April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

மாமனாரை வென்ற கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram who won the father-in-law/ comedy story / Tabasukumar

27.3.2024
கண்ணாயிரம் தனது மாமா அருவாஅமாவாசையின் அருவாளுக்குப் பயந்து மச்சியில் சோளக்கொல்லை பொம்மை போல் வேட்டியைச் சுற்றிக்கொண்டு தலையில் பானையை மாட்டிக்கொண்டு அதில் சின்ன ஓட்டைப் போட்டு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்.
கண்ணாயிரம் விபத்தில் பலியாகிவிட்டதாக வந்த தகவலை நம்பிய அருவாஅமாவாசை கண்ணாயிரம் ஆவியாக இருப்பதாக நினைத்தார்.

பூனைக்குள் கண்ணாயிரம் ஆவி புகுந்திருப்பதாக நினைத்து அதைவிரட்டிக்கொண்டுச் சென்ற அருவாஅமாவாசை போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைய கண்ணாயிரம் உயிரோடு இருப்பதாக இன்ஸ்பெக்டர் சொல்ல ,கண்ணாயிரத்தை ஒருவழிபண்ணணும் என்று அருவாஅமாவாசை கண்ணாயிரத்தைத் தேடி வீட்டுக்கு வந்தார்.
அங்கு தலையில் மாட்டிய பானையை கழற்ற முடியாமல் கண்ணாயிரம் திண்டாட, பூங்கொடி கண்ணைக்கட்டிக்கொண்டு பானையை கம்பால் உடைக்க முயன்றபோது அருவாஅமாவாசை புயலாக வீட்டுக்குள் புகுந்தார். பூங்கொடியிடம் இருந்த கம்பை வாங்கி அவர் கண்ணாயிரம் தலையில் உள்ள பானையை உடைக்க முயன்றார்.
இதைப்பார்த்த கண்ணாயிரம் பயந்து ஓடினார்.
அருவாஅமாவாசை பின்னால் துரத்திச் செல்ல, கண்ணாயிரம் சுற்றி சுற்றி ஓடினார்.
பானை ஓட்டை வழியாகப் பார்த்து.. மாமா பேச்சு பேச்சாத்தான் இரூக்கணும் கம்பை நீட்டக்கூடாது.. இதைத்தாண்டி நானும் வரமாட்டேன்.. நீங்களும் வரக்கூடாது என்று சாக்பீசால் ஒரு கோடு போட்டார்.
அதைப் பார்த்த அருவாஅமாவாசை.. ஏய் எனக்கே கோடு போட்டு காட்டிறீயா..கோட்டைத்தாண்டி நான் வரக்கூடாதா.. என்னடா உன் பெரிய கோடு.. இதோ நான் தாண்டுறேன் பாரு என்ன செய்வ என்றார்.
தாண்டினா நான் விடமாட்டேன் என்று கண்ணாயிரம் சொல்ல அருவாஅமாவாசை கம்பைச் சுற்றி பாவுலா பண்ணியவாறு கோட்டைத்தாண்ட முயன்றபோது கண்ணாயிரம் பானை மாட்டிய தலையைக் கொண்டு அருவாஅமாவாசை தலையில் மோத பானை டமார் என்று உடைந்தது.
ஆனால் வாவளையம் உடையாமல் கண்ணாயிரம் கழுத்திலே தொங்கியது. தலையில் பானையை உடைத்ததால் கோபம் அடைந்த அருவாஅமாவாசை..டேய்.. நான் உன் தலையை உடைக்கலாமுன்னு நினைச்சா என் தலையிலே பானையை உடைச்சிட்டியா.. இதோ பார்.. உன் தலையை உடைக்காம விடமாட்டேன் என்று கம்பை சுழற்ற.. கண்ணாயிரமும் கதவு மறைவில் எலியை அடிப்பதற்காக மறைத்துவைத்திருந்த கம்பை பாய்ந்து எடுத்தவர்.. வம்புக்கு வம்பு கம்புக்கு கம்பு..பாக்கலாமா மாமா
நீ உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்..டுசியூம்..டுசியூம் என்று பாடியவாறு கண்ணாயிரம் சிலம்பு சுற்றினார்.
அருவாஅமாவாசையும் விடுவதாக இல்லை. டேய் நீதான் பாடுவியா.. நான் பாட மாட்டேனா.பாரு இப்ப.. வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல்.. போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்.. டிசியூம்..டிசியூம்.. என்று பாட்டுப்பாடி கம்பை சுற்றினார்.
கண்ணாயிரம்..சுழன்று கம்பை சுற்ற..அலமாரியில் இருந்த பாத்திரங்கள் கீழே உருண்டன.
இதைப்பார்த்த பூங்கொடி.. அய்யோ. என்பாத்திரம்..என்று கண்ணை கசக்க.. அருவாஅமாவாசை. ஏம்மா.. நீ முழுகாம இருக்க.. நீ உள்ளேப் போ.. நான் அவனைப் பாத்துக்கிறேன் என்று அதட்டியவாறு கம்பை வேகமாக சுற்றினார்.
அது கண்ணாயிரம் காலில் பட ,கண்ணாயிரம்.. என்காலிலே அடிச்சிட்டியளா விடமாட்டேன் என்று கம்பை சுழற்ற அருவாஅமாவாசை லாவகமாக அதைத்தடுத்தார்.
அப்போதும் கண்ணாயிரம் காலில் கம்புபட, கண்ணாயிரம் துடித்தவாறு பட்டகாலிலே படும் என்பார்கள். அதுபோல, ஏற்கனவே பட்டகாலிலே மறுபடியும் பட்டுவிட்டது.. இனிநான் பொறுக்க மாட்டேன் என்று குதித்து குதித்து கம்பை சுற்றியபோது மேல இருந்த கோலமாவு பொடி டப்பா உருண்டு அருவாஅமாவாசை மேல அபிஷேகம் செய்ய, அவர் ஆ என்று அலறினார்.
படுபாவி பய, கோலமாவு பொடிய மேல தட்டிவிட்டுவிட்டான்..கண்ணும் தெரியமாட்டேங்குது என்று அவர் தடுமாறியபோது கண்ணாயிரம் அவரை கம்பால் தாக்கி கீழே தள்ளினார்.
அவர் தடுமாறி கீழே விழுந்த போது கண்ணாயிரம் அவர் நெஞ்சில் கம்பை வைத்து.. கமான்..கமான் என்று சொல்ல.. அருவாஅமாவாசை.. போதும்பா.. போதும்.. என்று கையெடுத்து கும்பிட்டபோது.. உள்ளே வந்த இன்ஸ்பெக்டர், ஜவுளிக்கடைக்காரர், மோட்டார்சைக்கிள் வாலிபர் மற்றும் கண்ணாயிரம் நண்பர்கள் கைத்தட்டி கரோஷம் செயுதனர்.
சிலம்பம் நன்றாக ஆடுறீங்க வாழ்த்துக்கள் என்று கண்ணாயிரம் கழுத்தில் இன்ஸ்பெக்டர் மாலை போட்டார்.
ஜவுளிக்கடைக்காரரும் மோட்டார் சைக்கிள் வாலிபரும் மாலை அணிவித்தார்கள்.
கண்ணாயிரம்,விழித்தபடி, எதுக்கு மாலையெல்லாம் என்று கேட்க, வெளியே பாருங்க என்று மோட்டார் சைக்கிள் வாலிபர் சொல்ல, கண்ணாயிரம் வேகமாக வெளியேப் பார்த்தார்.
அங்கு,பிறந்தநாள் காணும் கண்ணான கண்ணாயிரத்துக்கு இனிய வாழ்த்துக்கள் என்ற போஸ்டர்கள், கண்ணாயிரம் படத்துடன் ஒட்டப்பட்டிருந்தன.
கண்ணாயிரம் வாயெல்லாம் பல்லாக..எனக்கு பிறந்த நாள் என்று யார் சொன்னா என்று கேட்க, மோட்டார் சைக்கிள் வாலிபர்.. அதுவா, எல்லாம் உங்க மாமாதான்.. என்று கையைக் காட்டினான்.
கண்ணாயிரம் அப்படியா என்றவாறு கீழே விழுந்துகிடந்த அருவாஅமாவாசையைத் தூக்கினார்.
அவர். அய்ய.. என்றபடி கோலமாபொடி பறக்க எழுந்து நின்றார்.
அப்போது ஜவுளிக்கடைக்காரர் ஸ்டார்ட் மியூசிக் என்ற சொல்ல வெளியே நின்ற டிரம்ஸ் குழுவினர்… இசை முழக்கினர்.
மங்கல இசை ஒலித்தது.
பூங்கொடி உள் அறையிலிருந்து வெளியே வந்தார். அனைவருக்கும் வணக்கம் சொன்னார். ஆவிபறக்க காபி இருக்கு.. குடிச்சிட்டுப் போங்க என்க அருவாஅமாவாசை.. ஏம்மா.. சூடா காபி இருக்குன்னு சொல்லும்மா.. மறுபடியும் ஆவியைப் பிடிச்சி இழுக்காதே..என்று இடுப்பைப் பிடித்தார்.
பூங்கொடி அனைவருக்கும் கேசரி மற்றும் காபி கொடுத்தார். கண்ணாயிரம் நல்லா இருக்கா.. என்று கேட்க ,அனைவரும் தலையை ஆட்டினார்கள்.
சாப்பிட்டு முடிந்ததும் ஜவுளிக்கடைக்காரர் இன்ஸ்பெக்டரிடம்.. சார் அந்த ஜவுளிப்பாக்கி நாப்பதாயிரம் வாங்கிக்கொடுங்க சார்.. இதுக்காக நான் கார் போட்டு பாளையங்கோட்டைக்குப் போயி ஐம்மதாயிரம் செலவு பண்ணிட்டேன் சார் என்றார்.
கண்ணாயிரம். அதைக்கேட்டு, நழுவி உள் அறைக்குச் செல்ல முயல, அருவாஅமாவாசை மடக்கிப்பிடித்தார்.
ஜவுளிக்கடைக்காரர் கடன் பாக்கிக்கு பதில் சொல் என்று அருவாஅமாவாசை கேட்க.. புதுவையில் உள்ளாட்சி தேர்தல் வரும்போது கொடுக்கிறேன் என்று கண்ணாயிரம் சொல்ல, ஜவுளிக்கடைக்காரர் அலறியது அறை முழுவதும் எதிரொலித்தது.(தொடரும்)

-வே.தபசுக்குமார்
புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.