பாவூர்சத்திரம் அருகே பள்ளி மாணவனை கன்னத்தில் அறைந்த கண்டக்டர்
1 min read
A conductor slapped a school student on the cheek near Bhavoorchatram
23.12.2023
தென்காசி மாவட்டம்,
பாவூர்சத்திரம் அருகே அரசு பஸ்ஸில் ஏறிய பள்ளி மாணவனை கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளால் திட்டிய கண்டக்டரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை தாக்கிய கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாவூர்சத்திரம் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவன் தனது தங்கை, பெற்றோருடன் சேர்ந்து புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் சித்தேஷ் குமார் மற்றும் மகள் தியாஸ்ரீ ஆகிய இருவரும் அடைக்கலப்பட்டணம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். இருவரும் எப்பொழுதும் சிவகாமிபுரத்திலிருந்து அடைக்கலப்பட்டணம் பள்ளிக்கு செல்வதற்கு அரசு பஸ்களையே பயன்படுத்தி வந்தனர். வழக்கம்போல் நேற்று மாலையில் பள்ளி முடிந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ள அடைக்கலப்பட்டணம் பஸ் நிலையத்திற்கு வந்து அரசு பஸ்ஸில் ஏற நின்றுள்ளனர் சித்தேஷ்குமார் மற்றும் தியா ஸ்ரீ. அப்பொழுது நெல்லையிலிருந்து தென்காசி நோக்கி வந்த வண்டி எண் TN 72N 2390 எனும் பஸ் அடைக்கல பட்டணம் பஸ் நிலையம் அருகே வந்த பொழுது பஸ் நிலையத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி நின்றதாக கூறப்படுகிறது. மாணவர்கள் சித்தேஷ்குமார் மற்றும் அவரது தங்கை தியா ஸ்ரீ ஆகிய இருவரும் ஓடி சென்று பஸ்ஸில் ஏறியுள்ளனர் அப்பொழுது பஸ்ஸில் கண்டக்டராக இருந்த முருகன் இருவரையும் திட்டியதாக கூறப்படுகிறது. சிவகாமிபுரம் விலக்கு பகுதியில் வந்தவுடன் மாணவர்கள் தங்களின் பஸ் நிறுத்தம் வந்துவிட்டதாகவும் தங்களை இறக்கி விடுமாறும் கூறியுள்ளனர். அதற்கு கண்டக்டர் முருகன் தகாத வார்த்தைகளுடன் சித்தேஷ்குமாரை தனது தங்கை மற்றும் பஸ் பயணிகள் முன்பே திட்டியதோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு சித்தேஷ் குமார் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவன் தனது தங்கையுடன் வீட்டிற்கு சென்ற பொழுது தந்தையிடம் நடந்த சம்பவங்கள் குறித்து எடுத்துக் கூறியுள்ளார் உடனடியாக அவரது தந்தை சுரேஷ் மகன் மகள் இருவரையும் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகார் மனு கொடுத்தார். இதுகுறித்து அறிந்த ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால்பர்ணபாஸ் ஆகியோர் சம்பவம் குறித்து மாணவரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
பாவூர்சத்திரம் அருகே அரசு பஸ்ஸில் ஏறிய பள்ளி மாணவனை கன்னத்தில் அறைந்த கண்டக்டரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட கண்டக்டர் முருகன் மற்றும் பஸ்ஸை ஒட்டிய டிரைவர் சுரேஷ் ஆகிய இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .