மாமனாரை மாட்டிவிட்ட கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை /தபசுகுமார்
1 min readKannayiram who caught the father-in-law/comedy story /Tapaskumar
14.7.2024
கண்ணாயிரம் பஸ்விபத்தில் பழைய நினைவுகள் இழந்த நிலையில் தன் மனைவி மற்றும் மாமனார் அருவாஅமாவாசை ஆகியோரையும் மறந்துவிட்டார்.
இந்நிலையில் தலையில் டை அடித்துக்கொண்டு கறுப்புக்கண்ணாடி மாட்டிக்கொண்டு கண்ணாயிரம் வீட்டுக்கு வந்த அருவாஅமாவாசை.. தன் மகள் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து கண்ணாயிரத்திடம் சொல்ல அவர் அதற்கு தான் காரணம் இல்லை என்று சொல்ல அருவாஅமாவாசை கோபத்தில், கண்ணாயிரம் முகத்தில் கறுப்பு டையை தடவ கண்ணாயிரம் அந்த கருப்பை அழிக்க முயற்சி செய்ய அதைத் தடுக்க, அருவாஅமாவாசை கயிறை எடுத்து கண்ணாயிரம் கைகளில் கட்டி வெளியே இழுத்துவந்தார்.
கருப்பை அழிக்க முயலுகிறான் என்று அருவாஅமாவாசை சொன்னதை கண்ணாயிரம் யாரையோ கற்பழிக்க முயன்றதாக நினைத்த ஊர் பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர்.
அருவாஅமாவாசை தலையிட்டு.. அடிக்காதீங்க.. அடிக்காதீங்க..பொண்டாட்டி கர்ப்பமானதுக்கு தான் காரணம் இல்லைங்கிறான்..அதை மட்டும் கேளுங்க..அடிக்காதீங்க என்றார்.
அதைக்கேட்ட ஊர் பிரமுகர்கள். என்னைய்யா உளருற..கற்பழிக்க முயற்சி பண்ணினான்.அதான் கையைக் கட்டிவச்சிருக்கேன் என்று சொன்ன என்க.. அருவாஅமாவாசை.. ஏங்க..நான் அப்படி எங்க சொன்னேன்..முகத்திலே பூசின கருப்பை அழிக்கப் பாக்கிறான் என்றுதான் சொன்னேன்.. நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிய.. நான் என்ன பண்ணுறது என்றார்.
கிழிஞ்சது போ என்று தலையில் அடித்த ஊர் பிரமுகர்கள்..என்னய்யா பஞ்சாயத்து என்று அருவாஅமாவாசையிடம் கேட்க.. அவர்..அய்யா.. என் மகள் பூங்கொடி கர்ப்பமாக இருக்கா அதுக்கு தான் காரணமில்லை என்று கண்ணாயிரம் சொல்லுறான்.. இது நியாயமா..கேளுங்க கண்ணாயிரத்துக்கிட்ட என்றார்.
ஊர்பிரமுகரில் ஒருவர் கண்ணாயிரத்திடம்..என்னப்பா கண்ணாயிரம்..உன் மனைவி கர்ப்பமானதுக்கு நீ காரணமில்லையா..என்னப்பா சொல்லுற என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம்..அவங்க என் மனைவியே இல்லை என்றார்.
ஊர் பிரமுகருக்கு தூக்கிவாரிப் போட்டது. பூங்கொடியிடம்.. ஏம்மா.. உன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று கேட்க, பூங்கொடியோ.. நான் கர்ப்பமே இல்லை என்றார்.
அதைக்கேட்ட ஊர் பிரமுகர்கள் என்னய்யா ஒரே குழப்பமாக இருக்கு..என்னய்யா அருவாஅமாவாசை..உன் பொண்ணு தான் கர்ப்பமே இல்லங்குது.. என்க அருவாஅமாவாசை.. ஏங்க அவாதான் முழுகாம இருக்கேன் என்று சொன்னா.. அவக்கிட்டே கேளுங்க என்க.. அவர்கள் பூங்கொடியிடம்..ஏம்மா..நீ முழுகாம இருக்கியா என்று கேட்க..அவர்..ஆமா நான் முழுகாம இருந்தேன் என்றார்.
ஊர் பெரியவர்..ஏம்மா ..நீ முழுகாம இருக்கேன் என்று சொல்லுற ஆனா கர்ப்பமா இல்லைங்கிற. எங்களுக்கு புரியலையே என்று கேட்க,.. பூங்கொடி.. ஏன் புரியலை என்று கேட்க, ஊர் பெரிவர் கொஞ்சம் விளக்கமா சொல்லும்மா என்றார்.
உடனே,பூங்கொடி.. ஏங்க.. குற்றாலத்துக்கு போயிட்டு திரும்பும்போது தாமிரபரணியிலே முழுகிட்டுவாங்கன்னு எங்க அப்பா சொன்னாரு.. அவரு என் வீட்டுக்காரரு தாமிரபரணியிலே மூழ்கி எழுந்தாரா.. நான் முழுகலை. தலையிலே தாமிரபரணி தண்ணியை தெளிச்சிட்டு வந்திட்டேன்.. அதனாலத்தான் நான் முழுகாம இருக்கேன் என்று சொன்னேன்… மற்றபடி நான் கர்ப்பம் இல்லை என்றார்.
ஊர் பிரமுகர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து உதட்டை கடித்தனர். சரிம்மா..கண்ணாயிரம் உன்னை தன் மனைவி இல்லைங்கிறாரே.. அது ஏன்.. என்று கேட்டனர்.
அதற்கு பூங்கொடி..ஏங்க..இப்போ அப்படிதான் சொல்வாரு..கொஞ்சநாள் போனபின்.. பூங்கொடிதான் என் மனைவி என்பாரு என்றார்.
ஊர் பிரமுகர்..ஓ..புருஷன்.
பொண்டாட்டி சண்டையா..அதுதான். அவா என் பொண்டாட்டியே இல்லைங்கிறானா என்று சொல்லி சிரித்தனர்.
அருவாஅமாவாசையைப் பார்த்து..யோவ்.புருஷன் பொண்டாட்டி சண்டையை பெரிசாக்கிக்கிட்டு இருக்கியா..போ..கயிறு கட்டை கழற்றிவிடு.. அவன் முகத்து கரியை அழிச்சிவிடும் என்றார்கள்.
அருவாஅமாவாசை..ஏங்க என்னையே தன் மாமன்னு ஏத்திக்கிடமாட்டேங்கிறான்..இதுக்காக செலவுபண்ணி டையெல்லாம் அடிச்சிட்டு வந்தேன். எல்லாம் வேஷ்டாப் போச்சு என்று அழ.. ஊர்பிரமுகர்கள்..அழ வேண்டாம்..கண்ணாயிரம் உங்களை மாமான்னு கூப்பிடுவான் என்று சொல்ல, கண்ணாயிரம்.ஃஇவரு எங்க மாமா இல்லை. எங்க மாமா மாதிரி வேடம் போட்டுவிட்டு வந்திருக்கார்.. எங்க மாமா சொத்தை ஆட்டையப் போட பாக்கிறாரு என்று கண்ணாயிரம் கத்த அருவாஅமாவாசை ஆவேசமானார்.
இவன் கட்டை அவிழ்த்துவிடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். கண்ணாயிரம்..ஆ.. கொதிக்குது உள்ளம்..கொந்தளிக்குது எனது நெஞ்சு. எனது கைகளில் கட்டா..விடமாட்டேன்..என்று கைகளை முறுக்கினார். கயிறு அவிழவில்லை.
கண்ணாயிரம் கொஞ்சம் யோசித்தார்.பின்னர் என் கைக்கட்டை அவிழ்த்துவிடுங்க உங்களை மா ..மா..என்று சொல்கிறேன் என்றார்.
அருவாஅமாவாசையும்..அப்படியா..உண்மையாகவா என்றபடி கண்ணாயிரத்தின் கைக்கட்டை அவிழ்த்துவிட்டார்.
அவ்வளவுதான்..கண்ணாயிரம்..அப்பாட தப்பிச்சேன் என்க அருவாஅமாவாசை.. ஏய் மாமா சொல்லு என்றார்.
கண்ணாயிரம் அப்படியா என்றபடி அருவாஅமாவாசையை கைகளை கயிறால் கட்டினார். இதை எதிர்பாராத அருவாஅமாவாசை..டேய்..விடுடா விடுடா என்று கேட்க..கண்ணாயிரம்..ம்..விடமாட்டேன்..என்றபடி அவரது கன்னத்தில் டை கறுப்பை பூசினான். அந்த நேரத்தில் போலீஸ் ஜீப் வர.. அருவாஅமாவாசை திணறினார். அவரை அடையாளம் தெரியாமல்..யாரய்யா என்று போலீசார் கேட்க.. கண்ணாயிரம் மாமனார் என்று சொன்னால்.. இங்கே வரக்கூடாது என்று சொல்லியிருக்கோம்..ஏன் வந்த என்று கேட்பாங்க..அதனால கதையை மாத்துவோம் என்று நினைத்தவர்..நானா சார்..நான் வேஷம் போட்டு ஆடுறவன் சார் என்றார்.
அப்படியா வண்டியிலே ஏறு..ஊருல நிறைய திருட்டு போகுது..முகத்திலே கரியை பூசிக்கிட்டுதான் திருடன் இரவில் வருவதாக எங்களுக்கு தகவல் வந்துச்சு.. இப்போ பகலிலே வந்திட்டியளா.. ஏறு வண்டியிலே என்றபடி அருவாஅமாவாசையை ஜீப்பில் ஏற்றினர்.
அவர் நான் திருடன் இல்லை..இல்லை என்க..கண்ணாயிரம் கொண்டு போங்க அவரை என் முகத்திலும் கரியை பூசிட்டாரு என்றார். ஜீப் விரைந்தது.(தொடரும்)
-வே.தபசுக்குமார்
புதுவை.