திருச்செந்தூரில் ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
1 min read50 lakh beedi leaves confiscated in Tiruchendur
31.5.2024
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணம் கடற்கரைக்கு செல்லும் பாதை வழியாக இலங்கைக்கு வாகனம் மூலம் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக மாவட்ட `கியூ’ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதய ராஜகுமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லோடு வேனில் 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டைகள் பீடி இலைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
போலீசார் வாகனத்தை சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். இதை யடுத்து பீடி இலைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த ‘கியூ’ பிரிவு போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, வெள்ள மடத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 63) என்பவரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதேபோல் நேற்று அதிகாலை தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதற்கு முன்பு வேம்பார் கடற்கரையில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன்படி ஒரே வாரத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள பீடி இலை கடத்தல்களை `கியூ’ பிரிவு போலீசார் தடுத்து கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.