May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் கொடுத்த அல்வா/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayira gave Alva/ comedy story / Tabasukumar

3.4.2024
கண்ணாயிரம் தன் தலையில் மாட்டியிருந்த பானையை கழற்ற முடியாமல் தவித்தபோது அவரது மாமனார் அருவாஅமாவாசை கம்பால் அடிக்க முயன்றார்.கண்ணாயிரம் உஷாராகி பானையால் அருவாஅமாசை தலையில் மோதி உடைக்க பின்னர் கண்ணாயிரமும் அருவாஅமாவாசையும் சிலம்பம் ஆட அதில் கண்ணாயிரம் ஜெயிக்க இன்ஸ்பெக்டரும் மோட்டார் சைக்கிள் வாலிபரும் கண்ணாயிரத்துக்கு மாலை போட்டு வாழ்த்தினர்.
கண்ணாயிரத்துக்கு பிறந்த நாள் என்பதால் பூங்கொடி அனைவருக்கும் கேசரி மற்றும் காபி கொடுத்து உபசரித்த வேளையில் ஜவுளிக்கடைக்காரர் உஷாராக கண்ணாயிரம் தரவேண்டிய நாப்பதாயிரம் பாக்கியைக் கேட்க..கண்ணாயிரமும் உஷாராக புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் போது பணத்தைத்தருகிறேன் என்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜவுளிக்கடைக்காரர்..கோபத்தில் கத்தினார்.
அப்போது அருவாஅமாவாசை..கோபப்படாதீங்க..உள்ளாட்சி தேர்தலுக்கு வாங்கிய கடனை மீண்டும் உள்ளாட்சி தேர்தல் வரும்போது தருவதுதானே நியாயம் என்று கண்ணாயிரத்துக்கு ஆதரவாகப் பேச, அனைவரும் ஆமா.. அதுதானே நியாயம்..என்றனர்.
ஜவுளிக்கடைக்காரர், உள்ளாட்சி தேர்தல் எப்போ வருவது.. நான் கடனை வசூல்பண்ணுவது.. இது சரியல்ல..ஆமா. .எனக்கு இப்போ கொடுத்தே ஆகணும்.. நான் விடமாட்டேன் என்றார்.
கண்ணாயிரம் உடனே, நீங்க ரொம்ப கோபமா இருக்கீங்க இன்னாங்க.. கூடுதலா கொடுக்கிறேன் கேசரி என்று ஒருதட்டில் கேசரியை ஜவுளிக்கடைக்காரரிடம் நீட்டினார்.அதைப்பார்த்த ஜவுளிக்கடைக்காரர்..
என்ன எனக்கு அல்வா கொடுக்கப் பாக்கிறீயா என்க..கண்ணாயிரம் கேசரியை உற்றுப்பார்த்துவிட்டு.. யோவ், இது கேசரி..இது அல்வா அல்ல என்றார்.
ஜவுளிக்கடைக்காரர்.. ஓ.. இது எனக்குத் தெரியாதா..கேசரி கொடுக்கிற மாதிரி அல்வா கொடுக்கப் பாக்கிற.. நான் ஏமாற மாட்டேன் என்க.. கண்ணாயிரம் ..ஏங்க..இது கேசரிதாங்க.. நல்லாப் பாருங்க..இதிலே அல்வா இல்ல என்றார்.
ஜவுளிக்கடைக்காரர்,ம்..நான் சின்னப்பிள்ளையா.. கேசரிக்குள்ளே அல்வா இருக்கு.. நான் ஏமாற மாட்டேன் என்க.. கண்ணாயிரம் ஒண்ணும் புரியாமல் விழித்தார்.
முதல்ல கேசரியைச் சாப்பிடூங்க.. உங்க கோபம் குறையும்.. அப்புறம் பேசலாம்.. கேசரி கொடுக்கிற மாதிரி அல்வா கொடுக்கப்பாக்கிறேன்னு சொல்லாதீங்க.. நானே நெல்லையிலே இருட்டு கடையிலே வாங்கின அல்வா கொஞ்சம்தான் வச்சிருக்கேன்..எப்படி உங்களுக்கு கொடுக்க முடியும் என்று அப்பாவியாகக் கேட்டார்.
ஜவுளிக்கடைகக்காரர்..என்ன காது குத்தப் பாக்கிறீயா…நான் ஏமாற மாட்டேன் என்க..கண்ணாயிரம்..காது குத்தப்பாக்கிறேனா..என் கையிலே கேசரி தட்டுதானே..இருக்கு இதைவச்சி எப்படி காது குத்தமுடியும் என்று கேட்டார்.
அருவாஅமாவாசையும் ஒண்ணும் புரியாமல் விழித்தார். என்னய்யா கேசரியை கொடுத்தா.. அல்வா கொடுக்கப்பாக்கிறீயா என்கிறார்.. அதைக்கேட்டா காது குத்தப்பாக்கிறீயா என்கிறார்..
ஜவுளிக்கடைக்காரரூக்கு என்ன ஆச்சு,கடனை வசூல் பண்ணமுடியாம மனக்குழப்பத்தில் இப்படி பேசுறாரோ..வெயிலு வேற அதிகமாக இருக்கு.. நாமளே லூசாயிருவோம் போலிருக்கு..மருமகன் கண்ணாயிரம் எப்படி தாங்குவான்..என்று நினைத்தார்.
இன்ஸ்பெக்டரும்..யோசித்தபடி நின்றார்.
கண்ணாயிரம்…கேசரி தட்டை மீண்டும் ஜவுளிக்கடைக்காரரிடம் நீட்ட.. அவர் வேண்டாம்.. கேசரி கொடுத்திட்டு அப்புறம் அல்வா கொடுக்க நினைக்கிற..இது நல்லதல்ல என்றார்.
கண்ணாயிரம் உடனே..ஓ..முதல்ல அல்வா,அப்புறம் கேசரி கேட்கிறாரா..இது எனக்கு புரியாமச் போச்சே, சரி..கேசரி இருக்கட்டும் முதலில் அல்வா கொடுப்போம் என்று நினைத்தார்.
அல்வா கொஞ்சம்தான் இருக்கு, பராவாயில்லை..அவரை முதலில் சமாதானப்படுத்துவோம் என்று உள் அறைக்குள் சென்று மற்றொரு தட்டில் அல்வா எடுத்துவந்தார்.
ஏங்க..முதலில் கேசரி கொடுப்ப,அப்புறம் அல்வா கொடுக்கப் பாப்பன்னு கோபப்பட்டீங்க..அதனால தட்டில முதலில் அல்வா கொடுக்கிறேன்..அப்புறம் கேசரி கொடுக்கிறேன் சரியா என்று ஜவுளிக்கடைகாரரிடம் அல்வா தட்டை நீட்டிளார்.
அதைப் பார்த்த ஜவுளிக்கடைக்காரர், ஏய் எனக்கு அல்வா கொடுக்கிறீயா,நான் பாக்காத அல்வாவா.. திருநெல்வேலிக்குப் போயிட்டு அல்வா வாங்காமல் வருவேனா.காரில் ஐம்பது அல்வா பாக்கெட்டு இருக்கு..புதுவையிலே விக்கப் போறேன்.. என்க கண்ணாயிரத்துக்கு தூக்கிவாரிப்போட்டது. அல்வா கொடுத்தாலும் அல்வாவேண்டாம் நிறைய இருக்கு என்கிறாரு..ரொம்ப சூடா இருக்காரு..தண்ணி கொடுத்துப்பாப்போம் என்று கண்ணாயிரம் நினைத்தார்.சரி..அல்வா வேண்டாமா.. தண்ணி தருகிறேன் என்று ஒரு டம்ளரில் தண்ணி கொண்டுவந்தார்.
இதோ பாருங்க..இந்த தண்ணியை நல்லாப் பாருங்க..சுத்தமான தண்ணி..குளிர்ச்சியா இருக்கு..உங்கக்கிட்ட தண்ணியக் காட்டிட்டேன்..குடிங்க என்று ஜவுளிக்கடைக்காரரிடம் கண்ணாயிரம் தண்ணீர் டம்ளரை நீட்டினார்.
அதைப் பார்த்த ஜவுளிக்கடைக்காரர், ஏய் எனக்கே தண்ணி காட்டுறாயா என்று கோபமாகச் சொல்ல,அருவாஅமாவாசை ..யோவ்..எதைச்சொன்னாலும்..மாத்தி மாத்திப் பேசுறய்யா சரியா பேசுய்யா என்றார்.
கண்ணாயிரம் உடனே,ஆமா அவர் ஜவுளிக்கடைகாரர்..டிசைன் டிசைன்னா பேசுறாரு,..என்க ஜவுளிக்கடைக்காரர்..ஆமாய்யா..நான் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னுதான் பேசுவேன்..என்றார்.
கண்ணாயிரம்..வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா எப்படி..வெட்டுனா..கட்டுற துண்டு ஒண்ணுதான வரும்..சரி எதுவும் வந்துட்டுப் போகட்டும்..தண்ணியை குடிக்கச் சொல்லுவோம் என்று சரி..எதுவும் இருக்கட்டும்..தண்ணியைக் குடிங்க என்று கண்ணாயிரம் சொல்ல, ஜவுளிக்கடைக்காரர்..ஏய் உப்பு தின்னவன்தான் தண்ணி குடிக்கணும்..நான் ஏன் குடிக்கணும்..நீ ஜவுளி வாங்கிட்டு நாப்பதாயிரம் தராம பட்டைநாமம் போடப் பாக்கிற..நீதான் குடிக்கணும்..குடி..என்றார்.
கண்ணாயிரம் உடனே..என்னங்க..இல்லாததும் பொல்லாததுமாகப் பேசுறீங்க..நான் தண்ணி கொடுத்தேன். ஆனா பட்டை நாமம் போடப்பாக்கிறேன் என்கிறீங்க.. என்னாச்சு உங்களுக்கு..என்றார்.
ஜவுளிக்கடைக்காரர் யோவ்..எனக்கு நாப்பதாயிரம் கடன் தொகையை கொடுத்தாப் போதும்..என்க..கண்ணாயிரம்..சரிசார்..நான் இங்கேதான் இருப்பேன்..எப்படியும் தேர்தல் வந்ததும் தந்துருவேன் என்க..ஜவுளிக்கடைக்காரர்.. ஏய் உன்னைநம்ப முடியாது..ஏற்கனவே கடன் தொகையைக் கேட்டதுக்காக..குற்றாலத்துக்கு கம்பியை நீட்டிட்ட.. இனியும் கம்பியை நீட்ட முடியாது என்க,கண்ணாயிரம்..சார்..ஜவுளிக்கடைகாரர் சார்..நீங்க நல்லவங்க..வல்லவங்க..பலருக்கும் கடன் கொடுத்து வாழவைத்தவங்க..நீங்க மனிதரே அல்ல மகான் என்றார்.
ஜவுளிக்கடைக்காரர்,ஏய் என்ன ஜஸ்வைக்கிறீயா.. இதுக்கெல்லாம் நான் ஏமாற மாட்டேன் என்க கண்ணாயிரம்..அய்யய்யோ.. அய்யய்யோ..என்னால தாங்க முடியல..தலை சுத்துது என்றபடி மயங்கி விழுந்தார்.
ஜவுளிக்கடைகாரர்..அய்யய்யோ..போயிரப் போறான்யா..தண்ணி தெளிங்க..தண்ணி தெளிங்க என்று கத்தினார்.( தொடரும்)
-வே.தபசுக்குமார்
புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.