April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்காக பூங்கொடி பாடிய பாட்டு/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Poongodi sang song for Kannayirath/ comedy story/ Tabasukumar

9.2.2024
கண்ணாயிரம் மறைந்துவிட்டதாக வந்த தகவலையடுத்து அவரது நண்பர்கள் அஞ்சலி செலுத்த வந்தபோது கண்ணாயிரம் மனைவி பூங்கொடி அவர்களை விரட்டினார்.
இந்நிலையில் கண்ணாயிரத்துக்கு மறுமணம் என்று அறிந்து வந்த கண்ணாயிரம் மாமனார் அருவாஅமாவாசை கண்ணாயிரம் வீட்டுக்கு வந்து தகராறு செய்து அவர் காதை கடித்து அருவாளுடன் வெளியேப் பாய்ந்தார்.
கண்ணாயிரம் நண்பர்கள் கண்ணாயிரம் மறைந்து விட்டதாகச் சொல்ல அதை அருவாஅமாவாசை மறுக்க.. கண்ணாயிரம் இருக்காறா இல்லையா என்பதை அறிய அருவா அமாவாசை அருவாளை மறைத்துவைத்துக் கொண்டு கண்ணாயிரம் வீட்டுக்கு மீண்டும் வந்து கதவைத் தட்டினார். அருவாஅமாவாசை வருவதை அறிந்து கண்ணாயிரம் ஏணி வழியாக ஏறி மச்சுக்குச் சென்றார்.
உடம்பு முழுவதும் வெள்ளை வேட்டியைச் சுற்றிக்கொண்டார். மச்சில் இருந்த ஒரு பானையை எடுத்து தலையில் மாட்டினார். லேசாகத் தூக்கிப் பார்த்தார். வரவில்லை. சுவற்றில் முட்டி பானையில் சின்ன ஓட்டை ஏற்படுத்தினார்.
அப்பாட.. இப்பதான் கொஞ்சம் மூச்சுப் போகுது.. சோழக் கொல்லை பொம்மை மாதிரி டிரங்பெட்டிக்கு முன்னால் மறைந்து இருப்போம்.. அருவாஅமாவாசை வந்தா கீழே தேடிவிட்டு போகட்டும் என்று நினைத்தார்.
இந்த நேரத்தில் அருவாஅமாவாசை கதவைத்தட்ட பூங்கொடி..மெல்ல யாரது என்று கேட்டார். அதற்கு அருவாஅமாவாசை .நான்தான் வந்திருக்கேன் என்க.. நான்தான் என்றால் யார் என்று பூங்கொடி கேட்க அருவாஅமாவாசை.. பெத்த அப்பனையே யாருன்னு கேட்கியம்மா… நான் உன்னை எப்படி சீராட்டி பாராட்டி வளர்த்தேன்.. என்னை மறந்திட்டியம்மா என்று அடுக்கிக் கொண்டேப் போனார்.
அதைக் கேட்டு சுதாரித்துக்கொண்ட பூங்கொடி..அப்பாவா.. அப்பான்னு சொல்லவேண்டியதுதானே.. அந்த அருவாவை என்ன பண்ணுனீங்க.. அருவாவைக் கண்டா அவர் பயப்படுவாரு.. என்க.. அருவாஅமாசை.. அதாம்மா.. கடையிலே கொடுத்துட்டேன்.. நல்ல அருவா எடுத்துவைக்கச் சொல்லியிருக்கேன்.. பிறகு போய் வாங்கணும் என்றார்.
பூங்கொடியும் அப்படியா.. என்றபடி கதவைத் திறந்தார். அருவா அமாவாசை இடுப்பில் மறைத்துவைத்த அருவா தெரியாத அளவிற்கு வேட்டியால் மறைத்தபடி உள்ளே வந்தார்.
என்னம்மா.. அவனை எங்கே என்று கேட்க.. மச்சில் இருந்த கண்ணாயிரத்துக்கு பக் என்றது.
வந்துட்டான்யா.. வந்துட்டான்.. என்றபடி பானை ஓட்டை வழியாகப் பார்த்தார்.
பூங்கொடி மச்சியைப் பார்த்தபடி.. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.. என்று பாட.. அருவா அமாவாசை.. என்னம்மா.. கண்ணாயிரத்தை எங்கேன்னு கேட்டேன். நீ பதில் சொல்லலையே..என்றார்.
பூங்கொடி அதாப்பா..அவர் இங்கே இல்லை என்று சொல்ல.. அருவாஅமாவாசை.. அதுசரி.. இங்கே இல்லை..வேறு எங்கே என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே.. சொல்லாதே யாரும் கேட்டால்.. எல்லோரும் தாங்க மாட்டார் என்று பாட.. அருவாஅமாவாசை.. யாரு.. யாரு.. யார் பாடுறது என்று கேட்க.. பூங்கொடி.. வெளியில் யாரோப் பாடுறாங்கப்பா என்றார்.
அதற்கு அருவா அமாவாசை.. எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே என்க.. பூங்கொடியோ..ஆமாப்பா.. அது நீங்க எங்கேயோ கேட்டகுரல்.. இங்கே கேட்ட குரல் இல்லை என்றார்.
அப்படியா..சரி..கண்ணாயிரத்தை எங்கே என்று அருவாஅமாவாசை கேட்க.. பூங்கொடி மச்சைப் பார்த்தபடி..கண்ணாயிரம் தெரிகிறாரா இல்லையா என்று பார்த்தார்.
அவர் தெரியவில்லை. உடனே அவரா தெரியலப்பா என்று பூங்கொடி சொல்ல.. அருவாஅமாவாசை.. என்ன தெரியலையா..உனக்கு தெரியாம..எங்கேப் போனான்..என்று கேட்டார்.
அதற்கு பூங்கொடி.. தெரியலப்பா என்க.. அருவாஅமாவாசை என்ன..நீ எதற்கெடுத்தாலும் தெரியல.. தெரியலங்கிற என்று கோபப்பட.. பூங்கொடி மச்சைப் பார்த்தபடி.. என்னபா.. தெரியலன்னா.. தெரியலைன்னுதானே சொல்வேன் என்க.. அருவாஅமாவாசை.. அய்யோ என்மகா ஒருமாதிரி பேசுறாளே என்று கவலைப் பட்டபோது.. வீட்டின் ஒரு பகுதியில் இருந்து புகைவர.. அதென்னம்மா.. புகை என்று அருவா அமாவாசை பதட்டமாகக் கேட்க.. பூங்கொடியோ.. அட அது புகையில்லப்பா.. ஆவி.. நீங்க பயப்படாதீங்க என்க.. அருவாஅமாவாசை.. என்ன ஆவியா.. வீட்டிலே ஆவியா என்றபடி மடியில் மறைத்துவைத்திருந்த அருவாளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார்.
பூங்கொடியோ.. இட்லிசட்டியிலிருந்து தட்டில் போட்ட இட்லியிலிருந்து ஆவி பறப்பதை எட்டிப்பார்த்துவிட்டு.. சீக்கிரம் ஆவி போயிடும் என்றார்.
அது எங்கேம்மா போகும் என்று அருவாஅமாவாசை கேட்க.. மச்சுக்குப் போகும் என்று பூங்கொடி சொன்னார்..ம்.. ஆவி இங்கேத்தான் சுத்திக்கிட்டு இருக்கும்.. அதைப் பிடிச்சி என்ன செய்யப் போறோம்.. நமக்கு பாடிதான் முக்கியம் என்று நினைத்த அருவாஅமாவாசை.. ஏம்மா பாடியை எங்கேம்மா என்று கேட்டார்.
அது டிரெங் பெட்டியிலே இருக்கு அதை ஏன் கேட்கிறீங்க என்று பூங்கொடி கேட்க.. அருவாஅமாவாசையோ..ரொம்ப நேரம் டிரங்பெட்டியிலே பாடி இருக்கக் கூடாதும்பா .. நாறும் என்று அருவாஅமாவாசை சொல்ல.. பூங்கொடியோ..ஏம்பா..பாச்சான் உருண்டை எல்லாம் போட்டிருக்கன் பாடி நாறாது என்று சொல்ல.. அருவாஅமாவாசையோ..என்ன பாச்சான் உருண்டை போட்டாலும் பாடி தாங்காதம்மா.. பாடியை நீ எப்படிம்மா வச்சஎன்க.. பூங்கொடியோ.. மடிச்சிதான் வச்சேன் என்றார்.
அதற்கு அருவா அமாவாசை.. ஏம்மா.. டிரெங்பெட்டி உன் கலியாணத்துக்குநான் வாங்கிக் கொடுத்தது.. அதிலயா பாடியை வச்சிருக்கே.. அய்யோ என்க.. பூங்கொடியோ..ஏம்பா டிரெங்பெட்டியிலே பாடியைவைக்கக் கூடாதா என்று அப்பாவியாகக் கேட்டார்.
அருவாஅமாவாசை..ஏம்மா..நான் வாங்கிக்கொடுத்தது பெரிய டிரங் பெட்டிதான்..எவ்வளவு பெரிய பாடியையும் வைக்கலாம்..ஆனா ரொம்ப நாள் வைக்கக் கூடாதும்மா..என்க.. பூங்கொடி..டிரங்பெட்டி பழசாயிட்டுன்னு சொல்லுறீயளாப்பா..அவருக்கு அது ரொம்பப் பிடிக்கும்.. என்றார்.
அருவாஅமாவாசை.. ஏம்மா அவனுக்குப் பிடிக்கும் என்பதற்காக.. டிரங்பெட்டியிலே பாடியை வைக்க முடியுமா. பாடியை வைக்க வேற பெட்டி இருக்கும்மா.. இந்த பெட்டி பழசாயிட்டுல்ல.. அதை ஏங்கிட்டக் கொடு.. உனக்கு வேற புதுப்பெட்டி வாங்கித் தாரன் என்க.. அந்தப் பெட்டி அவருக்கு ரொம்பப் பிடிக்குமப்பா.. அதை தரமாட்டேன். அது இங்கே இருக்கட்டும் என்று பூங்கொடி சொன்னார்.
உடனே அருவாஅமாவாசை.. சரிம்மா.. பெட்டியை வச்சிக்க.. பாடியைக் கொடு.. என்றார்.
அதைக்கேட்ட பூங்கொடி..பாடியா..அதை ஏன் கேட்கிறீங்கப்பா என்று கேட்க.. அருவாஅமாவாசை.. புதைக்கத்தான் என்றார்.
பாடியைப் புதைக்கப் போறீயளா என்று பூங்கொடி கேட்க..புதைக்க வேண்டாமா அப்போ எரிப்பமா என்று அருவாஅமாவாசை கேட்டார்.
ஏம்பா..உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிட்டா பாடியை கேட்கிறீங்க.. என்க அருவாஅமாவாசை..ஏம்மா..நான் பைத்தியமா.. சொல்லு நான் பைத்தியமா.. நீ பைத்தியம் உன் புருசன் கண்ணாயிரம் பைத்தியம் என்று திட்ட. .மச்சிலிருந்த கண்ணாயிரம்..சம்மந்தம் இல்லாம.. என்னை பைத்தியம் என்று சொல்லக் கூடாது என்க.. அருவாஅமாசை யாரு..யாரு..என்பேச்சுக்கு எதிர்குரல் கொடுக்கிறது என்க.. பூங்கொடியோ.. அது ஒண்ணுமில்லப்பா..நீங்க பேசுறது எதிரொலிக்குது..என்றார்.
அருவாஅமாவாசை..என்ன எதிரொலியோ.. தலைவலியோ எனக்கு முக்கியம் டிரெங்பெட்டி.. அது எங்கே இருக்கு என்று அருவாஅமாவாசை கேட்க.. மேல மச்சில இருக்கு..ஆனா ஒண்ணு டிரெங்பெட்டியை நீங்க எடுத்துக்கிங்க.. பாடியை என்கிட்ட கொடுத்திடுங்க..என்றார்.
என்னது பாடியைஉங்கிட்ட கொடுக்கணுமா..என்னம்மா சொல்லுற என்று அருவாஅமாவாசை கேட்க.. பூங்கொடி.. ஆமாப்பா..பாடி எனக்கு ரொம்பப் பிடிக்கும்..அதை கொடுத்திடுங்கப்பா என்க.. அருவாஅமாவாசை கண்களை கசக்கியபடி..என்னம்மா.. இப்படி ஆயிட்டியேம்மா.. நீ சொல்லுறபடியே செய்யுறன் என்றார்.
சரி..நீங்க அருவா கொண்டு வரலையே என்று பூங்கொடி கேட்க..இல்லம்மா என்று அருவா அமாவாசை சொன்னார்.
பாடியோடு டிரங்பெட்டியை கொண்டு போயிடணுமுன்னு நினைத்த அருவாஅமாவாசை.. ஏம்மா..நீ வேற முழுகாம இருக்க.. நீ. உள்ளேப் போயிடு.. பாடியை ..ஆ.. டிரங்பெட்டியை தூக்கிட்டு வரும்போது தூசி பறக்கும்.. முழுகாம இருக்கிற பொண்ணு பழையப் பெட்டியைப் பாக்கக்கூடாது.. போ..பெட்டியை கீழே எடுத்துவந்ததும் பாடியை உன்கிட்ட கொடுத்திடுறன் சரியா என்றார்.
பூங்கொடி தலையை ஆட்டினார்.
கண்ணாயிரத்துக்கு சிக்னல் கொடுக்க.. “கண்ணா.. கருமை நிற கண்ணா.. உன்னை காணாத கண்ணில்லையே.. உன்னைப் பிடிப்பாருண்டோ.
உன்னைப் பிடிக்காதவர் யாரும் உண்டோ..
அருவா இல்லாமல் மாமா வருவார் கண்ணா..
அஞ்சாமல் நீ அங்கு இருப்பாய் கண்ணா..
இடம் தேடி ஓரிடத்தில் மறைவாய் கண்ணா..
என் இதயத்தில் நீ என்றும் இருப்பாய் கண்ணா..” என்று தொடர்ந்து பாட கண்ணாயிரம் உஷாராகி டிரெங் பெட்டி அருகில் இருந்து எழுந்து மச்சியின் ஒரு ஓரத்திற்கு சென்று சோழக்கொல்லை பொம்மை போல நின்று கொண்டார்.
பூங்கொடி பாடிய பாட்டு வேறுமாதிரியாக இருப்பதைப் பார்த்து.. என்னம்மா..பாட்டை தப்புத் தப்பா படிக்கிற..நீ என்ன செய்வ.. கஷ்டத்திலே மாத்தி மாத்திப் பாடுற.. உன்மேல தப்பில்ல..எல்லாம் அந்த கண்ணாயிரம்தான் காரணம்.. நீ உள்ளேப் போ என்று சொல்லிவிட்டு.. அருவாஅமாவாசை டிரங்பெட்டியை எடுக்க ஏணிப்படியில் ஏறினார்.
அப்போது கண்ணாயிரம் தலையில் மூடியிருந்த பானை ஓட்டை வழியாக.. அருவாஅமாவாசையை பயமுறுத்த தயாராக இருந்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்
புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.