September 16, 2024

Seithi Saral

Tamil News Channel

இளைமையாக கண்ணாயிரம் வாங்கிய கிரீம்../நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Cream bought by Kannayiram.. /Comedy story/ Tabasukumar

20/7/2024
கண்ணாயிரம் பஸ்விபத்தில் பழைய நினைவுகளை மறந்ததால் தன் மாமனார் அருவாஅமாவாசையையும் அடையாளம் தெரியாமல் அவரை எதிரியாக நினைத்தார். அவர் முகத்தில் டை கறுப்பை பூசி அவரது கையை கட்டிவிட்டார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்துச்சென்றனர்.
போலீஸ் நிலையத்தில் அவரிடம் திருடன் என்று போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது அவர் தான் திருடன் இல்லை என்று பல முறை கூறினார். ஆனால் போலீசார் ஏற்கவில்லை. உன்முகத்தில்தானே கரி பூசியிருக்கு .. நீதான் திருடன் என்றனர்.
அதற்கு அருவாஅமாவாசை.. அய்யா… அந்த கண்ணாயிரம் முகத்திலும் கரி பூசியிருந்ததே அவரை ஏன் கைது பண்ணல என்று கேட்டார்.
அதற்கு போலீசார்.. என்ன அப்படி சொல்லுகிறீர்.. திருட வந்த உம்மைதானே கயிறால் கட்டிவச்சிருந்தாங்க என்று சொன்னார்கள்.
அதற்கு அருவாஅமாவாசை..அய்யோ..நான் திருடன் இல்லைங்க.. கண்ணாயிரத்துக்கு பழைய நினைவுகள் மறந்ததால் அவருக்கு இளமையான மாமனாராக காட்டுவதற்கு தலைக்கு டை அடிச்சிட்டு கண்ணாடி போட்டு போனேன். அவருக்கும் எனக்கும் சின்னதகராறு வந்ததால் அவர் முகத்தில் என்னுடைய கருப்பு டையை பூசினேன். பதிலுக்கு அவன் என் முகத்தில் கருப்பு டையை பூசிவிட்டான்.. கையை கட்டிப்புட்டான்.. என் கைட்டை அவிழ்த்து விடுங்கய்யா என்றார்.
போலீசாரோ ..இன்ஸ்பெக்டர் வந்தபிறகு விடுகிறோம் என்றார்கள். அருவாஅமாவாசை.. அடேய்..கண்ணாயிரம் என் முகத்தில் கரியை பூசி மாட்டிவிட்டுவிட்டாயே.. என்று புலம்பியபடி இருந்தார்.
இந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் அங்கு வந்தார். யாரது என்று அருவாஅமாவாசையைப் பார்த்து கேட்க ,போலீசார் விவரத்தை சொன்னார்கள்.
இன்ஸ்பெக்டர் கோபத்தில்,யோவ்..ஏற்கனவே முகத்திலே கரியை பூசிக்கிட்டுதான் இரவில் திருடன் சில வீடுகளில் திருடிவிட்டுப் போயிருப்பதாக தகவல் வந்திருக்கு.. நீரும் முகத்திலே கரியை பூசிட்டு வந்து மாட்டியிருக்கீரு. .உம்மிடம் தொடர்ந்து விசாரிக்கணும். உம்மேல சந்தேகமா இருக்கு. இங்கே இரும்..வெளியிலே வீடுகளில் திருட்டுப் போகலைன்னா உம்மை விட்டுவிடுகிறேன்.. என்று அருவாஅமாவாசை முதுகில் இரண்டு போடு போட்டு உட்காரவைத்தார்.
அருவாஅமாவாசை முதுகை தடவியபடி..அம்மா.. வலிக்குதே என்றவாறு உட்கார்ந்தார்.

கண்ணாயிரம் வீட்டில் பூங்கொடி மீது கோபப்பட்டார். என்னங்க..என் அம்மா வெளியூர் போனதால் எனக்கு உதவியா நீங்க இருக்கீங்க.. அதனால..பல பிரச்சினைகள் வருகுது.. அதனால நீங்க உங்க வீட்டுக்குப் போங்க.. நான் என்னைப் பாத்துக்கிறேன். திடீரென்று நீங்க வாந்தி எடுத்தா அதுக்கும் நான்தான் காரணம் என்று பிரச்சினைவரும். அது நல்லதில்லை. நான் கலியாணம் ஆகாத கன்னிப் பையன். எனக்கு என் பூதான் வேணும். ஒல்லியா..கறுப்பா இருந்தாலும் களையாக இருக்கிற என்காதலிதான் வேணும். என்மாமா எதிர்ப்பு தெரிவிக்கிறதால திருமணம் தடைபடுகிறது. நீங்க வேற இங்கே இருந்தா என் பூவை நான் திருமணம் செய்ய முடியாமல் போய்விடும். அதனால் நீங்க போங்க என்றார்.
பூங்கொடிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் தான் உங்க பூவுஎன்று சொல்லமுடியவில்லை.. திணறினார்.
கண்ணாயிரம்..என்ன யோசிக்கிறீங்க..கிளம்புங்க என்று அவசரப்படுத்தினார்.பூங்கொடி..சரி..ஒருவாரம் அப்பா வீட்டில் இருந்துவிட்டு வருவோம் என்று நினைத்தார். ஆனாலும் பிகு பண்ணினார். நான் போகமாட்டேன்.. நான் போனா..எப்படி சாப்பிடுவீங்க என்று பூங்கொடி கேட்க.. கண்ணாயிரம்..ம் நான் எப்படி சாப்பிடுவேன் என்று கேட்கிறீர்களா.. கையாலத்தான் சாப்பிடுவேன் என்று ஜோக்கடித்தார்.
பூங்கொடி உடனே எப்படி சமைப்பீங்க என்று கேட்க.. கண்ணாயிரம் அதுவா..ஓட்டலில் சாப்பிடுவேன் என்றார்.
அதற்கு பூங்கொடி..நான் போயிட்டா..ரொம்ப வருத்தப்படுவீங்க என்க..கண்ணாயிரமோ..நீங்க போகாட்டிதான் வருத்தப்படுவேன் என்றார்.
அதனால் கோபம் அடைந்த பூங்கொடி.. இதோ.. இப்பவே புறப்படுகிறேன் என்றபடி சூட்கேசில் சேலைகளை எடுத்து அடுக்கினார். கண்ணாயிரம் பார்த்துக்கொண்டே இருந்தார்.
பூங்கொடி சூட்கேசுடன் பஸ் நிறுத்தத்துக்கு புறப்பட்டார். கண்களில் கண்ணீர் முட்டியது. சேலையால் துடைத்துக்கொண்டார். கண்ணாயிரம்.. அழுதெல்லாம் என்னை ஏமாத்தமுடியாது.. போங்க என்றார்.
பூங்கொடி..அட போய்யா என்றபடி பஸ்நிறுத்தத்திற்கு சென்றார். அங்கு வந்த பஸ்சில் ஏறினார். பஸ் விரைந்தது.
கண்ணாயிரம் எதையும் கண்டு கொள்ளவில்லை.வேகமாக உள்ளே சென்று முகக்கண்டியைப் பார்த்தார்.இளமை தோற்றம் தெரியவில்லை.எல்லாம் இந்த ஸ்கேன் எடுத்தவன் பண்ணின வேலை.. முகத்தை கெடுத்துப்புட்டான். ஏதோ கிரீம் போட்டா சரியாகிவிடும் என்று அந்தப் பெண் சொல்லிச்சே.. எந்த கிரீமுன்னு கேட்காம விட்டுவிட்டேனே.. ச்சே அவசரப்பட்டுவிட்டோம்..அந்த கிரீம் பேரை கேட்டிருக்கலாம் என்று புலம்பினார்.
அப்போது சைக்கிளில் பெட்டிவைத்தபடி ஒருவர்.. சிங்கப்பூர் கைலி,சிங்கப்பூர் சென்டு என்றபடி சைக்கிளில் விற்றுக்கொண்டுவந்தார்.
கண்ணாயிரம் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார். ஏங்க..நில்லுங்க..நில்லுங்க..கிரீம் இருக்கா என்று கேட்டார்.
அதற்கு அவர், சோப்பு, சீப்பு, கிரீம், பவுடர் எல்லாம் இருக்கு.. அதைப் போட்டால்..இருபதுவயசு இளைஞன் மாதிரி ஆகிடுவீங்க..பெண்கள் உங்களை சுத்தி சுத்தி வருவாங்க என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.அடடா..இருபது வயசு இளைஞர் மாதிரி ஆகிடலாம்..விடக்கூடாது..எல்லாத்தையும் வாங்கிடவேண்டியதுதான் என்று நினைத்தார்.
சென்ட் விற்க வந்தவரிடம் எல்லாம் நல்லா இருக்குமா என்று கண்ணாயிரம் கேட்க..என்ன அப்படி கேட்டுப்புட்டீங்க..இன்னாங்க பாருங்க சிங்கப்பூரு சென்டு என்று ஒரு பாட்டிலை எடுத்து திறந்து ஒரு சொட்டு எடுத்து கண்ணாயிரம் கையில் பூசினார். ஆ.. என்ன மணம்..என்ன மணம் என்று கண்ணாயிரம் புகழ்ந்தார்.
கிரீம் எப்படி என்று கண்ணாயிரம் கேட்க, சென்ட் வியாபாரி ஒரு கிரீம்பாட்டிலை திறந்து கண்ணாயிரத்திடம் கொடுக்க.. கண்ணாயிரம் இதுவும் நல்லாத்தான் மணக்கு.. சிங்கப்பூருன்னா.. சிங்கப்பூருதான் என்று புகழ்ந்தார்.
ஒவ்வொன்றிலும் இரண்டு கொடுங்கள் என்று சென்ட் வியாபாரியிடம் கேட்டார். அவர் மகிழ்ச்சியில் சென்ட் பாட்டில், கிரீம்பாட்டில்,பவுடர் டப்பா,சோப்பு ,ஷாம்பு பாட்டில் என்று இரண்டு இரண்டாக கொடுத்தார்.
கண்ணாயிரம் கிரீம் பாட்டிலைப் பார்த்தார். அது சிறியதாக இருந்தது. அடடா.சின்னதாக இருக்கே..சீக்கிரம் காலியாகிடும் போலிருக்கே..காலியானா சென்ட் வியாபாரியை எங்கேப் போய் தேடுறது என்று நினைத்தார்.
உடனே..கிரீம் பாட்டில் வேறவச்சிருக்கியளா.. என்று கேட்க..சென்ட் வியாபாரி..அதுவா பத்து பாட்டில் இருக்கு என்க..அப்படியா இன்னும் ஐந்துபாட்டில் கொடுங்க என்று கேட்டுவாங்கினார் கண்ணாயிரம்.
சென்ட் வியாபாரி வாயெல்லாம் பல்லாக.. யூஸ் பண்ணிப் பாருங்க.. தெருவே மணக்கும்..என்னை நீங்க மறக்கவே மாட்டிங்க..ஆனா ஒண்ணு கிரீமை ஒருநாளைக்கு ஒரு நேரம்தான் முகத்திலே தடவணும்..என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் ஏன் என்று திடுக்கிட்டவாறு கேட்டார்.
அதற்கு சென்ட் வியாபாரி..அதுவா.. ஒரு நேரம் நீங்க முகத்திலே கிரீம் தடவினாலும் போதும் ஒருநாள் முழுவதும் மணக்கும். முகம் பளிச்சின்னு இருக்கும் என்றார்.
கண்ணாயிரம்..ஓ..அப்படியா..நானும் என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன் ..எவ்வளவு காசு என்றார். சென்ட் வியாபாரி..ஆயிரம்ரூபாய் கொடுங்க என்றார்.
கண்ணாயிரம் கொஞ்சம் குறைச்சு கொடுங்க என்க, சென்ட் வியாபாரி.. ஏங்க..சிங்கப் பூர் சரக்கு உங்களுக்கு குறைவாத்தான் கொடுத்திருக்கேன்.. போனா கிடைக்காது.. ஏக டிமாண்டு..நீங்க விரும்பி கேட்கிறதால.. இருநூறு ரூபாய் குறைச்சி தந்திருக்கிறேன் வேணுமா..வேண்டாமா வெளியிலே மூவாயிரத்துக்கு வாங்க ஆளிருக்கு என்றார்.
கண்ணாயிரம் சரி..சரி..விட்டா கிடைக்காது.. இருநூறு ரூபாய் குறைச்சி கிடைக்கு என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொடுத்தார்.
ஷாம்பு பாட்டில், கிரீம்பாட்டில், பவுடர் டப்பா,ஷாம்பு பாடில் சென்ட் பாட்டில் என்று எண்ணி பையில் போட்டார்.
சென்ட் விற்பவர் சிரித்தபடியே..ஏங்க..சரக்கு நல்ல சரக்கு..அடுத்து நான் எப்போ வருவேன்னு தேடுவீங்க..அப்படியிருக்கும் சரக்கு. ஆனா ஒண்ணு.. கிரீமை ஒருநாளைக்கு ஒருதரம்தான் முகத்திலே பூசணும் சரியா என்றார்.
கண்ணாயிரம் அவரிடம் அதை ஏன் அழுத்திச் சொல்லுறீங்க என்று கேட்க..சென்ட் வியாபாரியோ..நீங்க ஒருநாளைக்கு மூணுதரவ கிரீம் தடவினா..சீக்கிரம் காலியாகிடுமுல்லா..அப்புறம் என்னை தேடி நீங்க காத்திருக்கணுமுல்லா அதான் சொன்னேன் என்றார்.
கண்ணாயிரம் விவரம் புரியாமல் நீங்க ரொம்ப தமாக்ஷ் பண்ணுறீங்க..என்று சிரிக்க சென்ட் விற்பவரோ….நன்றி என்று சொல்லியபடி சைக்கிளை வேகமாக வேறு திசையில் ஓட்டிச் சென்றார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.