குற்றாலத்தில்பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு-ஐகோர்டு உத்தரவு
1 min read
High Court orders monitoring committee to ensure safety at Courtallam.
6.8.2026
குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், தாக்கல் செய்த மனுவில், ‘குற்றாலம் அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கும், சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத செயல்களை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்காசி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘குற்றாலநாதசுவாமி கோயில் மற்றும் அருவியைச் சுற்றியுள்ள 152 தற்காலிக கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 80 கடைகள் மட்டுமே ஏலம் அல்லது ஒதுக்கீட்டுக்கு அனுமதிக்கப்படும்.
மீதமுள்ள 72 கடைகள் பாதுகாப்பு, பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஏலத்தில் சேர்க்கப்படாது. மேலும், தீ விபத்து ஏற்பட்ட தெற்கு வெளிப் பிரகார பகுதியில் இருந்த 62 கடைகள் அகற்றப்பட்டு அங்கு கோயில் நந்தவனம் அமைக்கப்படும். மற்றொரு பகுதியில் 10 கடைகள் இருந்த இடம் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்படும்.
ஏலத்தில் விடப்படும் 80 கடைகளில் எரிவாயு சிலிண்டர், மர விறகு பயன்படுத்தி சமையல் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு, தீ அபாயம் இல்லாத பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், “நந்தவனத் திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றால சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து, கூட்ட நெரிசல், மருத்துவ வசதிகள், வாகன போக்குவரத்து, தீ விபத்து தடுப்பு உள்ளிட்ட அம்சங்களை தொடர்ந்து கண்காணிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆக.24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.