April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

வாழைப் பழத்துக்கு ஏங்கிய கண்ணாயிரம்/நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram longing for banana/comic story / Tabasukumar

23.2.2024
கண்ணாயிரம் விபத்தில் பலியானதாகவும் பாடி டிரங்பெட்டியில் இருப்பதாகவும் கிடைத்த தகவலால் பாடியை மீட்க கண்ணாயிரம் மாமனார் அருவாஅமாவாசை வந்தார். கண்ணாயிரம் வீட்டில் ஏணிப்படிவழியாக ஏறி டிரங்பெட்டியை எடுக்க முயன்றபோது கருப்பு பூனை ஒன்று அருவாஅமாவாசை காதை கடிக்க.. அந்த பூனைக்குள் கண்ணாயிரம் ஆவி இருப்பதாக அருவா அமாவாசை நினைக்க..அது வீட்டைவிட்டு ஓட அதை அருவாஅமாவாசையும் கண்ணாயிரம் நண்பர்களும் விரட்ட..அது ஓடிப்போய் கண்ணாயிரம் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய சுவர் அருகே நின்றது.
இதனால் பூனையைச் சமாதானப்படுத்தி அதன் மீது சாக்குப் போட்டு பிடிக்க முயன்றபோது அது துள்ளி ஓடியது.அருவாஅமாவாசை அருவாளை இடுப்பில் சொருகிக்கொண்டு சாக்குடன் பூனையைவிரட்ட கண்ணாயிரம் நண்பர்களு பின்தொடர்ந்து விரட்ட ஒருவர் கல்லை எடுத்து பூனை மீது வீசினார். அருவாஅமாவாசை..அய்யா..தயவு செய்து கல்லால் அடிக்காதீங்க..அது பூனையில்ல..கண்ணாயிரம்.அது செத்துப் போனா நானும் பூனை மாதிரி மியாவ் மியாவ் என்று கத்தி இறந்து போவேன்.. அய்யா..பூனையை விட்டுருங்கய்யா.. நானே பிடிச்சிக்கிறன் என்று கெஞ்சினார்.
இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பூனை மின்னல் வேகத்தில் ஓடியது.ஆ..விடாதப் பிடி..ஆ..விடாதப் பிடி..என்றபடி பின்தொடர்ந்து ஓடினார்கள்.
பூனை ஓரிடத்தில் நின்று முறைத்துப் பார்த்தது.அதைப் பார்த்த கண்ணாயிரம் நண்பர்கள்..கண்ணாயிரம் இப்படி பார்க்கிறது சரியல்ல..உங்க மாமா பிடிக்கச் சொன்னதால்தான் நாங்க பின்னால துரத்திட்டுவாரம்..எங்க மேலே தப்பில்லை..என்றனர்.

பூனை தலையை ஆட்டிவிட்டு மறுபடியும் கடை வீதியை நோக்கி ஓட்டம்பிடித்தது.என்னடா..இது இப்படி ஓடுது..கடை வீதிக்கு ஓடுனா..காரு, பைக்கில அடிபட்டு இறந்துபோனா என்னப் பண்ணுறது..மெதுவா விரட்டுங்கய்யா என்றபடி அருவாஅமாவாசை சொல்ல..எல்லோரும் மெதுவாகப் பின்தொடர்ந்தார்கள்.
பூனை மெதுவாக ஓடி ஒரு பெட்டிக்கடை முன் காலை பேப்பர் போஸ்டர் தொங்கவிடப்பட்டிருந்த இடத்தின் அருகே போய் நின்றது. குற்றாலம் சுற்றுலா சென்ற புதுவை முதியவர் பலி என்று ஒரு போட்டோவுடன்கறுப்பு வெள்ளையில் அந்த போஸ்டர் இருந்தது. அதில் யாரோ ஒருவர் ஆணி அடித்து மாலை தொங்கவிட்டிருந்தார்.
அந்த போஸ்டரைப் பார்த்து முன்னங்காலைத் தூக்கி நின்று ஓடிவந்த களைப்பில் கண்ணீர்விட்டது.
அதைப்பார்த்து என்னய்யா கண்ணாயிரம் ஆவி பத்திரிகை போஸ்டரைப் பார்த்து இப்படி கண்ணீர் அஞ்சலி செலுத்துது.. நாமளும் அஞ்சலி செலுத்துவோம் என்று மோட்டார்சைக்கிள் வாலிபர் சொல்ல அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்த நேரத்தில் அருவாஅமாவாசை.. படக்கென்று சாக்குடன் பாய்ந்து பூனையை அமுக்கினார். அது..மியாவ் மியாவ் என்று கத்த..ம்.. விடமாட்டேன்.. வீட்டுக்கு வா..கூண்டுலவச்சி பாலும் பழமும் கொடுத்து நாப்பது நாள் காப்பாத்துறன்..அப்புறம் பாரு மவனே..உனக்கு ருக்கு வேட்டை.. என்று அருவாஅமாவாசை தனது காதைத் தடவியவாறு சொல்ல, மற்றவர்கள் சிரித்தனர்.
அவருக்கு வலி இருக்காதா.. ஆவி ஆனபிறகும் கண்ணாயிரம் பூனை வடிவில் வந்து மாமனார் காதைக் கடிக்கலாமா என்று மோட்டார்சைக்கிள் வாலிபர் சொல்ல ஒரு வாலிபர் மெல்ல..பூனைக்குள்ளே ஆவி போகமுடியுமா என்று சந்தேகத்தை எழுப்ப ,மோட்டார்சைக்கிள் வாலிபர், ஏய் பேய் சினிமாபடம் பார்க்கவில்லையா.. பூனை வந்துஎன்ன மிரட்டு மிரட்டும் என்று மடக்கினார்.
ஆமா..ஆமா
.அது பயங்கரமாக இருக்கும்.. நைட்டு தூக்கமே வராது.. கண்ணாயிரம் வேறபூனையா வந்து என்னப் பயம் காட்டப் போறான்னு தெரியல என்று மற்றொரு வாலிபர் சொல்ல எல்லோருக்கும் பயம் தொற்றிக்கொண்டது.
அருவா அமாவாசை..ஏங்க கொஞ்சம் பூனை வாயைப் பிடிங்க.. என்றார்.மற்றவாலிபர்கள் பூனையை அமுக்கிப் பிடித்து சாக்குக்குள் அமுக்கினர்.
அது..மியாவ்..மியாவ் என்று கத்த அருவாஅமாவாசை கீழே கிடந்த ஒரு சணலை எடுத்து சாக்கைக் கட்டினார்.பின்னர் சாக்கை கையில் தூக்கிக்கொண்டு அருவாஅமாவாசை வீரநடை நடக்க மற்றவர்கள் பின்னால் வந்தனர்.வரும் வழியில் ஒரு கடையில் தொங்கிய கிளிக் கூண்டை அருவாஅமாவாசை வாங்கினார். கண்ணாயிரம் பூனை,கண்ணாயிரம் பூனை என்றபடி எல்லோரும் பின்தொடர்ந்து வந்தனர்
இந்த நேரத்தில் கண்ணாயிரம்,குலுக்கைப் பின்னால் நின்றபடி.. என்ன.. அருவாஅமாவாசையைக் காணம்..அருவாளை கொண்டு வரலைன்னு பூங்கொடி சொன்னா.. அருவாஅமாவாசைக்கு வயசாயிட்டு ஏணியில ஏழு படிக்கட்டுக்கு மேலே அவரால ஏற முடியலப் போலிருக்கு.. நாமளும் அவரைப் பயம் காட்டலாமுன்னு பானையை வேற தலையில் மூடிக்கிட்டு சுத்தி சுத்தி வர்ரோம்.. வியர்க்குது.. என்றபடி பானையில் போடப்பட்ட ஓட்டை வழியாக..எட்டி எட்டிப் பார்த்தார்.
இந்த நேரத்தில் சாக்குமூட்டையைத் தூக்கியபடி அருவாஅமாவாசை கண்ணாயிரம் வீட்டு கதவைத் தட்டினார். யாரது என்றபடி பூங்கொடி கதவை திறக்க.. அருவா அமாவாசை சாக்கு மற்றும் கிளிக் கூண்டுடன் நின்றார்.
என்னப்பா..இது பூங்கொடி கேட்க….அதுவாம்மா.. கண்ணாயிரம் பூனை.என்று அருவாஅமாவாசை சொன்னார்.
பூங்கொடியும்,ஆமாப்பா.. பூனையின்னா அவருக்கு உயிரு என்று சொல்ல.. அருவாஅமாவாசையோ, உயிரா.. உயிரை வாங்குறானே..என்க பூங்கொடியோ அப்பா.. எப்பமும் இந்த பூனை பின்னாலே அவர் சுத்தி சுத்தி வருவாரு..என்னப்பா காதில ரத்தம் என்று கேட்டார்.
அதற்கு அருவாஅமாவாசை.. எல்லாம் அந்தப் படுபாவிப்பய பண்ணுன வேலை.. எம்மா..இந்த பூனை கிளிக் கூண்டிலே நாற்பது நாள் அடச்சி வைக்கணும்..பாலும் பழமும் கொடுக்கணும்..பத்திரமா பாத்தூக்கணும். இல்லன்னா நான் பூனையாகிடுவேன்..என்றார்.
கண்ணாயிரம் நண்பர்களும் வீட்டுக்குள் வந்தனர்.சாக்குக்குள் சிக்கிய பூனையை மீட்டு கிளிக்கூண்டுக்குள் தள்ளிப் பூட்டினர்.மோட்டார் சைக்கிள் வாலிபர்,ஏங்க பூனைக்கு ஆவி பறக்க சூடா பால் கொண்டுவாங்க என்று பூங்கொடியிடம் கேட்டார். ஆவி பறக்க பால் பூனை குடிக்குமா என்று பூங்கொடி கேட்க..மோட்டார்சைக்கிள் வாலிபரோ..அது ஆவி பூனைதானே..ஆவி ஒண்ணும் செய்யாது என்க,பூங்கொடியோ..என்ன ஆவியா என்று அதிர்ச்சியுடன் கேட்க.. அருவாஅமாவாசையோ..அவன் உளறுறானம்மா..இது கண்ணாயிரம் பூனைதானே என்று கேட்டார்.
பூங்கொடி. .ஊமா..ஆமா..ஆமா என்றார்.
அதுபோதும்..நீ சூடா பால் கொண்டு வாம்மா என்று அருவாஅமாவாசை சொல்ல..பூங்கொடி எழுந்து சமையல் அறைக்குச் சென்று பால் காய்ச்சி ஒரு கிண்ணத்தில் ஆவி பறக்க கொண்டுவந்தார்.
பூனை கூண்டுக்குள் அங்கும் இங்கும் சுற்றியபடி வந்தது.பூனைக்கு நாக்கு வெந்து போகும்..கொஞ்சம் ஆத்திக்கொடுப்போம் என்று மோட்டார் சைக்கிள் வாலிபர் சொல்ல.. பூங்கொடி ஒருடம்ளரில் பாலை ஆற்றினார். பின்னர் சின்னக் கிண்ணத்தில் பாலை ஊத்தி.. கிளிக்கூண்டுக்குள் நைசாக மோட்டார் சைக்கிள் வாலிபர் வைத்தார்.
பூனை கோபத்தில் பாய்ந்து வந்து கிண்ணத்தில் உள்ள பாலை கீழேத் தட்டிவிட்டது. என்ன பூனைக்கு கோபம்.. சீனி நிறையப் போடலையா என்று அருவாஅமாவாசை கேட்க..நிறையப் போட்டேம்பா என்று பூங்கொடி சொல்ல.. அருவாஅமாவாசை..அப்புறம் ஏன் குடிக்கமாட்டேங்குது..என்க..மோட்டார்சைக்கிள் வாலிபர்..பட்டினி கிடந்து செத்துப்போகட்டும் என்க..அருவாஅமாவாசையோ..அய்யய்யோ..நாப்பது நாளு அது உயிரோடு இருக்கணுமப்பா..அதுக்கு எதுப் பிடிக்குமோ அதை கொடுங்கப்பா..என்று பதட்டத்துடன் சொன்னார்.
அப்போ பழம் சாப்பிடுமா..வாழைப்பழம் கொண்டுவாங்க என்று மோட்டார்சைக்கிள் வாலிபர் சொல்ல,பூங்கொடி வீட்டிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்து வந்தார்.அருவாஅமாவாசை..ஏம்மா..அந்தப் பழத்தை கொடும்மா..நான் கொடுக்கிறேன் என்றபடி வாழைப்பழத்தை உரித்து கூண்டுக்குள் நீட்டினார்.பூனை பாய்ந்து வந்து பழத்தைக் கவ்வியது.அருவாஅமாவாசை படக்கென்று கையை எடுக்க..பூனை அந்தப் பழத்தை கடித்துக் குதறி விழுங்க ஆரம்பித்தது.பாத்தியளா..நான் கொடுத்தாதான் சாப்பிடுது.. பாத்தியளா..என்று அருவாஅமாவாசை சொல்ல,என்ன இருந்தாலும் மாமன் மருமகன் உறவு விட்டுப் போகுமா இன்னொரு பழம் கொடுங்கன்று மோட்டார்சைக்கிள் வாலிபர் சொல்ல..அருவாஅமாவாசை..அப்படியா,எல்லாம் நாப்பது நாளைக்குத்தானே..ஏம்மா இன்னொரு பழம் கொண்டு வாம்மா என்று அருவாஅமாவாசை சொல்ல,பூங்கொடி ..இன்னொரு பழமா..அவர் கேட்பாரே என்க அருவாஅமாவாசை..எவறு கேட்பாரு..என்று கேட்க..பூங்கொடி..அவர்தாம்பா என்றார்.
உடனே பூங்கொடி,அவனா..அவன்தான் மேலப் போயிட்டாருன்னு சொன்னிய..என்று மடக்க..பூங்கொடியோ..ஆமாப்பா..ஆமாப்பா..அவர் மேலப் போயிட்டாரு..என்றார்.பாத்தியா..கண்ணாயிரத்துக்குப் பதிலாக கண்ணாயிரம் பூனைக்கு எல்லாம் கொடுப்போம்..என்றார்.பூங்கொடியும் தலையை ஆட்டியவாறு மற்றொரு வாழைப் பழத்தை எடுத்து வந்தார்.
மச்சியில் இருந்த கண்ணாயிரத்துக்கு பசி எடுத்தது.என்னடா பசிக்குது..இந்த ஆளு மேலேவரல..நான் சாப்பிடணுமே..ஏணிபபடி வழியா இறங்கிட வேண்டியதுதான் என்றபடி சோழக்கொல்லை பொம்மை போல் நடந்து வந்து மச்சிலிருந்து ஓட்டைப் பானை வழியாக எட்டிப்பார்த்தார்.என்ன வீட்டில இவ்வளவு கூட்டம்..அருவாஅமாவாசை கையிலே வாழைப்பழம் வச்சிருக்கார்..என்ன நடக்குது இங்கே..எனக்கு பசிக்குதே என்றபடி பார்த்தார்.அப்போது..அருவாஅமாவாசை,வாழைப்பழத்தை உரித்து..பூனை இருந்த கூண்டுக்குள் திணித்து..ராசா..சாப்பிடு ராசா..நீ சாப்பிட்டாத்தான்..நான் சாப்பிட முடியும்..சாப்பிடு ராசா என்று கெஞ்ச ,பூனை முகத்தைத் திருப்பிக்கொண்டது.

அருவா அமாவாசை..ஏண்டா..ராசா..சாப்பிடு ராசா..என்று வாழைப்பழத்தை நீட்டி கெஞ்ச..மச்சிலிருந்து பசியோடு பார்த்த கண்ணாயிரம்..யோவ்..அதுதான் வேண்டாங்குதே..பிறகு எதுக்கு அதுக்கிட்டேப்போயி. ராசா..ராசன்னுக்கிட்டு அதை.கெஞ்சிரிய..எனக்கு பசிக்குதய்யா..ஏங்கிட்ட கொடும் என்று கண்ணாயிரம் பசி மயக்கத்தில் கத்த யாரது என்று அருவாஅமாவாசை மச்சியைப் பார்க்க..அங்கே சோழக்கொல்லை பொம்மையாக கண்ணாயிரம் பானையை தலையில் மாட்டிக்கொண்டு நின்றார்.
-வே.தபசுக்குமார்,புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.