ஹபீபி- திரைவிமர்சனம்
1 min read
Habibi – Movie Review
18/6/2026
தமிழ்த் திரையுலகில் அத்திபூத்தாற்போல் வரும் ஓரிரு திரைப்படங்கள் மைல் கல்லாக
உருவெடுக்கும்..!அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள “ஹபீபி” திரைப்படம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது..!
ஹபீபி என்ற அரபுச் சொல்லுக்கு “என் பிரியமானவளே” என்று பொருள்!
ஒரு குறிப்பிட்ட ஜாதி, மதத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையைப் படம் முழுக்க காட்டும் படங்கள் பல வந்துள்ளன.
இஸ்லாமியர் அன்றாட வாழ்வில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இப்படத்தில் நுட்பமாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்..! அந்த வகையில் இதுதான் முதல் முழுமையான முஸ்லீம் குடும்ப வாழ்வைச் சொல்லும் படம்…!
குடும்பப் பொருளாதாரத்துக்காக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்லும் கணவரைப் பிரிந்து தவிக்கும் இஸ்லாமியப் பெண்களின் துயரத்தைச் சொல்லும் படம்…!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊர்தான் கதைக்களம்..!
1980 களில் தொடங்கி தற்போது வரை சுமார் 45 ஆண்டுகால இஸ்லாமியக் குடும்பத்தின் வாழ்வியலை வர்ணிக்கிறது- ஹபீபி திரைப்படம்.
யூசுஃப் ( கஸ்தூரி ராஜா) ஒரு தறி நெசவு செய்யும் தொழிலாளி. அவருக்கு ஒரு தம்பி.
யூசுஃப் குடும்பமும் அவரது தம்பி குடும்பமும் வறுமையை வெல்ல போராடும் வாழ்க்கைப் போராட்டமே கதை..!
யூசுஃப் – க்கு ஒரு மகன் அபுதாஹிர் (நடிகர் ஈஷா_எம்).
பத்தாம் வகுப்பு ஃபெயில் ஆனவுடன் படிப்பை விட்டவர்.
யூசுஃபின் தம்பி குடும்ப பாரத்தைச் சுமப்பதற்காக அரபு நாடு ஒன்றுக்கு வேலைக்குச் செல்கிறாரர்.
காலம் உருண்டோட…
1990 களின் தொடக்கத்தில் உலகமயமாக்கலால் ஏற்படும் மாற்றத்தால் நெசவுத் தொழிலும் இயந்திரமயமாகிவிட ,
கைத்தறித் தொழில் நலிவடைகிறது…!
அந்த ஊரில் பெரும்பான்மையினர் கைத்தறியை விட்டுவிட்டு பொருளீட்ட அரபு நடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுகிறார்கள்.
யூசுஃப் மட்டும் பிடிவாதமாக கைத்தறியை விட்டுவிடாமல் வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர்கிறார்.
ஒரு கட்டத்தில் வறுமை தாங்க முடியாமல் தம்பி வெளிநாடு சென்றுவிட யூசுஃப் மனப்பாரத்துடன் கைத்தறியைக் கைவிடும் சூழல் ஏற்படுகிறது.
கதை 2000 க்குள் பயணிக்கத் தொடங்க, யூசுஃப்பின் மகன் வாலிபனாகிறான்.
அவன் தனது பால்யகாலத்து காதலுடன் ஊரிலேயே கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு காதலியைக் கரம்பிடிக்கப் போராடுகிறான்.
அந்தஸ்து வேறுபாட்டால் அந்தக் காதல் ஒரு விபரீத நிகழ்வுடன் முறிந்து போக, அவன் கனத்த இதயத்துடன் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று விடுகிறான்.
அபுதாஹிர் பத்தாண்டுகள் கழித்து 2023 ல் ஊர் திரும்புகிறான். 40+ வயதான அவனுக்கு
ஊரிலேயே இன்னொரு பெண்ணை பேசி மணம் முடிக்க…. எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு திருமணம் தடைபட …
அந்தக் கவலையில் அப்பா யூசுஃப் மரணிக்கிறார்.
மகன் மீண்டும் வெளிநாடு செல்ல முடிவெடுத்து விமானத்தில் ஏறுவதற்காக திருவனந்தபுரம் செல்லும் வழியில் தனது பால்யகால காதலியை பதின்ம வயது வந்த அவளது இரு பிள்ளைகளுடன் சந்திக்கிறான்.
அவளது வாழ்க்கையின் எதிர்பாரா திருப்பத்தை அவள் பகிர…. பிறகு என்ன நடந்தது என்பதைச் சொல்லாமலேயே படம் முடிவடைகிறது..!
இஸ்லாமியக் குடும்பத்தினரின் வாழ்வியலை மிகையின்றி இயல்பாகச் சொல்லியுள்ளனர்.
1980, 1990, 2000, 2023 காலகட்டங்களின் கதை நகர்வை அருமையாகச் சித்தரித்துள்ளனர்.
படிக்க வாய்ப்பின்றி பழமைக் கருத்துகளுக்கு ஆட்பட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் வாழும் கேரக்டராக
அனுஸ்ரேயா_ராஜன்* (யூசுஃபின் தம்பி மனைவி)
கல்லூரி வரை பயின்று சற்று சுதந்திரமாக தோழிகளுடன் வெளியே வரும் கேரக்டராக மாளவிகா_மனோஜ் (யூசுஃப் மகனான அபுபக்கரின் பால்யகால காதலி)
கல்லூரி பயின்று முற்போக்குச் சிந்தனையுடன் வலம்வரும் கேரக்டராக தனஸ்ரீ_சுதாகரன் (அபுபக்கருக்காக பேசி முடிக்கப்பட்ட மணப்பெண்)
இந்த மூன்று கதை பாத்திரங்களும் அந்தச் சமூகத்தின் அந்தந்தக் காலகட்டத்தின் சாட்சியாகவே காட்சிப்படுத்ப்பட்டுள்ளனர்.
அம்மி, ஆட்டுக்கல், மண்பாண்டங்கள், தூக்குச்சட்டி, என ….
இப்போது வழக்கொழிந்து விட்ட அக்கால வீட்டு உபயோகப் பொருள்கள், கைத்தறி
டேப் ரிகார்டர், ஃபோட்டோ ஸ்டுடியோ, அம்பாசிடர் கார், சைக்கிள், சைக்கிள் கடை … என அந்தக் காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்வது போலுள்ளது..!
படத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஊரின் வளர்ச்சி வீடுகளின் கால மாற்றத்திற் கேற்ற வடிவங்கள், போக்குவரத்தின் நவீன வாகன மாற்றங்கள்
உடை மாற்றங்கள்…
காலத்திற்கேற்ப பெண்களின் கல்வியறிவு மதச் சட்டங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் சமூகத்தில் பெண்களின் கல்வி முன்னேற்றம்.
அதனால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த அவர்கள் மதிப்புடனும் பொருளாதார பலத்துடனும் தைரியமாக
பொது இடங்களில் நடமாடுவது..
….. என படத்தைச் செதுக்கியுள்ளார் இயக்குநர் மீரா_கதிரவன்…!
ஒளிப்பதிவு அருமை…! மேற்குத் தொடர்ச்சி மலையடிவார ஊரான கடையநல்லூரை அவ்வளவு அழகாகப் படம்பிடிதுள்ளனர்.
இப்படம் யகாந்தன் பாலகுமாரன் போன்ற தேர்ந்த எழுத்தாளர்களின் நாவல் போன்றே எனக்குத் தோன்றுகிறது..!
ஒரு முழு நீள நாவலை திரைப்படமாகப் பார்ப்பதுபோல உள்ளது…!
படத்தில் பணியாற்றிய இயக்குநர் உட்பட தொழில் நுட்பக் கலைஞர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்…!
கஸ்தூரிராஜா (யூசுஃப்) தவிர அத்தனை நடிகர்களும் அவ்வளவு பிரபலமாகாத மற்றும், புதுமுகங்களாக இருந்தாலும், நடிப்பில் அனுபவ நடிகர்கள் போல முத்திரை பதித்துள்ளனர்…!
கஸ்தூரிராஜா அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த்திரையுலகிற்கு ஒரு சிறந்த குணசித்திர நடிகர் கிடைத்துவிட்டார்..!
வழக்கமான மசாலா திரைப்படங்களின் எந்த நெடியும் துளியுமின்றி இஸ்லாமியர்களின் வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்துகிறார்கள்…!
அருமையான திரைப்படம்…!
தவற விடாதீர்கள்…!!
-தன்னூத்து குமரன்