பெண்களை கவர கண்ணாயிரம் மேக்கப்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min readKannayiram makeup to attract women/ comedy story/ Tabasukumar
22.7.2024
கண்ணாயிரம் இளமையாக மாற சென்ட் வியாபாரியிடம் குறைந்த விலையில் கிரீம்,சென்ட்,பவுடர்,ஷாம்பு எல்லாம் வாங்கினார். பூங்கொடியை அவரது அப்பா வீட்டுக்கு துரத்திவிட்டதால் கண்ணாயிரம் தனியாக வீட்டில் இருந்தார்.
அம்மா எங்கே போனா .. கோவிலுக்கு பாதயாத்திரை போயிருப்பாளோ.. எனக்கு கலியாணம் ஆக வேண்டி பாதயாத்திரை போயிருப்பா.. வயசான காலத்திலே பாதயாத்திரை தேவையா என்று நான் சத்தம் போடுவேன் என்று சொல்லாமல் போயிட்டாப்போல.. அதுக்காக வில்லங்கமா ஒரு பெண்ணை உதவிக்கு வச்சிட்டாப்போவது.. ச்சே.. நான் உஷாரான ஆள் என்பதாலே தப்பிச்சேன்.. இல்லைன்னா.. என் தலையில கட்டியிருப்பாங்க.. பூசனிக்கா மாதிரி இருக்குது அந்தப் பொண்ணு..ம். அது நமக்கு சரிப்பட்டு வருமா.. எங்க அம்மாவுக்கு விவஸ்தையேக் கிடையாது என்று கண்ணாயிரம் புலம்பினார்.
அப்போது எங்க அம்மா போட்டோ இங்கே மாட்டிவச்சிருந்தேனே.. எங்கேப் போச்சு…. யார் எடுத்து எங்கே வச்சா.. அந்த வம்புக்கார பொண்ணுதான் ஏதாவது பண்ணியிருக்கும்.. சொத்தை ஆட்டையைப் போட இப்படியா நாடகம் ஆடுறது.. நான் விடுவேனா
என்று தன்னைத்தானே புகழ்ந்துகொண்டார்.
சரி..அம்மா போட்டாவை எங்கே.. பீரோவில் ஒளிச்சி வச்சிட்டாளா என்றபடி கண்ணாயிரம் பீரோ பக்கம் சென்றார். சாவி எங்கே.. பீரோவுக்கு கீழேதான இருக்கும் என்றபடி பீரோவுக்கு கீழே தேடினார். ஆ..சாவி சிக்கிச்சு என்றபடி சாவி தூசியை துடைத்துவிட்டு பீரோவை சாவியால் திறந்தார்.
அப்பாட.. என்ன இவ்வளவு தூசி என்றவாறு பூ..பூ.. என்று ஊதினார். பழைய சேலைகள் குவிந்திருந்தது. அதை தள்ளிவிட்டுப் பார்த்தபோது பழைய போட்டோ ஒன்று இருந்தது..ஆ.. இதுதான் எங்க அம்மா சோலையம்மா படம்.. எவ்வளவு அழகாக இருக்காங்க.. இந்த போட்டோவை பீரோக்குள் வைத்து பூட்டினது யாரு.. இதன் மகிமை தெரியாதவங்க.. எங்க அம்மா பாதயாத்திரை போயிட்டுவந்து எங்கடா என் போட்டோன்னு கேட்டா என்ன பண்ணுறது. நல்ல வேளை யோசனை வந்துச்சு.. இல்லைன்னா சிக்கலாகி இருக்கும் என்றபடி போட்டோவை எடுத்துக்கொண்டு வந்தார்.
ஸ்டூல் போட்டு ஏறி நின்று வீட்டு முன் ஹாலில் உள்ள சுவரில் ஏற்கனவே அடிக்கப்பட்டிருந்த ஆணியில் படத்தைமாட்டினார்.
ஆ..எங்கம்மா..சோலையம்மா.. இப்பதான் நல்லாயிருக்கு என்று சொன்னார்.
சரி..ஒரு குளியல் போட்டுட்டு பஜாருக்குப் போயிட்டு வருவோம்..மாலை நேரம்..அழகாக இருக்கும். என்று நினைத்தவர் குளியல் அறைக்குள் புகுந்தார்.
துண்டு உடுத்தபடி குழாய் தண்ணீரை திறந்துவிட்டபடி அதன் கீழே இருந்து குளித்தார். உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தையர தையர தைய்யா என்று பாடியவாறு குளித்தார்.
சிங்கபூர் ஷாம்பு, சோப்பு நினைவுக்குவர, குளியலைறையை விட்டு வெளியேவந்து அவைகளை எடுத்துக்கொண்டு உள்ளே போனார்.
சிங்கப்பூர் ஷாம்பு பாட்டிலை திறந்தார். அடா..ஷாம்பே இவ்வளவு மணமா இருக்கே என்றபடி தலையில் தேய்க்க. .நுரையாக வந்தது. அடடே..நுரையா இது.. அருவி மாதிரி இருக்குதே.. கொடுத்த காசுக்கு வஞ்சகம் பண்ணலப்பா.. என்றவாறு குழாயடியில் இருந்து நீராடினார்.
பின்னர் சிங்கப்பூர் சோப்பை எடுத்து உடம்பில் தேய்த்தார். அடே..அடே..சிங்கப்பூர் வரைக்கும் வாசம் அடிக்கும் போலிருக்கே.. அய்.. சிங்கப்பூருன்னா சிங்கப்பூருதான்.. ஒரு முறை போயிட்டு வரணும்..என்றவாறு முகத்தை நன்றாகத் தேய்த்துக்குளித்தார்.
அப்பாட..இப்பதான் குளிர்ச்சியா இருக்கு.. முடி பஞ்சா பறக்கே..ரொம்ப அருமை என்று பெருமையாகச் சொன்னார்.
துண்டால் உடம்பை துடைத்துவிட்டு..கண்டாடி பக்கம் போனார். இந்த ஸ்கேன் எடுத்தவன் நம்ம முகத்தை கெடுத்துப்புட்டான். கிரீம் போட்டுதான் சரி பண்ணணும்..எங்கே அந்த கிரீம் என்று பாட்டிலை திறந்து கிரீமை கையில் கொட்டி .. ஆ..கம..கம..வாசம் என்றவாறு முகத்தில் பூசினார்.
ஆ.கொஞ்சம் பரவாயில்லை முகம்..கருப்பு கண்ணாடி போட்டா நச் என்று இருக்கும்..ம்..என் பேன்ட்.. சட்டை.. எங்கே..ச்சே. அயர்ன் பண்ணாம போடமுடியாது என்றவாறு அயர்ன் பாக்சை எடுத்து பேனட், சட்டையை தேய்த்தார்.
அட..அயர்ன் பண்ணுனா.. அதன் அழகே தனி..என்றவர் பேன்ட் ,சட்டையை போட்டார்.
முகத்தில் கருப்பு கண்ணாடியை மாட்டினார். மீண்டும் கண்ணாடியைப் பார்த்தார். முகம் திருப்தியாக இல்லை. என்ன சரியா இல்லையே..ஓ..பவுடரை மறந்துட்டேன்..அதான. .என்றவாறு சிங்கப்பூர் பவுடர் டப்பா மூடியைத் திருகி பவுடரை கையில் கொட்டி.. அப்படியே முகத்தில் அப்பினார்.
முகத்தை தட்டிக்கொடுத்தார்.ம்..இப்போ..முகம் இளமையாக இருக்கும்.. கண்ணாடியில் பாக்கலாமா..வேண்டாமா..இதில் என்ன சந்தேகம்..நல்லாத்தான் இருக்கும் என்றவர்.. ஆமா சென்ட் வாங்கினோமே..அதைப் பயன்படுத்த வேண்டாமா என்று நினைத்தார்.
சென்ட் பாட்டிலை எடுத்து உடம்பில்..உஷ்..உஷ் என்று அடித்துக்கொண்டார்..ஆ..சக்சஸ் என்று சொல்லியவாறு கதவை பூட்டிவிட்டு செருப்பு போட்டுக்கொண்டு பஜாரை நோக்கி நடந்தார்.
எல்லோரும் கண்ணாயிரத்தை வேடிக்கைப் பார்த்தனர்.அதை அறியாமல் கண்ணாயிரம் எல்லோரும் தன்னைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டு சிரித்தார்.
கல்லூரி பஸ் வரும் நேரம்..அந்த பஸ்நிறுத்தத்துக்கு சீக்கிரம் போகணும் என்று வேகமாக நடந்தார். கல்லூரி பஸ் வந்து நிற்க.. மாணவிகள் கலர்புல்லாக இறங்கி நடந்தார்கள்.
கண்ணாயிரம் அவர்கள் பார்க்கும்படியாக தலையை கோதியபடி ஸ்டைலாக நின்றார்.
மாணவிகள் நக்கலாக ஒருவருக்கொருவர் சிரித்தபடி கண்ணாயிரத்தைப் பார்த்தும் பார்க்காமல் சென்றனர்.
கண்ணாயிரத்துக்கு சப் என்றாகிவிட்டது.
கன்னிபொண்ணுக சுத்தி சுத்தி வருவாக என்று சென்ட்வியாபாரி சொன்னான். ஒண்ணும் சுத்தக்காணம..கிரீம் வேலை செய்யலையா என்று நினைத்தவருக்கு வியர்த்துக்கொட்டியது.
ச்சே..அப்படியெல்லாம் ஏமாத்த மாட்டாங்க..ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியதாயிற்றே..எப்படியும் தரமாகத்தான் இருக்கும் என்று நினைத்தார்.
அப்போது பெண்கள் கூட்டமாக வர..கண்ணாயிரம்..குமரி பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா.. என்று பாட..ஒரு பெண் செருப்பு பிஞ்சிரும் என்று எச்சரித்துவிட்டு செல்ல, கண்ணாயிரம் தன் கால் செருப்பைப் பார்த்தார். கொஞ்சம் பழசாத்தான் இருக்கு. பிஞ்சிரும் போலிருக்கு. நாளைக்கு மாத்திடணும் என்றவாறு செருப்புகடையை நோக்கி விரைந்தார்.
–வே.தபசுக்குமார்.புதுவை