May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

ரூ40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவர் கைது

1 min read

Kuthukalwalasai panchayat president arrested for taking Rs 40 thousand bribe

11.1.2024
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஊராட்சி யில் வீடுகட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் செ.சத்யராஜ் (வயது 39). இவர் குத்துக்கல்வசை பஞ்சாயத்து பகுதியில் வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் குத்துக்கல்வலசை ராஜா நகரில் நந்தனா என்பவர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவருக்காக கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ரஜினிஷ்பாபு வீடு கட்டும் பணியை மேற்கொண்டுள்ளார். வீடு கட்டுவதற்கான அனுமதி பெற குத்துக்கல்வலசை பஞ்சாயத்து அலுவலகத்தில் நந்தனா விண்ணப்பித்திருந்தார். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றால் வீடு கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையில் 2 சதவீதம் ரூ.46 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று ரஜினிஷ் பாபுவிடம் பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

அதற்கு ரஜினிஷ்பாபு லஞ்சம் தரமுடியாது என கூறியுள்ளார். அப்போது வீடு கட்ட பஞ்சாயத்து அனுமதி தரமாட்டேன் என பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் கூறியுள்ளார்.

இதனால் ரஜினிஷ்பாபு தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. பால்சுதனிடம் புகார் தெரிவித்துள்ளார். டிஎஸ்பி பஆல்சுதன் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.46 ஆயிரத்தை நேற்று ரஜினிஷ்பாபு குத்துக்கல் வலசை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த பஞ்சாயத்து தலைவர் செ.சத்யராஜிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் ரூ.40 ஆயிரம் போதும் என கூறி ரூ.6 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில் பஞ்சாயத்து அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி பால்சுதன், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் அதிரடியாக பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் சென்று ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காண்ட்ராக்டர் சௌந்தர்ராஜன் ஆகியோரை கைது செய்து லஞ்ச பணம் ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் பஞ்சாயத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
வீடு கட்ட அனுமதி வழங்க பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் லஞ்சம் பெற்ற சம்பவம் தென்காசி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.