April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

பூனைக்குள் புகுந்த கண்ணாயிரம் ஆவி/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayira spirit entered the cat/comic story / Tabasukumar

19.2.2024
கண்ணாயிரம் விபத்தில் மறைந்துவிட்டதாகவும் பாடியை டிரங்பெட்டியில் வைத்து மச்சியில் மறைத்து வைத்திருப்பதாகவும் கண்ணாயிரம் மாமனார் அருவாஅமாவாசைக்கு தகவல் கிடைத்தது.இதனால் ஆவி தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக அருவாஅமாவாசை இடுப்பில் அருவாளை மறைத்துவைத்துக் கொண்டு தனது மகள் பூங்கொடி வீட்டுக்குச் சென்றார்.
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒண்… டூ… திரி என்று சொல்லியபடி மச்சி இருந்த ஏணிப்படி வழியாக ஏறினார். சோளக்கொல்லை பொம்மை போல் வேட்டியை சுற்றி கட்டியிருந்த கண்ணாயிரம் தலையில் மாட்டியிருந்த பானை ஓட்டை வழியாக அருவாஅமாவாசை வருகிறாரா என்று குலுக்கைப் பின்னால் நின்றுப் பார்த்த வண்ணம் இருந்தார்.
அப்போது பாய்ந்து வந்து மேலே விழுந்த கறுப்புப் பூனையை கண்ணாயிரம் ச்சூ..என்று விரட்ட.. அது மிரண்டுபோய் ஏணிப்படி வழியாக வந்த அருவாஅமாவாசை மீது பாய்ந்தது.
இதைச் சற்றும் எதிர்பாராத அருவாஅமாவாசை நிலைதடுமாறி இடுப்பில் உள்ள அருவாளை எடுத்து சிலம்பம் ஆட பூனை.. பயந்து அருவாஅமாவாசை காதில் ஓங்கிக் கடிக்க.. அவர் அலறினார்.
கறுப்புப் பூனை காதை கடித்ததுடன் அவரை முறைத்துப் பார்த்துப் பார்த்தது. அடேய்.. அவனேத்தான்.. கண்ணாயிரம் ஆவி இந்த பூனை உமம்புக்குள்ளே புகுந்திருக்கு.. அதனால்தான் நான் ஏற்கனவே கண்ணாயிரம் காதை கடித்ததால் பழிக்குப் பழி வாங்க.. என் காதைக் கடிக்குது.. ஆவி புகுந்த இந்தப் பூனையை உயிரோடுவிட்டால் எல்லோருக்கும் ஆபத்து என்று எண்ணினார்.

அருவாளைக் காட்டி.. ஏய்.. ஓடாத.. உன்னை சாக்கு மூட்டையில் கட்டி கடலில் தூக்கி வீசாம விடமாட்டேன் என்று அருவாஅமாவாசை உறும. .பூனையும் ஏணிப்படியில் நின்று பதிலுக்கு பற்களைக்காட்டி.. அருவாஅமாவாசையை பயம் காட்டியது.
அவர் அசரவில்லை.டேய்..கண்ணாயிரம் விளையாடாதே..உன்னை விட மாட்டேன் என்றபடி பூனையைப் பிடிக்கப் பாய்ந்தார். அப்போது பூனை அவரது கையில் லபக் என்று கடித்துவிட்டு துள்ளி ஓடியது.. டேய்.. டேய்.. நான் உன் காதை மட்டும் தானே கடிச்சேன்.. நீ என் கையிலே எல்லாம் கடிக்கியா டா.. பூனைக்குள் புகுந்து என்ன அட்டகாசம் பண்ணுற.. ஓடாதே.. நில்லு என்றபடி ஏணியை விட்டு பட பட வென்று இறங்கினார்.
அவர் வருகிறாரா என்று பார்த்த பூனை அருவாஅமாவாசையைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு மீண்டும் ஓடியது.
அருவாஅமாவாசை அருவாளை எடுத்துக்கொண்டு.. விடாதேப் பிடி.. கண்ணாயிரம் ஓடுறான் பிடி என்றபடி துரத்தினார்.
பூனை வீட்டை விட்டு மின்னல் வேகத்தில் பாய்ந்தது. கண்ணாயிரம் நண்பர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் வாலிபர் ஆகியோர்.. என்ன ஆச்சு..என்ன ஆச்சு என்று அருவாஅமாவாசை யிடம் கேட்க.. அவர் மூச்சு வாங்கியபடி.. பிடிங்க.. பிடிங்க.. கண்ணாயிரம் பூனையைப் பிடிங்க என்று கத்தினார்.
அவர்கள்.. ஐயா… கண்ணாயிரம் பாடிதான் நமக்கு வேணும்..கண்ணாயிரம் பூனை நமக்கு எதுக்கு என்று கேட்க.. அருவாஅமாவாசை ஆவேசமாக.. ஏங்க.. கறுப்பு பூனைக்குள்ளே கண்ணாயிரம் ஆவி இருக்கு.. என்னை கடிச்சிப்புட்டு.. விடாதிங்க.. அது மோசமான பூனை.. எல்லோரையும் கடிக்கும்.. பிடிச்சி கடலில் போடணும் விடாதீங்க என்றார்.
கண்ணாயிரம் நண்பர்கள் உஷாரானார்கள். அப்படியா.. அப்பவே நினைச்சோம்.. இந்த பூனை கண்ணாயிரம் மாதிரியே தலையை ஆட்டிக்கிட்டேப் பாக்குதேன்னு நினைச்சோம்.. விடாதீங்க.. விடாதீங்க.. என்றபடி விரட்டினர்.
பூனையைச் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அது கபடி விளையாடுவது போல போக்குக் காட்டி.. விர்ரென்று பாய்ந்து ஓடியது.
இன்னாப் பாத்தியா..கண்ணாயிரம் ஆவி எப்படி ஓடுது.. என்றவாறு வியர்க்க விறுவிறுக்க ஓடி விரட்டினார்கள்.
அருவாஅமாவாசை.. டேய்.. கண்ணாயிரம் ஆவியான பிறகும் உன் சேட்டை குறையலையடா.. நான் என்ன செய்வேன் என்றவாறு பின்னால் ஓடினார்.
அட..என்ன ஓட்டம் ஓடுது.. என்றவாறு ஒருவர் சொல்ல.. சும்மாவா.. கண்ணாயிரம் ஆவியாச்சே.. பயங்கரமா ஓடுது.. ஊரில் என்ன என்ன கலாட்டாப் பண்ணப் போகுதோ தெரியலை என்றுசொல்லியபடி விரட்டிச் சென்றனர்.
டேய்..கண்ணாயிரம் நீயே கறுப்பு. ஆவியான பிறகு வெள்ளைப் பூனைக்குள் போகக் கூடாதா.. கறுப்பா பயங்கரமா இருக்கிற கறுப்பு பூனைக்குள் புகுந்திட்டியடா.. பாக்கவே பயமா இருக்குடா என்றபடி அருவா அமாவாசை புலம்பியபடி பின்னால் விரட்டினார்.
சும்மாவே கண்ணாயிரம் பல் விளக்கமாட்டான்.. ஆவியாக உள்ள கண்ணாயிரம் பூனை என்னை கடிச்சிப்புட்டு.. நான் பூனை மாதிரி கத்துவேனோ தெரியலையே என்று பயந்தபடி அருவா அமாவாசை பூனையைப் பிடிக்கப் பாய்ந்தார்..ம்.. அது பிடிபடவில்லை.
ஏங்க யாராவது சாக்கு எடுத்துட்டு வாங்க.. சாக்குப் போக்கு சொல்லாம எடுத்துட்டு வாங்க என்று அருவா அமாவாசை அலறினார்.
பூனை.. கண்களை உருட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் வேகம் பிடித்தது. எல்லோரும் பின்னால் துரத்தியபடி ஓடினர்.
பூனை வேகமாக ஓடி ஒரு சுவர் பக்கத்தில் போய் நின்றது. அந்த சுவர் மீது கண்ணாயிரம் படம் போட்ட இதய அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
பாத்தியாடா..சரியா கண்ணாயிரம் போஸ்டர் ஒட்டியிருக்கிற சுவர் பக்கத்தில போயி நிக்குது.. தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பார்கள். கண்ணாயிரம் ஆவியானாலும்..பூனை வடிவில் தனது போஸ்டரைக் கண்டு பிடிச்சிட்டாரு.. பாருங்க.. என்று மோட்டார் சைக்கிள் வாலிபர் கூற கறுப்பு பூனை அவனை முறைத்துப் பார்த்தது.
உடனே மோட்டார் சைக்கிள் வாலிபர்..கண்ணாயிரம்.நாங்க எது செஞ்சிருந்தாலும் மன்னிச்சிரு.. எங்களால இயன்ற அளவுக்கு உன் படம் போட்டு போஸ்டர் அடிச்சி ஒட்டிட்டோம். பேப்பருல நினைவஞ்சலி விளம்பரம் கொடுக்கலையேன்னு நீ கேட்கலாம்.. இப்போ சங்கத்திலே அந்த அளவுக்கு காசில்ல.. அதனால கொடுக்கல..எங்களை மன்னிச்சிடு.. முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு பேப்பரில விளம்பரம் கொடுத்திடுறோம்.. எங்களை விட்டுரு என்று கெஞ்சினார்.
பூனை அதை ஏற்றுக்கொள்ளாதது போல் தலையை ஆட்ட.. மோட்டார் சைக்கிள் வாலிபர்.. என்ன கண்ணாயிரம் ஏற்றுக் கொள்ள மாட்டியா.. நீ உயிரோடு இருந்தப்ப சங்கத்துக்கு மூணு மாசம் சந்தா செலுத்தல தெரியுமா..ஆனாலும் நாங்க கையில் இருக்கிறப் பணத்தைப் போட்டு போஸ்டர் அடிச்சிருக்கோம். இப்படி பூனையா வந்து இம்சைப் பண்ணினா என்ன அர்த்தம் என்று கேள்வி கேட்டார்.
அருவா அமாவாசையோ.. ஏங்க பூனைக்கிட்டே கேள்வி கேட்கிற நேரமா இது.. சாக்கு எங்கேப்பா..அப்படியே பிடிச்சி கடலில் வீசுவோம் என்க.. மோட்டார்சைக்கிள் வாலிபரோ..ஏங்க.. பூனை வேற உங்களை கடிச்சிட்டுன்னு சொன்னீங்க.. உங்களுக்கு குணமாகும் வரை பூனை உயிரோடு இருக்கணும்.. இல்லன்னா நீங்க பூனை மாதிரி கத்தி செத்துப் போவீங்க என்று பயம் காட்டினான்.
அய்யய்யோ..நாய் கடிச்சாதான அப்படிச் சொல்வாங்க..பூனை கடிச்சாலும் ஆபத்துதானா என்று அருவாஅமாவாசை கண்களை கசக்க.. மோட்டார் சைக்கிள் வாலிபரோ.. ஏங்க..நாய்க்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா..என்றார்.
அருவாஅமாவாசை.. அப்படியா..என்று மூக்கை சீந்த ஒருவர் கல்லை எடுத்து பூனை மீது வீச, அருவாஅமாவாசை..அய்யய்யோ ஒண்ணும் பண்ணாதீங்க..கல் வீசாதீங்க..அது வெறும் பூனை அல்ல..என் உயிர்.
அதைப்பத்திரமாப் பிடிங்க.. கண்ணாயிரம் உயிரோடு இருக்கும் போதும் இம்சை பண்ணினான். போனபிறகும் பூனையா வந்து கடிக்கிறானே..எல்லாம் என் விதி.. அய்யா காப்பாத்துங்க.. பெரியோரே காப்பாத்துங்க..பூனையை காப்பாத்துங்க என்று அருவாஅமாவாசை கெஞ்சினார்.
அப்போது ஒரு வாலிபர் சாக்குடன் ஓடிவர.. அருவாஅமாவாசை.. பூனை மீது வீசினார். ஆ..மாட்டிக்கிட்டு..ஆ மாட்டிக்கிட்டு என்று அவர் சாக்கு மூடியிருந்த பூனையைப் பிடிக்க முயல அது துள்ளி ஓடியது. அருவா அமாவாசை.. அய்ய்யோ..ஓடுதே ஓடுதே. பிடிங்க பிடிங்க என்று அலற. .மற்றவர்கள் அதை துரத்திச் சென்றார்கள்.
இந்த நேரத்திலும் கண்ணாயிரம் அருவாஅமாவாசை வரவில்லையே..என்ன ஆச்சு..என்று யோசித்தப்படி மச்சியில் அங்கும் இங்கும் நடத்தபடி இருந்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.