சுரண்டையில் ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தல்-2 பேர் கைது
1 min read
Smuggling of Rs. 5 lakh tobacco products in Surandi- 2 persons arrested
2.2.2024
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நூதன முறையில் தடை புகையிலை செய்யப்பட்ட பொருட்களை கடத்திய இரண்டு பேர்களை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் படி தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவு படி சுரண்டைப் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காய்கறி வாகனம் என்று எழுதப்பட்டிருந்த
ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மினி லாரியில் பின்பக்க சரக்கு வைக்கும் தொட்டியை பார்த்தபோது அதனுள் டூத் பேஸ்ட், டூத் பிரஸ், மற்றும் மளிகை பொருட்கள், மிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் அட்டைப் பெட்டிகளில் இருந்தது.
மேலும் அந்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்தபோது அந்த மினி வேனில் பின்பக்க தொட்டியின் அடியில் ரகசிய அறை ஒன்று இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த ரகசிய அறையை தகர சீட்டுகளை கொண்டு தொட்டியை போலவே வித்தியாசம் தெரியாமல் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. அந்த ரகசிய அறையை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அந்த மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த பரங்குன்றாபுரம் பகுதியைச் சார்ந்த கார்த்திக் (வயது 21) என்பவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த மினி லாரி சுரண்டை அருகே உள்ள பறங்குன்றாபுரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 39) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் இளங்கோவன் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு நின்ற சொகுசு காரில் தடைபுகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து இளங்கோவனை கைது செய்த போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்திய மினி வேன், சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 3 வாகனங் களையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் நீதிபதி இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.