June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

பழைய குற்றாலம் அருவியை வனத்துறை அபகரிக்க கூடாது-ஆயிரப்பேரி பஞ். தலைவர் மனு

1 min read

The forest department should not usurp the old Koortalam waterfall-Ayirapperi Panj. President Manu

23.5.2024
தென்காசி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்ட பழைய குற்றாலம் அருவியை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் வனத்துறை அபகரிக்க முயற்சி செய்வதை தடுத்து நிறுத்த கோரி ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தி .சுடலையாண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்கும் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, தேனருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகள் உள்ளது. இதில் பழைய குற்றாலம் அருவி 1960 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட சிறப்புமிக்க அருவியாகும்.

ஆண்டுதோறும் சீசன் காலங்களில் பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு என நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். இந்த அருவியை வனத்துறையினர் திட்டமிட்டு அபகரிக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த காலங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்து வந்த தேனருவி, செண்பகாதேவி அருவிகளில் பொதுமக்கள் குளிக்க வருவது வனவிலங்குகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி தேனருவி செண்பகாதேவி அருவிகளை அபகரித்து பொதுமக்களை குளிக்க விடாமல் தடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் இருந்துவந்த விஐபி அருவி என்று அழைக்கப்பட்ட பழத்தோட்ட அருவியை அபகரித்து பொதுமக்களை நுழைய விடாமல் தடுத்ததோடு அந்த அருவியின் முன் பகுதியில் சுவர் கட்டி பழத் தோட்ட அருவியையேஇருந்த தடம் தெரியாமல் அழித்து விட்டனர்.

அதனைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவிக்கு அருகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக குளித்து வந்த சிற்றருவியை வனத்துறையினர் அபகரித்து பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூலித்து வருகிறார்கள். அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பழைய குற்றாலம் அருவிகள் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த வெள்ளத்தில் சிக்கிய ஒரு சிறுவன் உயிரிழந்தான். இந்நிலையில் வனத்துறையினர் திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் பழைய குற்றாலம் அருவியை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப் போவதாக பொய்ச் செய்திகளை பரப்பினார்கள். இந்தத் தகவலை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் உடனடியாக மறுத்துள்ளார் .பழைய குற்றாலம் அருவியை வனத்துறை இடம் ஒப்படைக்கும் என்னும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆனாலும் வனத்துறையினர் எந்தவிதமான முன் அறிவிப்பும் இனறி பழைய குற்றாலம் அருவிக்குச் செல்லும் பாதையில் அவசர அவசரமாக டோல்கேட் அமைக்க முயற்சி செய்தனர் இதற்கு சுற்றுலாப் பயணிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர்
தி.சடலையாண்டி தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார் அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள பழைய குற்றாலம் அருவி 1960 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்ட அருவி ஆகும். இந்த அருவி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதோடு அதில் விழும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வதோடு அந்த அருவியில் விழும் தண்ணீரால் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும் பழைய குற்றாலம் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை சார்ந்து 200க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் நாள்தோறும் பயன் பெற்று வருகிறார்கள்.

பழைய குற்றாலம் அருவிப்பகுதி கடந்த பல ஆண்டுகளாக ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது இங்கு சாலை வசதி, தெரு விளக்கு வசதி, கார் பார்க்கிங் வசதி, சுகாதார வசதி, குடிநீர்வசதி அருவி பகுதிகளில் ஒளி வெள்ள விளக்குகள், ஒலிபெருக்கி வசதி சிசிடிவி கேமரா உள்ளிட்ட பணிகளை ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் சிறப்பாக செய்து வருகிறோம்.

இதில் எந்த வித பணியையும் செய்யாத வனத்துறையினர் பழைய குற்றாலம் அருவியை அபகரிக்க முயற்சி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் யாரிடத்திலும் முன் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக திடீரென டோல்கேட் அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த தேனருவி செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளை அபகரித்து இயற்கை அளித்த வரமான அருலிகளில் பொதுமக்களை குளிக்க விடாமல் தடுத்த வனத்துறையினர் இப்போது பழைய குற்றாலம் அறிவியையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் தடுக்கும் முயற்சியில் அதனை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு நம்பி கோவில் பகுதிகளில் உள்ள அருவிகள் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் சுதந்திரமாக குளித்து மகிழ்ந்து வந்த நிலையில் இதே வனத்துறையினர் அதையெல்லாம் அபகரித்து இன்றைக்கு பொதுமக்கள் நுழைய விடாத அளவுக்கு பல்வேறு கெடுபிடிகள் செய்வதோடு அந்த அருவிக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களிடம் குளிக்க பார்வையிட ஒவ்வொரு நபருக்கும் கட்டணம் என்ற பெயரில் மறைமுகமாக கெடுபிடி வசூல் செய்து வருகின்றனர்.

இது போன்ற நிலை பழைய குற்றாலத்திற்கும் வந்து விடக்கூடாது. எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு இயற்கை தந்த வரமான பழைய குற்றாலம் அருவியில் வழக்கம் போல் பொதுமக்கள் குளித்து மகிழ்வதற்கும், சிறந்த சுற்றுலாத்தலமான பழைய குற்றாலத்தை வழக்கம்போல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் வனத்துறையினரின் முயற்சிக்கு தடை விதிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவின் நகலினை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *