May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் பீடி தொழிலாளியின் மகள் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி

1 min read

Beedi worker’s daughter in Red Fort clears IAS exam

18.4.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் நடத்துனர் சீனிவாசன், பீடி சுற்றும் தொழிலாளி ஸ்டெல்லா ஆகியோரின் மகள் இன்பா என்பவர் 851 வது ரேங்க் எடுத்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 2023 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாத புரம் பகுதியைச் சார்ந்த இன்பா (வயது 26) என்பவர் 851 வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இவர் செங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு நூலகத்தில் படித்த தோடு பல்வேறு பயிற்சி தேர்வுகளிலும் பங்கு பெற்றுள்ளார்.

இது பற்றி இன்பா கூறியதாவது:- எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றேன். நான் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிப்பதற்காக செங்கோட்டை ரயில்வே கேட் பகுதியில் உள்ள விஸ்வநாதபுரம் அம்பேத்கர் தெருவுக்கு வீட்டை மாற்றினோம்.செங்கோட்டை அருகே தனியார் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளை படித்தேன். கோவையில் உள்ள சிஐடி தொழில்நுட்ப கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தேன். படிப்பு முடித்தவுடன் ஐஏஎஸ் தேர்வுக்காக சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து ஓராண்டு படித்தேன். அப்போது கொரோனா பரவிய காலம் என்பதால் ஆன்லைன் வகுப்பில் பயின்றேன்.

முதன்மைத் தேர்வு இரண்டு முறை எழுதி என்னால் வெற்றி பெற முடியவில்லை. மூன்றாவது முறையாக எழுதி வெற்றி பெற்று சென்னையில் உள்ள தமிழக அரசு சிவில் சர்வீஸ் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து அங்கு தங்கி மூன்று ஆண்டுகள் பிரதான தேர்வுக்கு படித்தேன். இப்போது 851 வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறேன்.

எனது தந்தை சீனிவாசன் திருச்சி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் நடத்துனராக வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். எனது அம்மா ஸ்டெல்லா பீடி சுற்றும் தொழிலாளியாக இருந்து வருகிறார். எனது அண்ணன் பாலமுரளி சவுதி அரேபியாவின் கேஸ் கம்பெனியின் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அவர்தான் என்னை அடிக்கடி நீ ஐஏஎஸ் படித்து கலெக்டராக வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

செங்கோட்டை நூலகமும் எனது படிப்புக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது கஷ்டப்பட்ட எங்கள் குடும்பத்தை வறுமையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்று உறுதியோடு பயின்றேன். எனது கடின உழைப்புக்கு கிடைத்தது தான் இந்த வெற்றி இந்த ரேங்கிற்கு ஐஏஎஸ் கிடைக்குமா என தெரியவில்லை. இருப்பினும் மீண்டும் படித்து ஐஏஎஸ் ஆவது எனது லட்சியம் என்றார்.

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இன்பாவிற்கு செங்கோட்டை அரசு நூலகத்தின் நூலகர் கோ இராமசாமி, வாசகர் வட்ட நிர்வாகிகள் செண்பக குற்றாலம், கற்குடி சேகர் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.