கண்ணாயிரம் வாங்கிய லேடீஸ் செருப்பு/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min readKannanayiram’s bought ladies slipper/ comedy story/ Tabasukumar
4.8.2024
கண்ணாயிரம் பஸ் விபத்தில் பழைய நினைவுகளை மறந்ததால் தன்னை இருபது வயது இளைஞராகவே நினைத்துக்கொண்டார். அதனால் தனக்கு திருமணம் நடந்ததை மறந்து மனைவி பூங்கொடியை அவரது வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.சென்ட் வியாபாரியிடம் வாங்கிய கிரீமை முகத்தில் தடவிக்கொண்டு சென்ட் அடித்துக்கொண்டு முகத்தில் கண்ணாடியை மாட்டிக்கொண்டு பஸ்நிறுத்தம் சென்றார்.அங்கே வந்த பெண்களைப் பார்த்து குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா என்று பாடினார். கோபம் அடைந்த ஒரு பெண்..செருப்பு பிஞ்சிடும் என்று சொல்ல, கண்ணாயிரம் தனது பழைய செருப்பைப் பார்த்தார். அடடா..இதைப் போட்டுவிட்டுப் போனா பிய்யதான செய்யும் .. இதை கவனிக்க மறந்திட்டோமே..புது செருப்பு வாங்கிட வேண்டியதுதான் என்று செருப்பு கடையை நோக்கிச் சென்றார்.
கடை ஊழியர் என்ன வேணும் என்று கேட்க.. லேடிஸ் செருப்பு என்று கண்ணாயிரம் உளற, கடை ஊழியர்.. ஓ..உங்க ஒய்புக்கா என்று கேட்டார். கண்ணாயிரம் திடுக்கிட்டு.. என்ன என் ஒய்புக்கா.. எனக்கு இன்னும் கலியாணமே ஆகலை.. நான் கன்னி கழியாத கன்னிப்பையன் தெரியுமா என்று கேட்டார்.
கடை ஊழியர்..முகத்தை சுழித்துக்கொண்டு..நீங்க கன்னிப்பையனா என்று வியப்புடன் கேட்க, கண்ணாயிரம் கோபமாக, ஏங்க என்னைப் பார்த்தா தெரியலையா.. முகத்துக்கு சிங்கப்பூர் கிரீம் தடவியிருக்கேன்.. சென்ட் அடிச்சிருக்கேன்.. ஸ்டைலா கண்ணாடி போட்டிருக்கேன்.. நல்லா பாருங்க..எனக்கு இப்போ இருபது வயசு..புரிஞ்சுதா என்றார்.
கடை ஊழியர்..நீங்க சொல்லுறது சரி.. இருபது வயசுன்னு சொல்லுறீங்க.. ஆனா தலைமுடி ஆங்காங்கே வெள்ளையா இருக்கே என்க.. கண்ணாயிரம்..அதுவா அது.. ஸ்கேன் எடுத்ததால வந்தவினை.. முடி ஆங்காங்கே வெள்ளையா இருக்கு.. மற்றபடி என் முடி கருப்புதான் என்று சொன்னார்.
கடை ஊழியர்..சரி அது இருக்கட்டும். உங்களுக்கு லேடிஸ் செருப்புதான் வேணுமா என்று கேட்க, கண்ணாயிரம் டென்சனாகி.. எனக்கு எதுக்கு அது. நீங்க லேடிசுக்கு பிடிக்கிற மாதிரி செருப்பு தாங்க எனக்கு என்றார்.
கடை ஊழியர்..தலையை சொரிந்தபடி.. லேடிசுக்கு லேடிஸ் செருப்புதான் பிடிக்கும்.. இவர் லேடிஸ் செருப்பு கேட்கிறாரா இல்லை ஜென்ஸ் செருப்பு கேட்கிறாரா புரியலையே என்று விழித்தார்.
கண்ணாயிரம் அவரைப் பார்த்து..என்ன விழிக்கிறீங்க ..லேடீசுக்கு பிடிச்ச செருப்பை எடுங்க என்று அதட்ட.. கடை ஊழியர் பதட்டமானார்.
நமக்கு எதுக்கு வம்பு என்றவாறு லேடிஸ் செருப்பு வகைகளையும் ஜென்ஸ் செருப்பு வகைகளையும் எடுத்துப்போட்டார்.
கண்ணாயிரம்..ஆ..சத்தம் போட்டாத்தான் கதை நடக்குது..எப்படி விதவிதமா இருக்கு..செருப்பு என்று புகழ்ந்தார். செருப்பு குவியலில் வலது பக்க செருப்பாக லேடிஸ் செருப்பையும் இடது பக்க செருப்பாக ஜென்ஸ் செருப்பையும் எடுத்தார்.
இதைப் பார்த்த கடை ஊழியர்..ஏங்க.. ஏங்க..ஒண்ணு ஜென்ஸ் செருப்பா எடுங்க.. இல்லன்னா லேடிஸ் செருப்பா எடுங்க என்றார்.
கண்ணாயிரத்துக்கு புரியவில்லை.ஏங்க லேடிசுக்குப் பிடித்த செருப்பைத்தானே எடுத்துப் போட்டிங்க..பிறகு ஏன் கத்துறீங்க என்க கடை ஊழியருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
எதையும் எடுக்கட்டும். விளக்கம் சொல்லும் முன் நம் தலை சுத்திடும் என்று நினைத்தபடி அமைதியாக இருந்தார்.
கண்ணாயிரம் லேடிஸ் செருப்பை காலில் போட முயன்றார். முடியவில்லை.என்னப்பா..செருப்பு அழகா இருக்கு..ஆனா காலுக்குள் போகமாட்டேங்குது.. என்ன கடை வச்சிருக்குங்க.. என்று விரட்ட, கடை ஊழியர்.. ஏங்க பெரியசைசு செருப்பு நாளைக்கு வரும்.. வந்து வாங்கிக்கீங்க என்று சொல்ல, கண்ணாயிரம்..அது சரி வராது.. நாளைக்கு காலையிலே நான் காலில் போட்டுக்கொண்டு போக வேண்டுமே என்க..கடை ஊழியர் ..உஸ் என்றபடி வேறு செருப்பு பாருங்க என்றார்.
கண்ணாயிரம் தேடிப்பிடித்து லேடிஸ் செருப்பாக எடுத்தார். அழகா இருக்கே..அலங்காரம் பண்ணியிருக்க என்றபடி போட்டுப் பார்க்க முயன்றார்.
முக்கால்வாசி கால் உள்ளே போனது.. மீதி கால் வெளியே இருந்தது.
என்ன இப்படியிருக்க என்க..கடை ஊழியரோ..இது புதுமாடல் செருப்பு..இப்படித்தான் இருக்கும். இப்போ இது பேஷன் என்க கண்ணாயிரம் அப்படியா..பெண்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டார். கடை ஊழியரோ ம்..பெண்கள் மனசுக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்என்று சொல்ல கண்ணாயிரம் வாயெல்லாம் பல்லானார்.
கடை ஊழியரும்..ம் அழகாக இருக்கு..வீட்டுக்கு கொண்டு போயிட்டு காலையிலே காலை நல்லா கழுவிட்டுப் போடுங்க சூப்பராக இருக்கும் என்று ஒரு பார்சலாக செருப்புகளை கட்டிக் கொடுத்தார்.
கண்ணாயிரம் புன்னகை பொங்க பணத்தை கொடுத்துவிட்டு செருப்பு பார்சலை வாங்கி வேகமாக செருப்பு பார்சலுடன் நடந்தார்.காலில் போட்டிருந்த பழைய செருப்பு..படார் என்று அறுந்தது.அடடா…என்ன செய்ய என்றபடி நின்றார்.
-வே.தபசுக்குமார்.புதுவை