April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் தலைக்கு வந்த ஆபத்து/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

The danger that came to Kannayiram’s head/ comedy story / Tabasukumar

12.3.2024
கண்ணாயிரம் மறைந்து பூனைக்குள் ஆவியாக இருப்பதாக நினைத்த கண்ணாயிரம் மாமனார் அருவாஅமாவாசை மற்றும் கண்ணாயிரம் நண்பர்கள் பூனையை கூண்டில் அடைத்து வாழைப்பழம் கொடுத்தனர்.
இந்த நிலையில் அருவாஅமாவாசையின் அருவாளுக்குப் பயந்து மச்சில் சோளக்கொல்லை பொம்மை போல தலையில் பானையை மாட்டிக்கொண்டு பதுங்கியிருந்த கண்ணாயிரம் வயிறு பசித்ததால் எட்டிப் பார்க்க, கண்ணாயிரம் ஆவி என்று நினைத்தவர்கள் மச்சிக்கு செல்ல இருந்த ஏணியை எடுத்துவிட்டு கண்ணாயிரம் பறந்துவா என்க கண்ணாயிரம் கயிறைக்கட்டிக்கொண்டு மச்சிலிருந்து கீழே குதிக்க பூனை அடைபட்டிருந்த கூண்டுமேல விழுந்தார்.
அந்த கூண்டு திறக்க அதிலிருந்து வெளியேவந்த பூனை அருவாஅமாவாசை காதை கடிக்க அவர் ஓட பூனை துரத்திச்செல்ல அவர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
கண்ணாயிரம் நண்பர்களும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர். பூனை அருவாஅமாவாசையை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் வெளியே வந்தவர்.. என்ன சத்தம்.. என்ன பிரச்சினை.. யாருய்யா நீ என்று அருவாஅமாவாசையிடம் கேட்க, அவரோ, அய்யா காப்பாத்துங்க.. அய்யா காப்பாத்துங்க என்று கத்தினார்.
என்ன பிரச்சினை என்று இன்ஸ்பெக்டர் கேட்க அருவாஅமாவாசை முறைத்தபடி நின்ற பூனையைக்காட்டி.. அது என்ன கொல்லப்பாக்குது.. காப்பாத்துங்க என்று கெஞ்சினார்.
அதற்கு இன்ஸ்பெக்டர்..யோவ்..சாதாரண பூனைக்குப் போயி பயப்படுறீய.. கம்பெடுத்து விரட்டுனா ஓடுடப்போகுது என்று சொல்ல அருவாஅமாவாசையோ.. அய்யா, அது சாதாரணமான பூனை இல்ல , கண்ணாயிரம் ஆவி புகுந்த பூனை அய்யா.. என்றார்.
இன்ஸ்பெக்டர்..யோவ்,என்ன கதைவிடுற, ஆவியாவது.. பாவியாது என்க, அருவாஅமாவாசை..சார்.. கண்ணாயிரம் விபத்திலே மறைஞ்சிட்டான்ல.. அவனோட ஆவி அவன் வளர்த்த இந்த பூனைக்குள் புகுந்து பாடாய் படுத்துதுசார் என்று கண்களை கசக்கினார்.
இன்ஸ்பெக்டர் திடுக்கிட்டு, யோவ் கண்ணாயிரம் செத்துப் போயிட்டாருன்னு யாருய்யா சொன்னா.. என்று அதட்டினார்.
அருவாஅமாஅமாவாசை ஆடிப்போய், அதுவா அந்த மோட்டார் சைக்கிள் வாலிபர்தான் சொன்னார் என்று கோர்த்துவிட்டார்.
உடனே,யாருய்யா மோட்டார் சைக்கிள் வாலிபர்.. என்று இன்ஸ்பெக்டர் கத்த, மோட்டார் சைக்கிள் வாலிபர்.. நான்தான்யா என்று இன்ஸ்பெக்டர் முன் ஓடிவந்து நின்றான்.
இன்ஸ்பெக்டர் அவனை முறைத்துப்பார்த்தப்படி, உனக்கு யாரு சொன்னா என்க, மோட்டார் சைக்கிள் வாலிபர், அதுவா பேப்பருல போட்டிருந்துச்சி என்க நீ படிச்சியா என்று இன்ஸ்பெக்டர் கேட்க, பேப்பருல படிக்கல, வால் போஸ்டருல படிச்சேன். குற்றாலம் சென்ற புதுவை முதியவர் பலின்னு போட்டிருந்துச்சே.. என்று சொன்னான்.
இன்ஸ்பெக்டர் கோபத்தில்.. ஏய்.. அது தெற்குத் தெரு முத்துசாமி, குற்றாலம் போனப்ப பஸ் கவிழ்ந்து காயம் அடைந்து பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகி இறந்துட்டாரு.. அதைத்தான் பேப்பருல போட்டிருக்காங்க.. என்னடா பேப்பரை ஒழுங்கா படிக்காம.. குழப்பத்தை உண்டு பண்ணிருயா என்று முதுகில் இன்ஸபெக்டர் ஓங்கித் தட்ட, மோட்டார்சைக்கிள் வாலிபர், அய்யா அடிக்காதீங்க, ஜவுளிக் கடைக்காரர்தான் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரிக்கு கண்ணாயிரத்தைப் பாக்கப் போனாரு.. அவர்தான் ண்ணாயிரம் போயிட்டான்.. நடுத்தெரு வாலிபர்கள் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.. அதான்.. வால் போஸ்டர் எல்லாம் அடிச்சோம் என்க.. இன்ஸ்பெக்டர் மேலும் கோபம் அடைந்து.. யோவ்.. ஜவுளிக்கடைக்காரருக்கு போனைப் போடுய்யா என்று சொல்ல மோட்டார்சைக்கிள் வாலிபர் வேகமாக, ஜவுளிக்கடைக்காரர் எண்ணுக்கு செல்நம்பரை அழுத்த.. ரிங் போனது.. இன்ஸ்பெக்டர் செல்லை கையில் வாங்கி பேசினார்.
ஜவுளிக்கடைக்காரர்.. முரட்டுக்குரலாக இருக்கே.. யாரது என்று கேட்க, நான் இன்ஸ்பெக்டர் பேசுறன் என்று சொல்ல ஜவுளிக்கடைக்காரர் ஆடிப் போய்விட்டார்.
என்னசார் சொல்லுங்க..சார் என்று பயத்துடன் கேட்க, இன்ஸ்பெக்டர் கடுமையான குரலில் குற்றாலம் போன கண்ணாயிரம் விபத்தில செத்துப் போயிட்டாருன்னு எப்படி சொன்னீய என்று கேட்க, ஜவுளிக்கடைக்காரர்.. பயந்துடன்..சார்..அது வந்து கண்ணாயிரம் உயிர் ஊசல் என்று பேப்பரில போட்டிருந்தாங்க. ஆதனால நான் கொடுத்த ஜவுளிப் பாக்கி நாப்பதாயிரத்தை வசூல் பண்ணுறதுக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு இறைச்சிக்கடைக்காரரைக் கூட்டிக்கிட்டு காரில போனேன். கண்ணாயிரம் அட்மிட்டான வார்டுல போயிக் கேட்டோம். அப்பம் ஒருத்தர் அழுதுக்கிட்டே கண்ணாயிரம் போயிட்டாருய்யா அப்படின்னு சொன்னாரு. நாங்களும் கண்ணாயிரம் உயிர் ஊசல் என்று பேப்பரில போட்டிருந்துச்சே.. அதனால மேலப் போயிட்டாருபோலன்னு நினைச்சிக்கிட்டு வெளியே வந்தோம். அப்போ பயில்வானுக்கிட்டேயும் சுடிதார் சுதாவுக்கிட்டேயும் கண்ணாயிரம் என்ன ஆச்சு என்று கேட்டோம். அவர்களும் கண்ணைக் கசக்கிக்கிட்டு கண்ணாயிரம் போயிட்டாருன்னு சொன்னாங்க.. ஆஸ்பத்திரி முன்னால புகை மூட்டமா இருந்ததால நாங்களும் கண்களிலிருந்து கண்ணீரை கசியவிட்டு வேக வேகமாக ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறி காரில் புதுவைக்கு வந்து கொண்டிருக்கிறோம் என்றார்.
இன்ஸ்பெக்டர் சூடாகி..யோவ் கண்ணாயிரம் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிப் போய்விட்டார் என்பதை போயிட்டாருன்னு சொன்னதை கண்ணாயிரம் மேலப் போயிட்டாருன்னு சொல்லி ஒரே குழப்பத்தை ஏற்படுத்திட்டியரு.. கண்ணாயிரம் உயிரோடு இருக்காரு..தெரியுமா என்று கேட்டார்.
அதற்கு ஜவுளிக்கடைக்காரர்..நான் அவசரத்திலே தப்பா புரிஞ்சிக்கிட்டு அப்படிச் சொல்லிட்டேன்.. அருவா அமாவாசையும் சொன்னார்.. மன்னிச்சிக்கிங்க சார்.. ஜவுளிப் பாக்கி வசூல் பண்ணணுகிங்கிற பதட்டத்திலே என்னவெல்லாமா ஆகிப் போச்சு.. கண்ணாயிரத்துக்கிட்ட அந்த நாப்பதாயிரம் பாக்கியை வாங்கிக் கொடுத்திடுங்க சார்.. கார் போட்டு பாளையங்கோட்டைவரை அலைஞ்சிட்டு வர்றோம் சார்.. தயவு பண்ணுங்க சார் என்று கெஞ்ச முதலில் புதுவைக்கு வாங்க பேசுவோம் என்றார் இன்ஸ்பெக்டர்.
அப்பாடி.. இந்த கண்ணாயிரத்தால் என்னவெல்லாமோ பிரச்சினை வருதய்யா என்று காரை ஓட்டிக்கொண்டே ஜவுளிக்கடைக்காரர் சொல்ல இறைச்சிக்கடைக்காரர் ஆமா என்று தலையை ஆட்டினார்.
ஜவுளிக்கடைக்காரர் மெல்ல கோபத்தில் சுடிதார் சுதாவிடம்..கண்ணாயிரம் உயிரோடு இருக்கார் தெரியுமா பிறகு ஏன் போயிட்டாருன்னு சொன்னீங்க என்க.. சுடிதார் சுதா..ஏங்க கண்ணாயிரத்துக்கு என்ன ஆச்சுன்னு கேட்டீங்க அவர் ஊருக்கு போயிட்டாருன்னு சொல்லுறதுக்காக அவர் போயிட்டாருன்னு சொன்னேன்.. நீங்க அதைப் தப்பா எடுத்துக்கிட்டீங்க..என்றாள்.
உடனே ஜவுளிக்கடைக்காரர் ,கண்ணாயிரம் போயிட்டாருன்னு ஏன் அழுதுக்கிட்டு ஏன் சொன்னீங்க என்று கேட்க.. அதுவா,அரசு ஆஸ்பத்திரி அருகே ஒரு தீவிபத்து..அதனால ஒரே புகைமூட்டம்..கண் எரிச்சல் தாங்கமுடியல..அதான்..கண்ணைக் கசக்கிட்டு கண்ணாயிரம் போயிட்டாருன்னு சொன்னேன் என்றாள்.ஜவுளிக்கடைக்காரர்..ச்சே.நானும் அதைக் கவனிக்காம கண்ணைக் கசக்கிக்கிட்டு காரில் ஏறி ஓடி வந்துட்டேன்..இப்போ கண்ணாயிரம் உயிரோடு இருக்கார் என்றால் மகிழ்ச்சிதான்..எப்படியும் அந்த நாப்பதாயிரம் பாக்கியை வசூல் பண்ணிடணும்.. அருவாஅமாவாசை நான் நாப்பதாயிரம் கட்டணுமுன்னு சொல்லுறாரு..இன்ஸ்பெக்டருக்கிட்ட சொல்லி சமாளிச்சு ரூபாயை வாங்கப் பாக்கணும்..என்றபடி காரை வேகமாக ஓட்டினார்.
இறைச்சிக்கடைக்காரர்,சுடிதார்சுதாவிடம்..ஏம்மா..விபத்து நடந்து இவ்வளவு பிரச்சகனை ஏற்பட்டிருக்கிறது..
நீ ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாமே என்க..மாமா,நீங்க பயந்திடக் கூடாதுன்னு நான் போன் பண்ணலை என்று சொன்னாள்.அது சரி,உன் அக்காவும் தாங்கமாட்டா..உனக்கு ஒண்ணும் ஆகலையே..என்று இறைச்சிக்கடைக்காரர் கேட்க..சுடிதார் சுதா..எனக்கு ஆயுசு நூறு..எனக்கு ஒண்ணும் ஆகாது..மாமா..எனக்கு ஆயுசுக் கெட்டி..விபத்தில் காயம் அடைந்தவங்களை நான்தான் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் சேர்த்தேன்..என்றாள்.
ஜவுளிக்கடைக்காரர்..சரிம்மா..இந்த கண்ணாயிரம் உயிர் ஊசல் என்று பேப்பரில் போட்டிருந்தாங்களே..எப்படி உயிர் பிழைச்சான் என்று ஜவுளிக்கடைக்காரர் கேட்க,கண்ணாயிரத்துக்கு காலில்தான் காயம்,அவர் அருவியில குளிச்சதாலே விபத்து நடந்தபோதும் விழிக்காம கண்ணை மூடி ரொம்ப நேரம்தூங்கிக்கொண்டு குறட்டை விட்டதால உயிர் ஊசலாடுதுன்னு நினைச்சி எமர்ஜென்சி வார்டில போட்டுப்புட்டாங்க..அதான் பிரச்சினை என்றார் சுடிதார்சுதா.
அதைக் கேட்ட ஜவுளிக்கடைக்காரர்..எங்கே போனாலும் கண்ணாயிரம் லொள்ளு தாங்கமுடியாது..எங்கிட்ட கடன் தொகையைத் தராம தப்பிச்சிடுவானா..போய் மடக்கிறன் பாருங்க என்றபடி காரை மின்னல் வேகத்தில் ஓட்டினார்.
இந்த நேரத்தில் போலீஸ்நிலையத்தில் பூனை முறைக்க போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் விரட்ட..அருவாஅமாவாசை..சார் என்னை வேணுமானாலும் அடிங்க..ஆனா.பூனையை அடிக்காதீங்க..அது செத்துப் போனா..நானும் பூனை மாதிரி கத்தி செத்துப் போவேன்..அடிக்காதீங்க சார் என்று கத்தினார்.
என்னய்யா உளருற என்று இன்ஸ்பெக்டர் அதட்ட அருவாஅமாவாசை..அய்யா அந்த கண்ணாயிரம் பூனை என்னுடைய இரண்டு காதிலும் கடிச்சிட்டுய்யா..அந்த காயம் குணமாகும் வரை நாப்பது நாளுக்கு அந்த பூனைக்கு எந்த ஆபத்தும் வராமக் காக்கணும் சார் என்று சொல்ல, இன்ஸ்பெக்டர் முறைத்தபடி,எவன்யா சொன்னான்,பேசாம ஆஸ்பத்திரியிலே போய் மருந்து போடும் எல்லாம் சரியாகிடும்..சரியா என்றார்.
அருவாஅமாவாசை தலையை மட்டும் அசைத்தார். யோவ் வாய் திறந்து சரின்னு சொல்லும் ..என்று இன்ஸ்பெக்டர் சொல்ல அருவாஅமாவாசை..வாயில் கையைவைத்துப் பொத்திக்கொண்டு..தலையை தலையை ஆட்டினார்.
இன்ஸ்பெக்டர் கோபத்தில்..என்னய்யா என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க மாட்டியா என்று அருவாஅமாவாசை முதுகில் ஓங்கி ஒரு போடு போட அவர் அம்மா என்று கத்த, பூனை நிலைமை சரியில்லை என்று கோட்டைச்சுவரைத் தாண்டி ஓடியது.. அருவாஅமாவாசை..வாயைப் பொத்திக்கொண்டு சைகையால் பூனை ஓடிட்டு நான் என்ன பண்ணுவேன் என்று சொல்ல அது புரியாத இன்ஸ்பெக்டர்..என்னய்யா வாய் திறந்து ஒழுங்கா சொல்லமாட்டியா என்று மீண்டும் அடிக்க ஓங்க அருவாஅமாவாசை.. இனி அடி தாங்க முடியாது என்று நினைத்தவர்.. சார் நீங்க பேசுறது ஒண்ணு செய்யுறது ஒண்ணா இருக்கு..பேசாம ஆஸ்பத்திரிக்கு போன்னு சொன்னீங்க.. அதனால நான் பேசாம ஆஸ்பத்திரிக்கு போகலாமுன்னு நினைச்சேன்..நான் பேசலன்னு நினைச்சு நீங்க அடிக்கவர்ரீங்க.. நான் என்ன பண்ணுவன். பேசாம ஆஸ்பத்திரிக்குப் போயி மருந்து போட்டாதானே பூனைக்கடி குணமாகும் என்றார்.
இன்ஸ்பெக்டர் சிரித்தபடி ஒரு பேச்சுக்குச் சொன்னேன்..அதுக்காக பேசாம இருக்கிறதா என்று செல்லமா அருவாஅமாவாசை முதுகில் தட்டி சிரித்தார்.
அருவாஅமாவாசை..ஆ செல்லமா தட்டுறதே என்னா வலி வலிக்கு என்று முதுகை தடவினார்.
இன்ஸ்பெக்டர்..ம் வலிக்குதா..என்றபடி மறுபடியும் கையை ஒங்க அய்யய்யோ என்றபடி அருவாஅமாவாசை ஓட அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வாலிபரும் நண்பர்களும் ஓடினார்கள்.
இந்த சூழ்நிலையில், மச்சியிலிருந்து கீழே குதித்த கண்ணாயிரம் தலையில் மாட்டியிருந்த பானையை கழற்ற முடியாமல் கண்ணாயிரம் திணற பூங்கொடியும் இரண்டு கைகளாலும் பானையை இழுத்து கழற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.ஏங்க..பானையை கழற்ற முடியல.. உடைச்சிட வேண்டியதுதான் என்று பூங்கொடி சொல்ல, கண்ணாயிரம் அய்யோ என் மண்டையை உடைச்சிடுவா என்று சொல்லி பயந்தார்.
பூங்கொடியோ..ஏங்க.. நான் கோவில் திருவிழாவில கண்ணைக்கட்டிக்கிட்டு பானையை உடைச்சி முதல் பரிசை வாங்கியிருக்கேன்..தெரியுமா என்று கேட்க,கண்ணாயிரம் தெரியாது ..என்றார்.
பூங்கொடி..ஏங்க,இதே இடத்திலே அசையாம நில்லுங்க,நான் கம்பை எடுத்துட்டுவந்து பானையை உடைக்கிறேன் என்றார்.
கண்ணாயிரம் பானை மாட்டிய தலையை ஆட்டினார்.பூங்கொடி வீட்டுக்குள் சென்று ஒரு துணியால் கண்ணைக்கட்டிக்கொண்டு கையில் தடியுடன் வேகமாக வெளியே வந்தார்.பானை ஓட்டை வழியாக இதைப்பார்த்த,கண்ணாயிரம் ஆபத்து..ஆபத்து.. பூங்கொடி கண்கட்டை அவுத்துட்டு கம்பால் பானையை உடை ..என்றார்.
பூங்கொடியோ..ஏங்க.கண்ணை மூடிக்கிட்டு வந்து கம்பால் அடித்தால் நான் சரியாக பானையை உடைப்பேன்.. கண்ணை திறந்திட்டா குறி தவறி உங்க தலையில் அடிச்சிருவேன் என்று பயம் காட்டினார்.
கண்ணாயிரத்துக்கு என்னசொல்வது என்று தெரியல. கண்களை இறுக்க மூடிக்கொண்டு சாமி காப்பாத்து என்று வேண்டிக்கொண்டார்.
பூங்கொடி. ஏங்க..அசையாதீங்க.. அங்கே நில்லுங்க.. ஒண் டூ.. திரி என்று ஸ்டெப்பு வச்சி நடந்தார்.
அசையாதீங்க..அப்படியே நில்லுங்க..அசையாதீங்க..அடிக்கப் போறன்..அசையாதீங்க என்று சொல்லியபடி ஓங்கி அடிக்க..அப்போது அம்மா என்று ஒரு அலறல் சத்தம் கேட்டது.
அருவாஅமாவாசை தலையில் கைவைத்தபடி..தலை சுத்துதே என்றபடி கீழே உட்கார்ந்தார். பூங்கொடி கண்கட்டை அவிழ்த்துவிட்டுப் பார்க்க அருவாஅமாவாசை தலையில் கைவைத்தவாறு ஆ. வலிக்குதே என்க.. பூங்கொடி ..அப்பா என்று அலறினார்.
அவரு தலையில் மாட்டியிருக்கிற பானையை உடைக்க நினைச்சேன்.. நீங்க குறுக்கே வந்திட்டீங்க அப்பா..என்னை மன்னிச்சிடுங்க அப்பா என்றார்.
அருவாஅமாவாசை வலியைப் பொறுத்துக்கொண்டு..அம்மா நீ முழுகாம இருக்க, நீ பானையை உடைக்கக் கூடாது.. கம்பை என்னிடம் கொடு நான் பாத்துக்கிறேன் என்றவர்.
பூங்கொடியிடமிருந்து கம்பை வாங்கி.. கண்ணாயிரம்..மவன..இனி செத்த என்றபடி கம்புடன் நெருங்க.. ஓட்டை வழியாகப் பார்த்த கண்ணாயிரம்.. ஆபத்து ஆபத்து என்றபடி ஓட, அருவாஅமாவாசை கையில் கம்பை ஓங்கியபடி கண்ணாயிரத்தைப் பின்னால் துரத்தினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.