தார். ஆஸ்பத்திரி முழுவதும் ஒரே அழுகை சத்தமாக இருந்தது. பயில்வான் அங்கும் இங்கும் ஓடியவண்ணம் இருந்தார்.
கண்ணாயிரம் தயிர்சாதம் சாப்பிட்டதால் மழையில் நனைந்ததால் தூக்கம் அவரை சுற்றி சுற்றி வந்தது. கொட்டாவி விட்டு விட்டு மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டார்.
காலை 7 மணி… வெயில் சுள்ளென்று அடித்தது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த கண்ணாயிரம் காலை நேர அவசர அழைப்பால் எழ முயன்றார். அவரால் முடியவில்லை. அவரது வலது காலை கட்டி தொங்கவிட்டிருந்தார்கள்.
என்ன இது..கட்டிப்போட்டிருக்காங்க..நான் எங்கே இருக்கேன் என்று கண்ணாயிரம் மலங்க மலங்க விழித்தபடி கேட்டார்.
அருகில் படுத்திருந்த ஒருவர்.. இந்த காலை பேப்பரைப் பார்..என்று கண்ணாயிரத்திடம் பேப்பரை நீட்டினார்.
கண்ணாயிரம் பேப்பரை வாங்கி முன்பக்கம் பார்த்தார். அவர் வந்த சுற்றுலா பஸ் கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
என்ன..இது..நாம வந்த பஸ்சில்லா.. இப்படி கவிழ்ந்து.. கிடக்கு..அதுவும் கலர் படமா போட்டிருக்காங்க.. அடே.. பஸ் பக்கத்திலே டிரைவர் நிற்காரு..பஸ் கவிழ்ந்து கிடக்கு.. அப்போ நான் எப்படி இங்கே வந்தேன்.. என்று அருகில் உள்ளவரிடம் கேட்க.. அவர்.. யோவ்..செய்தி நாலாம் பக்கம் என்று போட்டிருக்கில்லா அதை பாருப்பா என்று எரிச்சலுடன் சொன்னார்.
உடனே கண்ணாயிரம்…ம் நாலா பக்கமும் விசாரிச்சி நாலாம் பக்கத்திலே போட்டிருப்பாங்க போலிருக்கு..ம்.. ஒண்ணு. இரண்டு.. மூணு.. ஆ..நாலு..ஆ.. செய்தி போட்டிருக்காங்க.. கோட்டை எழுத்திலே இருக்கே..
அகத்தியர் அருவி அருகே
சுற்றுலா பஸ் கவிழ்ந்தது.
20 பயணிகள் படுகாயம்.-4 பேர் உயிர் ஊசல்..
அம்பை..நவ.20-
அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு திரும்பிய சுற்றுலா பயணிகள் பஸ் கவிழ்ந்தது. இதில்20 பேர் படுகாயம் அடைந்தனர். நான்கு பேர் உயிர் ஊசலாடுகிறது.

சுற்றுலா பயணிகள்.

புதுவையை சேர்ந்தவர் பயில்வான் (வயது50). இவர் தலைமையில் 50 சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தனர். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர்கள் நெல்லை வந்து அங்கிருந்து குற்றாலம் சென்றனர். குற்றால அருவியில் வெள்ளம் பெருகி ஓடியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் அகத்தியர் அருவியில் குளிக்க பாபநாசம் வந்தனர். அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு மீண்டும் புதுவை புறப்பட்டனர்.
அப்போது மழை கொட்டியது. இதனால் சுற்றுலா பஸ் தள்ளாடி தள்ளாடி சென்று கவிழ்ந்தது.
இதை படித்த கண்ணாயிரம், அடே…இன்னும் செய்தி இருக்கே.. ஒன்னுக்குப் போகணுமே.. காலை கட்டிப்போட்டிருக்காங்களே.. என்ன செய்ய என்று புலம்ப.. அருகில் படுத்திருந்தவர்.. ஏய்.. அதெல்லாம் பெரிய கட்டு இல்லை.. கையாலே அவுரு வந்திரும்.. இப்பம் கூட நான் அப்படிதான் கயிற்றை அவுத்திட்டு பாத்ரூம் போயிட்டு வந்தேன்.. போ என்றார்.
கண்ணாயிரம் காலை கட்டி தொங்கவிட்டிருந்த துணியை கழற்றிவிட்டு மெல்ல எழுந்தார். தொடையில் பயங்கர வலி..ஆ.. வலிக்குதே.. அதில் மருந்து போட்டு கட்டியிருந்தார்கள். கண்ணாயிரம் இதைப் பார்த்து இதெல்லாம் எப்போ நடந்தது.. அதை பிறகு யோசிப்போம்.. முதலில் ஒண்ணுக்கு என்றபடி.. கண்ணாயிரம் பேப்பரை பெட்டில் போட்டுவிட்டு மெல்ல எழுந்து.. வலது தொடையில் கைவைத்து தாங்கியபடி விந்தி விந்தி நடந்து பாத்ரூம் இருக்கும் அறைக்கு சென்றார்.
குப்பென்று வந்த வாடை மயக்க கண்ணாயிரம் மூக்கைப் பொத்திக்கொண்டு.. பாத்ரூம் அறைக்கதவை தள்ளினார். அங்கே ஏற்கனவே ஒருவர் இருக்க.. அவர் ஏய்..ஏய் என்று கத்த பதிலுக்கு கண்ணாயிரம்.. ஓவ் பூட்டிட்டு இருக்க வேண்டியதுதானே என்றார்.
உள்ளிருந்தவர்..என்னவே..விவரம் தெரியாம பேசுற.. உள்ளே லாக் இல்லைய்யா.. கொஞ்சம் பொறும் என்றார்.
கண்ணாயிரம்..என்ன இது..உள்ளே லாக் இல்லைங்கிராரு..நாம எப்படி சமாளிக்கிறது.. என்று யோசிக்க..உள்ளே இருந்தவர் மெதுவாக கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்.
கண்ணாயிரத்தை ஒரு முறை முறைத்துவிட்டு செல்ல கண்ணாயிரம் பயந்துபோய் வணக்கம் ஒன்றை போட்டுவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தார்.
கதவை இழுத்து பிடித்துக்கொண்டு இருந்தவர்..யாரும் வந்து கதவை இழுத்து திறந்துவிடக் கூடாது என்பதாக சத்தமாக பாட்டுபாடினார். காது குடுத்து கேட்டேன்.. அஹா குவா குவா சத்தம்.. இனி கணவனுக்கு கிடைக்காது..குழந்தைக்குத்தான் முத்தம்..குவ்வா..குவ்வா..குவ்வா..குவ்வா..குவ்வா..என்று ராகம் போட்டு பாடினார்.
பாட்டின் அடுத்த வரி தெரியாததால் குவா..கூ..கு..கு..குவா..குவா..என்று மிமிக்ரி குரலில் சத்தமிட.. ஏதோ குழந்தை சத்தம் என்று ஆஸ்பத்திரி ஊழியர்கள் நினைக்க.. கதவைத் தட்ட..கண்ணாயிரம்..கதவை திறக்காமல்.. குவ் வா..குவ்வா..கூகூ
.குவ்வா.. என்று வேகமாக குரல் கொடுக்க ஊழியர்களுக்கு சந்தேகம் வலுத்தது.
ஆண்கள் கழிவறையில் குழந்தையா என்று வேகமாக தள்ள..கண்ணாயிரம் முன்னே தள்ள..குவா..குவா..குவா என்று குரல் கொடுக்க.. குழந்தையை காப்பாற்றியாக வேண்டும் என்று கதவை ஓங்கித் தள்ள உள்ளே கண்ணாயிரம் இருந்தார்.
என்னங்க லாக் இல்லாத கதவை ஏன் தள்ளினீங்க என்று கண்ணாயிரம் கேட்க.. ஊழியர்களோ. .குழந்தை எங்கே.. குழந்தையை என்ன பண்ணுனே என்று கேட்க கண்ணாயிரம் என்ன குழந்தையா..அப்படி ஒண்ணும் இல்லை என்றார்.
ஊழியர்களோ..ஆ..குவா குவா..குவா என்று சத்தம் கேட்டிச்சே..என்க.. கண்ணாயிரம்..அதுவா.. கழிவறை கதவுக்கு லாக் இல்லையா.. அதான் உள்ளே ஆள் இருக்கிறது தெரியுறதுக்காக குவா..குவா..குவான்னு பாட்டு பாடினேன்..என்க..ஊழியர்கள்.. கோபத்தில் தங்கள் பற்களை கடித்தனர்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.