புளியங்குடியில் நள்ளிரவில் ஜவுளிக்கடை ஊழியர் குத்திக்கொலை
1 min readA textile shop worker was stabbed to death in Puliangudi at midnight
20.11.2023
தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையம் அருகே உள்ள தெருவில் வசித்து வருபவர் அய்யாகுட்டி(வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கனக லெட்சுமி. இவர்களுக்கு ஆவுடை செல்வி என்ற மகள் உள்ளார். இவர் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார்.
இந்நிலையில் ஆவுடைச்செல்விக்கு வருகிற 23-ந்தேதி சிவகிரி அருகே உள்ள ராயகிரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கான பணிகளை அய்யாகுட்டி செய்து வந்த நிலையில், நேற்று இரவு வரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு அவர் திருமண அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்.
சுமார் 11 மணி அளவில் அவர் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். அப்போது வீட்டுக்கு வெளியே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த ஆவுடை செல்வி, கதவை அடைக்க மறந்து தூங்க சென்றுவிட்டார். கனக லெட்சுமியும், ஆவுடை செல்வியும் மற்றொரு அறையில் தூங்க சென்ற நிலையில் அய்யாகுட்டி மட்டும் தனி அறையில் படுத்திருந்தார்.
அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த கத்தரிக்கோலால் அய்யா குட்டியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். உடனே அய்யாகுட்டி வலி தாங்க முடியாமல் அலறி துடித்த நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் மகள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் அய்யாகுட்டியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட அய்யாகுட்டி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யாகுட்டியை கொலை செய்த வாலிபர் யார்? எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி தப்பி ஓடிய மர்ம நபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.